குடும்பனின் பார்வையில்
புலித்தடம் பதியக் காத்திருக்கும் நிலம். கடல்சூழ் வனத்தைப் போர்த்தி விரிந்து கிடந்த நிலப்புழுதியில் எமையொத்தச் சாயலுடன் முகம் காட்டி எம் கிட்டத்திலேயே சூழ்கொண்டு முளைத்துக் கிளைத்திருந்தது குலக்கொடியொன்று. ஈரநெப்பு கசிந்த மண்ணை இறுகப் பற்றிக்கொண்ட வோ்கள் ஆழஆழப் பதிந்ததில் நிறைந்து செழித்து வளம் கொழித்தன மனிதப் பச்சையங்கள். பஃறுளியும் குமரிக்கோடுமாய் மூதாதை நிலம் செழித்துப் பரவியிருந்தது. காலமும் கடல்கோளுமான ஊழ்வினை உப்புநீர் தெளித்து அங்குமிங்குமாய் வாழத் தள்ளிவிட்டது. பரிணாமக் காலங்களை உறிஞ்சியெடுத்த உயிரினச் சுழற்சியில் இங்கொன்றும் அங்கொன்றுமாய் விழுந்த வித்துகள் சிம்படித்துக் கிளைத்திருந்தன. கிளை பரப்பிச் சிலிர்த்து சிரித்திருந்த பேரினத்திற்கு தாய் மடிகள் இரண்டிருந்தன. இரு நிலமானாலும் ஓரினம் என்பதாக காலம் இசைத்த நெடும்பாடல் உலகத்தின் காதுகளில் நிரம்பி வழிந்திருந்தது. பெருமரத்தின் வித்துகள் காற்றில் பரவி நிலத்தை நிறைத்தன. விழுந்த த...