பள்ளர் பண்பாட்டில் வடிகாதும், அணிகலன்களும் தமிழர் நாகரிகம் உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்றாகும். கலை, பண்பாடு, அழகியல் உணர்வு, வாழ்க்கை முறை ஆகிய அனைத்திலும் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றவர்கள் தமிழர்கள். தொல் பழங்காலம் முதலே தங்களது அழகுணர்வையும் கலைநயத்தையும் அணிகலன்கள் வாயிலாக வெளிப்படுத்தி வந்துள்ளனர். இயற்கையை வாழ்வின் அடிப்படையாகக் கொண்ட தமிழர்கள் முதற்கட்ட அணிகலன்களாக கற்கள், பூக்கள், கொடிகள், ஓலைகள் போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தினர். பின்னர் உலோகங்கள், முத்துக்கள், மணிக்கற்கள் ஆகியவற்றின் பயன்பாடு வளர்ந்ததன் மூலம் அணிகலன்கள் கலைப்பொருட்களாகவும் சமூக அடையாளங்களாகவும் மாறின. செவியும் தமிழரின் அழகியல் பார்வையும் மனித உடலில் புலனுறுப்புகளுக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டது. அவற்றுள் செவி சிறப்பானதாகக் கருதப்பட்டது. இதனைத் திருவள்ளுவர், “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை” என்று போற்றுகிறார். சங்க இலக்கியங்களுக்கு முன்னோடியான தொல்காப்பியத்தில் காணப்படும் “காதொன்று களைதல்” என்ற குறிப்பு, தமிழர்கள் காதணிகளை அணிந்திருந்த பழமையான மரபை உணர...