குடும்பனின் பார்வையில்
✒️நிலைக்கதவைப் பூட்டிவிட்டுச் சாவியை நிலை விளிம்பிலேயே வைத்து விட்டுப்போன காலம் இருந்தது உண்மைதான்.
"உட்பைக்கூடவா திருடுவாங்கனு கடைக்குள்ள வைக்கிறதில்ல அது அந்தக் காலம்..."
" இப்ப விக்கிற விலையுல வெளியே வச்சா வச்ச இடம் தான் மிச்சம் இருக்கும் என்பது இந்தக் காலம்."
என்றொரு நாட்டுப்புறப்பாடல் என் நினைவுக்கு வருகிறது.
அறம் வற்றிப்போனதைத் தினமும் கண்கூடாகக் காண்கிறோம்.
பக்கத்துவீட்டுக்காரன் பகைகாரனாக இருப்பான்.
அவன் வீட்டு நெல்பட்டறையை மாடு தின்றால் பகையாளி என்றும் பாராமல் அடுத்தவர்களிடம் கூப்பிட்டு மாட்டை விரட்டச்சொன்ன காலத்தைப் பார்த்திருக்கிறேன்.
பகைகாரனின் பிள்ளை சேராதவனோடு சேர்ந்து தவறு செய்வதைப் பார்த்தால் அதை அவனது பெற்றோரிடம் தெரிவிக்கச் சொல்லிய அறம் இருந்தது இந்தப் பூமியில்தான்.
இதெல்லாம் ஏதோ நூறு வருடங்களுக்கு முன்பு வழக்கில் இருந்தது அல்ல.
முப்பது வருடங்களுக்கு முன்புவரை தமிழகக் கிராமங்களில் நடைமுறையில் இருந்தவைதான்..
மூத்தவர்களைக் கண்டால் கையில் உள்ள பீடி சிகரெட்டுகளை மறைத்தார்கள்..
மது அருந்துவதை கண்ணியக் குறைவாகக் கருதினார்கள்..
பெற்றவர்களை விடவும் உறவுகளுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் மரியாதையாகப் பயந்தார்கள்..
தான் கெட்டாலும் தன் தங்கை கெடக்கூடாது என்ற பழமொழிகள் புழக்கத்தில் இருந்தன..
மாமாவை அம்மான்/மாமன் என்றும் அத்தையை மாமி என்றும் அழைக்கும் வழக்கம் இருந்தது.
சமூகங்களைக் கடந்தும் உறவு சொல்லி அதன் மகத்துவத்தோடு வாழ்ந்தார்கள்..
சிறுசிறு தவறுகள் கூட முறை தவறாமல்தான் நடந்தன..
"கலப்புத் திருமணமும் காதல் திருமணமும் ஊக்குவிக்கப்பட்ட பிறகு எல்லாமும் கேள்விக்குள்ளாகிப்போனது.."
கிராமங்களில் சாதிய வேறுபாடுகள் இருந்தாலும் கண்ணியக் குறைபாடுகள் இல்லாத இடங்களில் வாழ்வியல் சிறப்பாகத்தான் இருக்கிறது..
படிப்பறிவு இல்லாத சமூகத்தில் பண்பாளர்கள் இருந்தார்கள்..
படித்தவர்கள் பெருகிய சமூகத்தில் திருடர்கள் பெருகிவிட்டார்கள்..
அதன் நீட்சிதான் வாச்சாத்தி மலைக்கிராமத்தில் புகுந்த இரு நூற்றுக்கு மேற்பட்ட அரசு அதிகாரிகள் பதினெட்டுப் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்தார்கள்..
ஒழுக்கமில்லாத கல்வியால் அறிவுள்ள பிசாசுகள் உருவாகிறார்கள் என்பதை மறுக்க முடியவில்லை.
©️✒️யாழி
30.09.2023
Comments
Post a Comment