குடும்பனின் பழக்க வழக்கத்தில்

 ✒️தேவேந்திரகுல வேளாளர்களிடம்

 அருகிவரும் பழக்கவழக்கங்கள்..


அருமை நண்பர் நாமக்கல் திரு. கை. பெரியசாமி அவர்கள் எழுதிய செய்தி அனுதினமும் திருக்குறள் மாதிரி வாழ்க்கைக்கு ஒத்துப்போகிறது..


நாம் தேவேந்திரகுல வேளாளர் என்று அரசாணை பெற்றபிறகு நமது சமூகத்தின் மதிப்பும், மனநிலையும் மாறியிருக்கிறது..


நேற்று காரைக்குடியிலிருந்து ஒரு மாற்றுச்சமூகப் பேராசிரியர் என்னை அழைத்து நம் பகுதியில் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் இருக்கிறதா என்று கேட்டார்.


நான் பள்ளன் என்று தான் அறிந்திருக்கிறார்.


தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயர் மாற்றம் குறித்து அவர் அறியவில்லை போலும்..


நாங்கள்தான் தேவேந்திரகுல வேளாளர் சமூகம் என்று கூறி விபரம் கேட்டேன்.


என்னுடன் பணியாற்றும் நண்பரின் தம்பிக்கு இந்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தில் மணப்பெண் தேவைப்படுகிறார் என்றார்.


விசாரியுங்கள் என்றார்.. 

மணமகன் தேவகோட்டைப்பகுதியைச் சேர்ந்தவர்தான்.


இதை இங்கே ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் முன்பெல்லாம் எஸ்சி என்ற அடையாளத்தைப் பதிவு செய்து பிறகு பள்ளரா? பறையரா? இரண்டும் வேறுவேறா? என்ற கேள்விகளுக்கு விளக்கம் சொல்லவேண்டியிருந்தது.


இப்போது தேவேந்திரகுல வேளாளர் என்ற அடையாளம் நம்மை யார் என்று அடையாளப்படுத்தியிருக்கிறது.


கூலிக்கு மாரடிக்கிற ஒரு சில கூட்டம் எஸ்சி, தாழ்த்தப்பட்டவர், தலித் என்று இன்னமும் கூவித் திரிகிறார்கள்..


பண்பாட்டை

 இழக்கலாமா...⁉️


நேற்று ஒரு எண்ணெய் முழுக்கு விசேடத்திற்குச் சென்றிருந்தேன்..


அதாவது இறந்த உடலை அடக்கம் செய்த அன்று குழி வாசலில் உறவுமுறை அமர்ந்து என்றைக்கு எண்ணெய் தொட்டு வைத்துக்கொள்வது/எண்ணெய் முழுக்கு என்று தேதி குறிப்பார்கள். அதற்குக் கட்டைத் தலைக் கூட்டம் என்று பெயர்.


கிறிஸ்தவர்களில் மூன்றாம் நாள் கல்லறையை மெழுகி சிலுவைக்கம்பு வைப்பதும் வழக்கம்..


இப்போதுதான் மரச்சட்டம், கல், கிரானைட் எல்லாம் வந்துவிட்டது.


ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வேப்பங்கம்புகளை, வெட்டி நார் கொண்டு கட்டியோ, ஆணிகொண்டு அடித்தோ சிலுவை செய்வார்கள்..


இந்து சமயச்சடங்குகளைப் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியவில்லை. மன்னிக்கவும்.


ஆனால் இந்துசமயத்தைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் வீடுகளில் உள்ள பழக்கங்கள்தான் கிறிஸ்தவ தேவேந்திரகுல வேளாளர் வீடுகளிலும் அணுசரிக்கப்படுகின்றன.


தலைமாட்டில் பித்தளைப்படி/மரக்கா யில் நெல் நிரப்பி விளக்கு மாற்றுச் சீவில் வெற்றிலையைச் செருகி நட்டுவைப்பதும், நல்லெண்ணெய் விளக்கேற்றுவதும் முதலானவை ..


ஒருவர் இறந்த உடன் முதல்முறை குளிப்பாட்டுவார்கள்.


அப்போது தான் கால்கட்டைவிரல்களை இணைத்துக்கட்டுவது, வாயைக் கட்டுவது முழுங்கால்களை இணைத்துக்கட்டுவது.

கைகளை நெஞ்சில் வணங்கும் விதத்தில் வைத்துக்கட்டுவது போன்றன நடைபெறும்.

இரண்டாவது குளிப்பாட்டுதல்

அடக்கத்திற்கு முன்பாக நீர் மாலை எடுத்து வந்து உடலைக் குளிப்பாட்டி உடை மாற்றும் போது பெண்கள் என்றால் சிவப்புத்துணியாலும், ஆண்கள் என்றால் வெள்ளைத் துணியாலும் சுற்றிக் கட்டுவார்கள்..


இந்தத் துணிக்குத் தோம்புத்துணி என்று பெயர்..


இங்கே முக்கியமாகக் கவனிக்க வேண்டியது உடலைச்சுற்றத்துணியை எடுக்கும் போது தலையில் சுற்றிக் கட்டும் அளவுக்குத் துணி கிழிக்கப்பட்ட பிறகுதான் (இரு சாண் அளவு) மீதத் துணியால் உடலைச்சுற்றிக் கட்டுவார்கள்..


கிழித்து வைத்த தோம்புத்துணி பத்திரமாக வீட்டில் பாதுகாக்கப்படும்.


அந்தத் துணிதான் எண்ணை முழுக்கன்று ஆண்பிள்ளைகள் சபையில் அமர வைத்து எண்ணெய் தேய்த்துக்குளித்து முடித்து வந்து மறுபடி சபையில் உட்காரவைத்து ஏற்கனவே கிழித்து வைத்திருந்த தோம்புத்துணியை வாங்கி ஊர்க் குடும்பர் சபையை வணங்கிவிட்டு இறந்தவரின் பிள்ளையின் தலையில் கட்டுவார் அதற்குத்தான் உருமால் கட்டுதல் என்று பெயர்.


முன்னுரிமையில் பிரச்சனை....


உருமாக்கட்டுவதற்கு யாருக்கு முன்னுரிமை எனும் பிரச்சனை பல இடங்களில் ஏற்பட்டுள்ளன.


முதலில் ஊர்க் குடும்பன் தான் உருமாக்கட்டுவார்.


அவருக்குப் பிறகு சபையில் இருப்பவருக்கு யார் பெண் கொடுத்தாரோ அவர்கள்தான் கட்டுவார்கள்.


அவரைத் தொடர்ந்து அவரது பங்காளிகள் உருமாக்கட்டுவார்கள்.


நேற்று ஒரு நிகழ்வுக்குச் சென்றிருந்தேன்.

தோம்பு கிழிக்கும் பழக்கம் எங்கள் ஊரில் விட்டுவிட்டோம் என்றார்கள்..


வருத்தமாக இருந்தது.


உருமால் கட்டுவதில் யாருக்கு முன்னுரிமை என்பதில் சிக்கல் வந்ததால்தான் கோயில் உருமா என்ற பழக்கம் வந்தது.


அதாவது குடும்பர் மட்டும் உருமாக்கட்டுவார்.


கட்டிய பிறகு அவரது துண்டை எடுத்து அவரது தலையில் துண்டைக்கட்டிக்கொண்டு "நானும் கட்டிக்கிட்டேன். நீங்களும் கட்டிக்கோங்க" என்பார். சபையில் இருப்பவர்கள் அவரவர் துண்டை எடுத்து அவரவர் தலையில் கட்டி அவிழ்ப்பர்.


உறவுகள் துணிமணிகள் எடுத்துவருவதை தேவைக்காரர்களிடம் வழங்கியபின் அசைவ உணவு வழங்கப்படும்..


இப்போது சபையில் வைத்து துக்கக்காரருக்கு மோதிரம் அணியும் வழக்கம் ஒரு சில இடங்களில் வந்துவிட்டது.


எங்கள் பகுதியில் யாதவர் சமூகத்தில் இருந்த வழக்கம் இப்போது எம்மீதும் தொற்றிக்கொண்டுவருகிறது.


ஆனால் இது மதுரைப் பகுதியில் இன்றும் நம் சமூகத்தில் வழக்கத்தில் இருக்கிறது..


ஆனால் இந்த வழக்கம் புதுக்கோட்டைப்பகுதியில் இல்லை.


2001ல் எனது தகப்பனார் மிக்கேல் குடும்பனார் இறந்தபோது என் மனைவி பிறந்த மதுரை உசிலம்பட்டி வழக்கப்படி சபையில் மோதிரம் அணிய முயன்றார்கள்.


ஆனால் அதனை எங்கள் கிராமம் அனுமதிக்கவில்லை.


எனவே என்னை சபையிலிருந்து வீட்டிற்குள் அழைத்துச் சென்று மோதிரம் அணிவித்தார்கள்..


இதல்லாம் ஒவ்வொரு பகுதிப் பண்பாடும் பழக்கவழக்கம் என்றால் ஏழைகளை /குடிகளைச் சில பழக்கங்கள் பாதிக்கும் என்றுதான் இறந்த வீட்டுச் சபையில் மோதிரம் அணியும் வழக்கத்தை தேவேந்திர குல வேளாளர் சமூகம் சில பகுதிகளில் தவிர்த்துள்ளது.


ஆனால் அடிப்படை விடயங்களான தோம்புகிழித்து எண்ணெய் முழுக்கன்று உருமால் கட்டும் வழக்கத்தை விட்டுவிடாதீர்..


அது போன்ற ஒரு சில பழக்க வழக்கங்கள்தான் தேவேந்திரகுல வேளாளர் எனும் பெயராணை வழங்க மானுடவியல் ஆய்வறிக்கைக்கு உதவின.


நம் சமூகத்திற்கென சில பண்டைய பழக்கவழக்கள் உள்ளன.


அவற்றைப் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு நடைமுறைப்படுத்துவோம்.


வாழ்க தேவேந்திரனியம்..


தகவலுக்கு உதவிய புதுக்கோட்டை மாவட்டம்..தாழனூர் திரு.ராசுக்குடும்பனார். (70)

கண்ணாக்கூர் திரு. ரபேல் குடும்பனார் (75)ஆகியோருக்கு நன்றி..


©️✒️மிக்கேல் ஜெயராஜ்

@யாழி.

18.12.2023.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்