குடும்பனின் தேடலில்

குடும்பனின் வரலாற்று தேவையில்

8.11.2023

 ✒️இனியும் குருட்டாம்போக்கில்  கல்லெறிவதைத் தவிர்ப்போம்..


அரசியலைத் தவிர்க்க இயலாதுதான்!.


ஆனால் நம் தனிப்பட்ட விருப்பத்தை விட சமூகத்திற்கு இப்போதைக்கு  எந்த அரசியல் சாத்தியப்படும் என்று யோசித்தால் நல்லது.


நாமெல்லாம் அறுபது வயதைக் கடந்தவர்கள்..


ஏதாவது ஒரு அரசியல் சித்தாந்தத்தில் ஊறிப்போயிருப்போம்.


ஆனால் இப்போது பட்டியல் சாதிப் பிரிவிலிருந்து  வெளியேறி வேறு சமூக வகைப்பாட்டிற்கு மாற விரும்புகிறோம்.


இந்த மையக்கருத்தை முதன்மையாக வைத்து அரசியலை அணுகவேண்டும் என்பதுதான் பலரது அபிப்ராயம்.


காலம் நெடுக காங்கிரஸ், திராவிடக் கட்சிகளால் ஒரு பெரிய மாற்றத்தை நம் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் கண்டடையவில்லை.


கீழ்வெண்மணி தொடங்கி கடந்த வாரம் நடந்த  திருநெல்வேலியில் மூத்திரம் பேஞ்ச சம்பவம் வரை சாபக்கேடுகள்தான்.


தேவேந்திரகுல வேளாளர் என்று பெயராணை பெறுவதற்கு எந்த அரசியல் கட்சியும் நமக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.


பாஜக தவிர..


அந்த ஒரு ஆதரவுக்காக பாஜகவை ஆதரிக்கிறேன்..


மதவாதம் பேசாதவர்கள் இங்கே யாருமில்லை..


வெவ்வேறு பெயர்களில் இங்கே மதவாத அரசியல் நடைபெறுகிறது..


ஆனால் இந்துத்துவாவை மட்டும் வெறுக்கிறோம்..


வேளாண் குடிகளான குடும்பர்களை ஆதி திராவிடர் என்று அடையாளப்படுத்தியதும்,

 தாமிரபரணியில் மூழ்கடித்துக் கொன்றதும், 

கொடியங்குளத்தில் சூறையாடியதும்,

பரமக்குடியில் ஆறு தேவேந்திரர்களைச் சுட்டுக்கொன்றதும் திராவிட அரசுகளின் ஆட்சிகளில் தான்..


அதையெல்லாம் மறந்துவிடுகிறோம்..


நமக்கு யார் ஆதரவு தருகிறார்களோ அவர்களை நாமும் ஆதரிப்போம் என்பதுதான் சமயோசித அரசியல்..


இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மாறுபட்ட கருத்துகள் கொண்ட கட்சிகள் இப்போது அனைத்தையும் மறந்து தேர்தல் அரசியலில் ஆதரவு தருகிறார்கள்..


இதையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்..


சமூகத்தின் தேவைக்காக நாம் நமக்கான தனிப்பட்ட விருப்பு அரசியலைக் கொஞ்சம் ஒதுக்கிவைக்கத் தான் வேண்டும்..


முடியாதபட்சத்தில் பொதுத்தளங்களிலாவது எதிர்ப்புகளைப் பதிவிடாமல் இருக்கலாம்..


ஒத்த கருத்துக்குத்தான் போராடுகிறோம்.


உறவுகளாய் ஒன்றிணைந்து கருத்து முரண்பட்டுப் பிரிவினைவாதம் பேசுவது நல்லதல்ல..


நான் கடந்த தேர்தலுக்கு முன்புவரை திமுகவிற்கு மட்டுமே வாக்களித்துள்ளேன்..


ஏன் என்று எனக்கே தெரியவில்லை.. 

1982இல் கல்லூரிகளில் படிக்கிறபோது எம் ஜி ஆர் மீது எதிர்ப்பையும், கலைஞரின் பேச்சு மீது பிரியத்தையும் விதைத்தனர்.


அதன் தாக்கம்தான் அந்த நிலைப்பாட்டிற்குக் காரணம்.


கொஞ்ச காலம் தஞ்சையில் நடந்த ஆண்டான்-அடிமை முறையையும் அதன் விளைவுகளையும், 

சாணிப்பால் சவுக்கடிகளையும்,

கீழவெண்மணி படுகொலையையும் பற்றி அறிந்த பிறகு கம்யூனிசத்தின் மீது விருப்பு ஏற்பட்டது..


அதற்கு முன்பு தந்தைவழியில் காங்கிரஸ் ஆதரவு இருந்தது..


1990களுக்குப் பிறகுதான் எனது இருபத்தாறாவது வயதில் சமூகத்தையும் அரசியலையும் ஒப்பிட்டுப்பார்க்கிற புத்தி வந்தது..


 மள்ளர் சமூகம் தனது மாண்பை இழந்த வரலாற்றை இரண்டாயிரங்களில் புரிந்து சமூகத்தின் வரலாற்றுக்கு மீட்டுருவாக்கம் தேவை என்பதை ஆதரிக்கத் தொடங்கினேன்..


இழந்துபோன பெருமித வரலாறுகளை அறிய அறிய வாசிப்பும் ,தேடலும் வீறு கொண்டன.


ஓர் அரசியல் சித்தாந்தம் என் சமூக அடையாளத்தை அழிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதற்குள் ஐம்பது வயதைக் கடந்துவிட்டேன்..


ஒரு சமூகம் உயிர்ப்போடு வாழ்வதற்கு அதன் பாரம்பரியமும் கலாச்சாரங்களும் முக்கியம்..


தேரோட்டங்களும், 

மஞ்சுவிரட்டுகளும்,

முளைப்பாரிகளும்,

நல்லேர் கட்டுதலும்,

தாலி கட்டி குடும்பம் நடத்திச் சம்சாரியாக வாழ்வதெல்லாம் 

தமிழ் மண்ணின் அடையாளங்கள்..


யார் தமிழர் என்ற கேள்வியை முன்வைத்துத்தான் இனி அரசியல் களம் அமையும்..


அப்போது தேவேந்திர குல வேளாளர்கள் விழித்துக்கொண்டு முன்கையை முதலில் தூக்க வேண்டும்.


இல்லையேல் நாமும் பந்தியில் அமரலாம் அன்னம் வந்து சேராது..


அரசியல் கட்சிகளை ஆதரிப்பதில் நாமும் விவேகம் காட்டத்தான் வேணும்.


பாம்பு திங்கிற ஊரில் வாழும்போது வாலாவது, தலையாவது, மு(க)ண்டமாவது எதையாவது ஒன்றைப் பறித்துவிடு..


தின்பதா இல்லை தூரப்போடுவதா என்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்..


©️✒️மடைக்குடும்பர்,

08.11.2023

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்