குடும்பனின் பார்வையில்
தந்தை மகனுக்கு
எழுதும் கடிதம்!!
அன்புள்ள மகனே!
உனக்கு 20 வயது வரும் போது எனக்கு 60 வயதை தாண்டிவிடும் என்பதால் அவ்வப்போது நடக்கும் விவகாரத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தற்போது தமிழகத்தில் எளிய மக்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் விவகாரத்தில் ஜனநாயகவாதிகளின் கள்ள மவுனம் குறித்து பேச விரும்புகிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் எளிய மக்கள் மீதான வன்முறை சம்பவங்களின் எண்ணிக்கை 2000 த்தை தாண்டி விட்டதாக எவிடன்ஸ் கதிர் என்ற மனித உரிமை செயற்பாட்டாளர் சுட்டி காட்டியுள்ளதையும், நெல்லை மாவட்டத்தில் மட்டும் கடந்த பத்து மாதத்தில் 84 சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் செய்திகள் வருகிறது. இது போக கடந்த மூன்று மாதத்தில் 19 பேர் படுகொலைக்கு உள்ளாக்கபட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலங்களை விட இது மிக அதிகமான எண்ணிக்கை என்பதால் இது பேசு பொருளாக்க வேண்டிய முதன்மையான விவகாரம் ஆகும்.
மகனே! நீ மனிதநேய மிக்கவனாக மட்டுமல்லாமல், மனவலிமை மிக்கவனாக வளரவேண்டும் என்பதே எனது விருப்பம். நுட்பமாக நடக்கும் நிகழ்வுகளை ஒவ்வொன்றாக கவனி.
ரோட்ல போற-வாரவனை வெட்டுகிறான்,
ஆத்துல குளிக்க போனவனை வெட்டுகிறான்,
முகத்தில சிறுநீர் கழிக்கிறான்,
ஆடு மேய்க்கும் அப்பாவியை வெட்டுறான்,
கோவிலில் படுத்திருந்த முதியவரை பிடித்து வெட்டுறான்,
வார்டு மெம்பராக உள்ள பட்டதாரி இளைஞனை வெட்டுறான்,
அம்பேத்கர் பனியன் போட்டு கொண்டு ஆர்கெஸ்ட்ரா பார்க்க போனவனை ஒரு கும்பலே சுற்றி வளைத்து கொடூரமாக தாக்கி பனியனை கிழிக்கிறார்கள்,
கல்லூரி மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி கை காலை கட்டி போட்டு கொடூரமாக தாக்குகிறார்கள்,
பள்ளி படிக்கும் மாணவனை கொடூரமாக வீடு புகுந்து வெட்டுறான்,
ஒரு சிறுவன் தனது அக்கா மாற்று சாதியை சேர்ந்தவனை விரும்பியதால் கொடூரமாக உடன் பிறந்தவளையே கொலை செய்கிறான்.
பட்டியலின இளைஞர் ஒருவர் சாதி இந்துவை அண்ணன் என்று அழைத்தற்காக இரும்பு ராடால் கொடூரமாக தாக்குகிறான்.
இதெல்லாம் நடப்பது உத்திரபிரதேசமோ, பீகாரோ இல்லை
தமிழ்நாட்டில்தான் இவையெல்லாம்.
தம்பி! சமீப காலமாக எந்த முன்விரோதமும் இல்லாமல் சில சம்பவங்கள் சாதிய கணக்குகளால் கொலைகளும், கொலை வெறி தாக்குதலும் நடப்பதை கூட தங்களை ஆகச்சிறந்த ஜனநாயகவாதிகள் என்று பீற்றி கொள்பவர்கள் கண்டிக்காமல் கள்ள மௌனமாக கடந்து செல்வது நெருடலாகதான் உள்ளது,
புரிந்து கொள் மகனே!
பாலஸ்தீனம் காஸாவில் நடக்கும் அநீதியையும், மணிப்பூரில் நடந்த அட்டூழியங்களையும் பக்கத்தில் இருந்து பார்த்தது போல பக்கம்பக்கமாக பேசுபவர்களுக்கு நெல்லை தூத்துக்குடி மதுர புதுக்கோட்டை ஈரோடு போன்ற இடங்களில் நடப்பது குறித்த ஒன்றுமே தெரியாமல் இருக்கும் என்பதை நான் நம்ப தயாராக இல்லை. நீ நம்புவதும் நம்பாததும் உனது உனது முடிவு. இதில் நான் தலையிட விரும்பவில்லை. இங்கு செயல்படும் இசங்களும் சித்தாந்தங்களுக்கும் எளிய மக்களின் துயர் துடைக்கவில்லை என்றால் பிறகு எதற்காக நாங்கள் மட்டும் அதை பிடித்து நாங்கள் மட்டும் தொங்க வேண்டும் என்று நினைக்கும் சூழலுக்கு எளிய மக்களை தள்ளிவிடக் கூடாது என்பதே எனது எண்ணம்.
செல்ல மகனே!
திராவிட கருத்தியல் பேசுபவர்கள் பெரியார் வழி வந்தவர்கள் சமூகநீதி சமத்துவம் குறித்து பேசுபவர்களாயிற்றே என்று நீ சொல்ல வருவதை நான் மறுக்கவில்லை. ஆனால் மேற்படி கருத்தியலை தாங்கி பிடித்து மதவாத சக்திகள் மீது கடுமையாக விமர்சிக்கும் எழுத்தாளர் சூர்யா சேவியர் உலக்கோப்பை கிரிக்கெட்டுக்கு பக்கம் பக்கமாக பதிவு போடுகிறார்கள் ஆனால் எளிய மக்களின் மீதான வன்முறை குறித்து எழுத மனமில்லை, தமிழ்கேள்வி வேல் வீச்சு செந்தில்வேல், கருத்து கரு பழனியப்பன், சுப வீரபாண்டியன், மதிமாறன் போன்ற ஆளுமைகளுக்கு இதை விட வேறு பல வேலைகள் உள்ளது என நினைக்கிறேன்.
சரி திராவிடமே போலி நாங்கள் தான் ஒரிஜினல் தமிழன் வாருங்கள் தமிழராய் ஒன்றினைவோம் திராவிடத்தை அறுத்து தள்ளுவோம் என முழங்கும் யூடூபர் சாட்டை துரைமுருகன் கண்டித்தாரா என்றால் பாதிக்கபட்ட தமிழன் பக்கம் நின்று பேசினாரா என்றால் அவர் மன்சூரலிகானுக்காக களமாடுகிறார் மேலும் காவல்துறையால் என்கவுன்டர் செய்யபட்டவருக்காக சாட்டையை சுழற்றுகிறார்.
இது போலவே தமிழ் தேசியம் பேசக்கூடிய மன்னர் மன்னன், பாரிசாலன் போன்றவர்கள் பாதிக்கபட்டது எளிய தமிழன் என்பதால் கள்ள மௌனம் காக்கிறார்களா என தெரியவில்லை.
இந்து தேசியம், இந்திய தேசியம் பேசும் சங்க பரிவாரங்கள் சதாகாலமும் திராவிட ஆட்சியை விமர்சிப்பார்கள். ஆனால், இந்த விவகாரத்தில் தட்டி கேட்பதும் இல்லை சுட்டிகாட்டுவதும் இல்லை. இது போக பெரிய அரசியல் கட்சிகளுக்கு சில ஓட்டு கணக்குகளுக்காக கள்ள மௌனமாக இருக்கலாம். ஆனால் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எளிய மக்கள் மீதான வன்முறைகள் 2000 மேல் நடந்துள்ளது குறித்து தெளிவான அறிக்கை வெளியிட மறுப்பது ஏன் என்று சத்தியமாக தெரியவில்லை மகனே.
நடிகர் நடிகைகள் தும்மினால் துப்பினால் டிவிட் போட்டால் மணிக்கணக்கில் விவாதம் நடத்தும் தமிழக ஊடகங்கள் இந்த அநீதி எல்லாம் பேசுவதற்கு நேரமில்லாமல் போய்விட்டது என்பது கொடுமையிலும் கொடுமை. இந்த அநீதி கண்டு அறச்சீற்றம் கொள்ளுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள் எனக்கு தெரிந்தவரை புதியதமிழகம் டாக்டர் க.கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மக்கள் புரட்சிகழகம் அரங்க குணசேகரன், எவிடன்ஸ் கதிர், விசிக முருகன் கண்ணா, வழக்கறிஞர் ஆறுமுக செல்வி, வழக்குரைஞர் சுரேஷ்குமார் போன்றவர்களின் செயல்பாடுகள் பாதிக்கபட்ட எளிய மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளதையும் சுட்டிகாட்ட விரும்புகிறேன்.
மகனே! இந்த விவகாரத்தில் நுட்பமாக கவனித்தால் பாதிக்கபட்டவன் எல்லாம் அரசியல் அதிகாரமற்ற சமூகத்தை சேர்ந்தவர்களாகவும், வன்முறையில் ஈடுபட்டவன் எல்லாம் அரசியலதிகாரம் மிக்க சமூகத்தை சேர்ந்தவனாக இருப்பதை புரிந்து கொள்ள முடியும். சுதந்திர நாட்டிலும் கூட சுயமரியாதையோடு வாழவும் நம் மீதான பிறரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும் எதிர்த்து தற்காத்து கொள்ளவும் அரசியலதிகாரம் எவ்வளவு முக்கியமானது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மகனே! நான் புலம்பவில்லை நீ முதலில் நுட்பமாக கவனிக்க கற்றுக் கொள்! உணர்ச்சி வசப்படாதே! இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை எல்லாம் மாறும் மாற்றம் ஒன்றே மாறாதது. கணித பாடத்தில் (இன்பினிட்டிவ்) முடிவிலி இருக்கலாம். ஆனால் பொதுவாக வரலாற்றில் ஆரம்பம் ஒன்று இருந்தால் முடிவு என்று நிச்சயம் இருக்கும். ஆகவே எந்த நிலை வந்தாலும் அறம் சார்ந்தே செயல்பட வேண்டும் என்று கூறி முடிகிறேன்.
அடுத்த கடிதத்தில் சந்திப்போம்
-
அன்புடன் உன் தந்தை
கா.லெனின்பாபு
09/12/2023
Comments
Post a Comment