குடும்பனின் பார்வையில்

✒️இப்போதெல்லாம் இயற்கை மனிதர்களுக்குப் பெருமழையின் மூலம்தான் பாடங்களைக் கற்றுத்தருகிறது..



முன்பெல்லாம் மழை பெய்யாமல் பெரும் பஞ்சம் ஏற்பட்டு உணவுக்குத் திண்டாடவிட்டு பாடம் கற்றுத்தந்தது.



அதன் மூலம் நீரைச் சேமிக்கக் கற்றுக்கொண்டார்கள்.



பெருவெள்ளப்பெருக்கு வரும்போது வெள்ளம்தானாக வடிய சரியான வடிகால் வசதிகளை இயற்கையே அமைத்திருந்தது..



வார்த்தைச் சித்தர் வலம்புரிஜான் ஒரு நூலில் மழையளவு குறித்தான செய்தியைப் பதிவிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.



ஒரு செ.மீ. மழையளவு என்பது ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு டன் எடை கொண்ட மழை பெய்துள்ளது என்று அர்த்தமாம்.



நாமும் எத்தனையோ வெள்ளப்பெருக்குகளைப் பார்த்திருக்கிறோம்.

கேள்விப்பட்டிருக்கிறோம்..

வாரக்கணக்கில் மழைவெள்ளம் வடியாமல் ஓடும்..



ஆனால் இப்போது மாதிரி அதிகப்படியான மழையளவைக் கேள்விப்பட்டது இல்லை.



காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 95 செ.மீ மழையளவு பெய்துள்ளது என்றால் எப்படி நீர்வடியும்..


வடிகால்கள் முழுக்க ஆக்கிரமிப்புகளும்,அடைப்புகளும் ஏற்பட்டுவிட்டன..

நீர்வழித் தடங்கள் பல இடங்களில் தூர்க்கப்பட்டுவிட்டன.



கண்மாய்க்கு மழை பெய்துவரும் தண்ணீர் வழி குளக்கால் எனப்படும்.

அந்த நீர் கண்மாயைச் சென்றடையும் இடம் கொண்டு மாரி என்றழைக்கப்படும்..

ஏரிக்குப் போதுமான நீர் வந்தவுடன் நீர் திரும்ப ஆரம்பிக்கும்.
அப்போது கொண்டு மாரிஅடைக்கப்படும்.

ஏரியின் கொள்ளளவு முடிந்தால் மீத நீரைக் குறைக்க சருக்கை என்ற அமைப்பு இருக்கிறது.


அதன் வழியாகக் குறைக்கப்படும் நீர் மறுகால் போகுதல் என்று அழைக்கப்படும்.



நஞ்சை நிலத்திற்கு கண்மாயின் நீர் செல்லும் வழித்தடம் வாய்க்கால் எனப்படும்..



நஞ்சைப்பகுதியின் வாய்க்கால் முடிவுற்ற பகுதி சிறுத்து கன்னிவாய்க்கால் எனப்படும்..

அது தான் மடை திறக்காத மழைக் காலத்தில் வயலில் மிகுந்த நீரை வடிக்க வாய்க்கால்வழியாக அடுத்த கண்மாய்க்குச் செல்லும் வழியாகும்..

இப்போது கன்னிவாய்க்கால்களும் சாலை ஓரங்களில் சென்ற பல வாய்க்கால்களும் மூடப்பட்டுவிட்டன..



புதிய வீட்டுமனைகளுக்காகத் தூர்க்கப்பட்ட நிலங்களாலும் பிரச்சனை..



நகர்ப்புறத்தை ஒட்டிய பல ஏரிகளுக்கு இப்போது விவசாய நிலங்களே இல்லை..



அது மாதிரியான ஏரிகளில் அரசும், தனியார்களும் பெருங்கட்டடங்களைக் கட்டிவிட்டார்கள்..



திருநெல்வேலியின் பிரதான சாலை ஒன்றில் கழுத்தளவு தண்ணீர் போவதையும் வீடுகளில் உள்ளவர்களைக் கயிறு கட்டிக்காப்பாற்றுவதையும் பார்க்கிறோம்..



நீர் நிலை வடிகால் வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது என்பது பெருந் துயரம் தான்.



மீட்புப் பணிகள், நிவாரணங்கள் மட்டும் நிரந்தரமான தீர்வல்ல..



ஒரே நாளில் 95 செ.மீ மழை இதற்கு முன்பு ஒருமுறை பதிவாகியுள்ளதாம்..



இதற்கு காலநிலை மாற்றம் என்கிறார்கள்..



காலநிலை மாற்றம் என்றால் என்ன⁉️

மனிதன் இயற்கையை எதிர்க்கும் போக்கு என்று பொருள் கொள்ளலாம்.
அதற்கு இயற்கை ஆற்றும் எதிர்வினைதான் காலநிலை மாற்றம்.

இனிச்செயல்படுத்த முடியாத/கூடாத மனிதக் கூட்டத்தால் ஏற்கப்பட்ட அநீதியின் மறுவடிவம்..



ஆனால் மழையளவு கணக்கிடப்படுமுன்பு தமிழர்கள் இவ்வளவு பெரிய இழப்புகளைச் சந்தித்ததாக வரலாறு இல்லை..பதிவு செய்யும் முறையும் இல்லை...



பொசுபொசுனு தூரல்,

நாய் அடி பதிய மழை

வாசல் தண்ணீர் பிரண்டு ஓடியது.

ஒரு பாட்ட மழை.

உழவு மழை.

அரைக் கலப்பை சொலியும்..

வயகொண்ட மழை. 

வயத்தண்ணி வெட்டிவடிக்கிற அளவு மழை..

பெரும் வெள்ளம்..



இப்படியெல்லாம் மழை அளவைக் குறிப்பிடுகிறார்கள்..



எவ்வளவு வெள்ளத்தையும் தாங்கும் செட்டிநாட்டுப்பகுதிகள் மாதிரி மேடான இடங்களைத் தேர்வு செய்து வீடுகள் அமைக்க வேண்டும்.



ஆனால் பணிக்குச் செல்ல ஏதுவாக குளங்களுக்குள் பிளாட்டுகளை வாங்கி வீடுகட்டி விட்டு வெள்ளம் வீட்டிற்குள் புகுந்துவிட்டது என்றால் என்ன நியாயம்..



சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எவ்வளவு மழை பெய்தாலும் சாலையில் நீர் தேங்குவதில்லை என்கிறார்கள்..



ஆங்கிலேயர்களால் வடிவமைக்கப்பட்ட புதுக்கோட்டை வெள்ளத்தால் திண்டாடியதில்லை..



95 செ.மீ மழை அளவு மிக அதிகம்தான்.



அரசின் செயல்பாடுகள் எவ்வளவு விரைவுபடுத்தியும் கால அவகாசம் போதுமானதாக இல்லை..



பொதுமக்கள் தமக்கான கடமைகளைச் செய்ய வேண்டும்..



ஆற்றில், வெள்ளப்பெருக்கு வந்தால் அதிகம் மணல் பெருகும் என்ற சந்தோசத்தில் இருப்பவர்களுக்கு இடையே எதைப் பேசுவது..

இயற்கைச் சீற்றம், மழை, வெள்ளம், தொற்றுநோய் குறித்து

பெரிய அளவில் அறிவியல் ஆய்வுகள் நடைபெறவேண்டும்.



பள்ளிகள், கல்லூரிகளில் அதுகுறித்த ஆய்வுப் பாடங்கள் உருவாக்கப்பட வேண்டும்..



பொதுவாக நீர்வழியை அடைப்பதையும், அபகரிப்பதையும் செய்யாமல் இருப்பதே இயற்கைக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் மட்டுமல்ல நமக்கான நன்மையும் கூட.

இயற்கையை ஒரு நாளும் வெல்லமுடியாது..



எனவே அதனோடு இயைந்து வாழ்வதுதான் உத்தமம்..



எத்தனையே சாம்ராஜ்யங்கள் காணாமல் போய்விட்டன.

நாமெல்லாம் அதனை மறந்துவிட்டு வாழ்கிறோம்.



இயற்கை விதிகளை மதிப்போம்..

மழைவெள்ள வழிகளை/வடிகால்களை

ஆக்கிரமிக்காமல் இருப்போம்..



©️✒️யாழி.

18.12.2023.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்