குடும்பனின் பார்வையில்

 பழந்தமிழர்கள் மழையைக் கொடுத்து வளமையைப் பெருக்கும் இந்திரனது செயலுக்கு நன்றி பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் அறுவடைக் காலம் முடிந்து வரும் இளவேனில் காலத்தில்( பங்குனி) “ இந்திர விழா” எடுத்துச் சிற்பிப்பது தமிழர்களின் பாரம்பரியமான திருவிழாவாகும். 

பல நாள்கள் நடக்கும் இத்திருவிழா பற்றிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. சோழநாடு சோறுடைத்து என்பதாலும் காவிரியில் வற்றாத வெள்ளம் வருவதாலும் சோழர்கள் இந்திரவிழாவைச் சிறந்த முறையில் நடத்திக் கொண்டாடினர்.

 அப்படியானால் பாண்டிய நாட்டில் இந்திரவிழா கொண்டாடப் படவில்லையா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. இலக்கியச் சான்றுகளும் விரிவாக இல்லை.

 ஆனாலும் பாண்டியர்களும் இந்திரவிழா கொண்டாடியதை மறைமுகமாகக் குறிப்பிடும் பாடல் வரிகளும் மதுரையில் இந்திரனுக்குக் கோவில் இருந்ததையும் இப்பாடல் வரிகள் உறுதி செய்கின்றன. மதுரைக் காஞ்சி பாடிய மாங்குடி மருதனார் பாடல் வரிகளும், எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடிய அகநானூறு 149 வது பாட்டின் வரிகளும் நமக்குத் தெரியப்படுத்துகின்றன. 

இதைவிட இன்றியமையாத வரலாற்றுச் செய்தி என்னவெனில், இன்று திருப்பரங்குன்றம் என்று அழைக்கப்படும் முருகன் இருக்கும் கோவில் சங்க காலத்தில் இந்திரன் கோவிலாகவே வழிப்படப்பட்டும் , இந்திரவிழாவும் இங்கேதான் நடந்தது என்பதையும் அகநானூறு பாடல் நமக்கு உணர்த்துகிறது. 

இப்போது உள்ள முருகன் கோவில் கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றியுள்ளது என்பதும் ஓர் உண்மைச் செய்தியாகும். மதுரைக் காஞ்சியில் நெடியோன் இருப்பது பற்றிய பாடல் வரிகள் ,

“ நீரு நிலனுந் தீயும் வளியும்

மாக விசும்போ டைந்துட னியற்றிய

மழுவா னெடியோன் றலைவனாக

மாசற விளங்கிய யாக்கையர்”- மது- 453-456

என்ற பாடல் வரிகளில் நெடியோன் கோவில் இருந்ததைக் காட்டுகிறது. 

“ நெடுநல் யானை அடுபோர்ச் செழியன்

கொடிநுடங்கு மறுகில் கூடல் குடாஅது

பல்பொறி மஞ்ஞை வெல்கொடி உயரிய 

ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து

வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து”- அகம்-149-13-17

வரிகளில் ஒடியா விழவு என்றது இடைபடாமல் தொடர்ந்து நடக்கும் விழா என்பதும், கூடல் குடாஅது என்பதற்கு. மதுரை நகரின் மேற்கில் அமைந்த பரங்குன்று என்பதும் , நெடியோன் இந்திரனையே சங்க காலத்தில் குறித்த சொல் என்பதும், பிற்காலத்தில் மாலிய சமயம் தோன்றிய போது நெடியோன் என்பது திருமாலைக் குறித்த சொல்லாக மாறியது. ஆனால் சங்க காலத்தில் இந்திரன் தவிர வேறு கடவுளர் வணக்கம் இருக்கவில்லையாதலால் திருப்பரங்குன்றமானது சங்க காலத்தில் இந்திரனின் கோட்டமாகவே இருந்திருக்க வேண்டும் என்பது இவ்வகநானூற்றுப் பாடல் மூலம் உறுதியாகச் சொல்லலாம். 

மஞ்ஞை- சிகி- மலை என்றொரு பொருள் உண்டு.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்