குடும்பனின் அவதானிப்பில்

 குடும்பனின் அவதானிப்பில்

30.9.2023


✒️பாஜக மீது வெறுப்பை உமிழும் கூட்டங்கள் 1992இல் வாச்சாத்தி கிராம மலைவாழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்களை அறிந்து கொள்வது அவசியம்..


தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமம்  மலையடிவாரத்தில் அமைந்துள்ளது.


காடுகள் சூழ்ந்த பகுதியாக இருப்பதால் காடுகளில் உள்ள சந்தன மரங்களை அரசியல்வாதிகளும், வனத்துறையினரும் கூட்டுச் சேர்ந்து கடத்தி விற்றனர்..


மரங்களை வெட்டவும், கூலி வேலை செய்யவும் பயன்படுத்தப்பட்ட மலைக்கிராம மக்கள் மீது சந்தன மரங்களைத் திருடிவிற்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.


சந்தன மரங்களை வீடுகளில் பதுக்கிவைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி மாவட்ட வருவாய்த்துறை, காவல்துறை, வனத்துறை ஆகிய மூன்று துறைகளும் ஒன்றிணைந்து 1992 ஜூன் மாதம் 20ஆம் நாள் கிராமத்தில் புகுந்து அத்துமீறி குடிசைகளை அடித்து நொறுக்கினர்.


ஆண்களும் பெண்களும் குழந்தைகளை அள்ளிக்கொண்டு மலைக்காடுகளில் ஓடி ஒளிந்துகொண்டார்கள்.


ஆனாலும் பதினெட்டுப் பெண்களை அதிகாரிகள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள்.


கூட்டுப் பாலியல் கொடூரத்தில் 13 வயதுச் சிறுமியும், எட்டு மாத கர்ப்பிணியும் அடங்குவர் என்பதுதான் வேதனையின் உச்சம்.


தாக்குதல் வேட்டை மறுநாளும் தொடர்ந்தது.

மாதக்கணக்கில் மலையில் பதுங்கிய ஒரு கர்ப்பிணிக்கு தாமாகவே எந்த மருத்துவ உதவியுமின்றி பிரசவம் கூட நடந்தது.


குற்றவாளிகள் சாதாரண மக்கள் அல்ல .அனைவரும் அரசு அதிகாரிகள்.


அவர்களில் நான்கு பேர் IFS அதிகாரிகள் என்பது கூடுதல் சிறப்பு.


வாச்சாத்தியில் நடந்த கொடுமைகள் வெளி உலகுக்கு வரவே பல மாதங்கள் ஆகின.


அப்போதைய ஆளும்கட்சியான அதிமுக நடந்த கொடூரத்தைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவே இல்லை.


வனத்துறை மந்திரி செங்கோட்டையன் வாச்சாத்தி என்ற கிராமம் மலை மீது உள்ளது. அங்கு அப்படியான வெறியாட்டம் நடக்க வாய்ப்பே இல்லை என மறுதலித்தார் என்கிறார் வழக்கை நடத்திய வழக்குரைஞர்.


ஆனால் வாச்சாத்திகிராமம் மலை அடிவாரத்தில் சமதளப்பகுதியில்தான் அமைந்துள்ளது. 


முதன்முதலில் கம்யூனிஸ்ட் கட்சிதான் நடந்த கொடூரத்தை வெளியில் கொண்டுவந்தது.


உயர் நீதிமன்றத்தில் வழங்குத்தொடர்ந்தது. அதுவும் விசாரணைக்கு உகந்தது இல்லை என மறுதலித்துத் தள்ளுபடி செய்யப்பட்டது.


அதன் பிறகு உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதன் தலையீட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.


சிபிஐ விசாரணையில் வாச்சாத்தி சம்பவத்தின் கொடூரம் வெளியே வந்தது.


ஆளும்தரப்பின் இடையூறுகளை மீறி பல்வேறு தடைகளைக் கடந்து 1995இல் சிபிஐ 269 பேரைக் குற்றவாளிகளாக அடையாளம் கண்டது.


குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 54 பேர் இறந்துவிடவே மீதமுள்ள 215 பேரை

தருமபுரி நீதிமன்றம் 2011இல் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வழங்கியது..


குற்றவாளிகளை அடையாளங்காட்ட அடையாள அணிவகுப்புகள் நடத்தப்பட்டன.


ஒரு நபருக்கு நான்கு பேர் வீதம் 269 பேருக்குமாக 1076 பேர் வரிசைப்படுத்தப்பட்டார்கள்..


விசாரணைக்காக பிரத்யேக கட்டடம் கட்டப்பட்டது.


குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஏறத்தாள முப்பது ஆண்டுகள் கழித்து பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்குச் சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி அவர்களின் அவலத்திற்கு மருந்து தந்துள்ளது.

குற்றமற்ற ஏழை அபலைகளான மலைவாழ் மக்கள் மீது குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து அரசு உதவியுடன் மாவட்ட நிருவாகம், காவல்துறை, வனத்துறைகள் இணைந்து ஒரு கிராமத்தையே சூறையாடியதுடன் பதினெட்டுப் பெண்களை அழைத்து வல்லுறவு செய்தது..


இதுவரை மாநில அரசாங்கம் உண்மைக் குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டுகள் பதியாமல் இருப்பது போன்றவற்றை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது..

அப்போதைய மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர். வனத்துறை அதிகாரி என மூவர் மீதும் நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும்தான் குற்றத்திற்கு உடந்தை என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆனால் அரசு உண்மையான குற்றவாளிகளைக் காப்பாற்றியது.

பாதிக்கப்பட்டவர்களுக்குப் பத்து லட்சம் நிவாரணம், அரசு வேலைவாய்ப்பு வழங்கப் பரிந்துரைத்த நீதிமன்றத்தைப் பாராட்டும் அதேவேளை நீதி வழங்க இவ்வளவு காலம் எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.


இன்றைக்கு முப்பது வயதிற்குக் குறைவானவர்களுக்கு வாச்சாத்தி கிராம மக்கள் மீது அரசு ஏவிய வெறியாட்டத்தின் கொடூரங்கள் கதைகளாகத் தெரியலாம்..


ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அவ்வப்போது சக குடிகளும் அரசுகளும் நடத்தும் தாக்குதல்கள் இன்றும் நின்றபாடில்லை..


கொடியங்குளம் தாக்கப்பட்ட சம்பவமும் இதற்கு நிகரானதுதான்.


திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் நடந்த படு பயங்கரச் சம்பவங்கள் நீதிவிசாரணையின் பெயரால் நீண்டகாலம் நீட்டிக்கப்பட்டு சம்பவத்தின் வரலாறு  ஒரு தலைமுறைக்கே தெரியாமல் போய்விடுகிறது..


வேதனையும் வலியும் அலைக்கழிப்புகளும் உதாசீனங்களும் வாச்சாத்தி மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களுக்குமானதுதான்.

பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மலைக்கிராம மக்களுக்காக நீதிகேட்டு

வழக்கை தொடர்ந்து நடத்திய மாமனிதர்களுக்கு நன்றி தெரிவிப்போம்.


©️✒️யாழி

30.09.2023.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்