குடும்பனின் பார்வையில்
தேவேந்திரகுல வேளாளர்களின் துயரங்களுக்கு காரணங்களை தேடிய பொழுது
தலைவர், நேதாஜி சுபாஷ் சேனை, தமிழ் நாடு
*V. மகாராஜன், BABL ML MBA MLM* -
அவர்களின் பதிவு .......
இது என் தனிப்பட்ட பதிவு, மறவனாக அல்ல. மனிதனாக.
*அன்புக்குரிய முக்குலத்தோர் சமுதாய மக்களே* !!!
*நேற்று 31.12.2023 ந் தேதி தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தைச் சேர்ந்த தேவேந்திர குலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவர்கள் நமது தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்கள். கொலைக்கான காரணமாக காதல் பிரச்சினை சொல்லப்படுகிறது.*
*எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் ஒரு மனிதனின் உயிரை எடுக்க யார் நமக்கு அதிகாரம் கொடுத்தது? அந்த இளைஞர் எத்தனை கனவுகளோடு வாழ்ந்திருப்பார்? அன்று முன்னீர்பள்ளத்தில் நம் தேவர் சமூக இளைஞர் கொல்லப்பட்டபோது நாம் எத்தனை வேதனையடைந்தோம்?*
*இன்று சில சக்திகள் தேவையற்ற முறையில் இளைஞர்களை தவறான பாதையில் ஊக்குவிக்கின்றன. அதன் விளைவாக இத்தகைய கொடிய துயர சம்பவங்கள் நடைபெறுகின்றன. எந்தவொரு பிரச்சினைக்காகவும் ஒருவர் உயிரை எடுப்பது தவறே.*
*இது போன்ற சம்பவங்களால் நமக்கும் மற்ற சமூகங்களுக்குமிடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நமக்கு யாரும் வாடகைக்கு வீடு தருவது கிடையாது, யாரும் கடன் தருவது கிடையாது, நம்முடன் தொழில் செய்வதற்கு மற்ற சமூகத்தினர் அஞ்சுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் இது போன்ற சம்பவங்களால் அரசியலில் உள்ள நம் மக்களும் தனித்து விடப்படுவார்கள். மற்ற சமூகங்கள் நமக்கு வாக்களிக்க யோசிப்பார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச அரசியல் அதிகாரமும் பிடுங்கப்பட்டு அரசியலில் அநாதையாக்கப்படுவோம். அரசியல் அங்கீகாரம் இல்லாமல் நம் சமூகம் எதைச் சாதித்து விட முடியும்? நம் இன அழிவுக்கான பாதையை நமக்கே தெரியாமல் நாமே வகுத்து வருகிறோம்.*
*நம் இன இளைஞர்களை நல்வழிப்படுத்துவோம். அவர்கள் தேவையற்ற வம்பு வழக்குகளில் சிக்குவதிலிருந்து காப்பாற்றுவோம். தவறான செயல்களை ஊக்கு விக்க வேண்டாம். கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பதையும், உபயோகப்படுத்துவதையும் வன்மையாகக் கண்டிப்போம்.*
*கல்வி பொருளாதார அடிப்படையில் நம் நோக்கம் செயல்பாடுகள் இருக்கட்டும். யார் எத்தனை கொலை செய்தது, கிரிக்கெட் ஸ்கோர் போல நாம்தான் முந்த வேண்டும் போன்ற கொடிய சிந்தனைகளை தவிர்ப்போம்.*
*புளியங்குளம் இளைஞர் இறந்து விட்டார். ஆனால் யாரோ சிலர் செய்த செயலால் ஒட்டு மொத்த தேவர் சமூகத்தின் மீது பழி விழுந்துள்ளது. இதனால் நமக்கு பெருமையா? இதை செய்தவர்களாவது இனி நிம்மதியாக இருப்பார்களா? இனி அவர்கள் நிலை? கோர்ட்டு, கேஸ், ஜெயில் என்று அலைய வேண்டும். அவர்கள் குடும்பத்தின் பொருளாதாரம் சரியும். இதைச் செய்ததற்காக நமது சமூகம் அவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசளித்து வீடு நிலம் வாங்கிக் கொடுக்கப் போகிறதா என்ன? அதுதான் இல்லை. வெளியில் அவர்களை கொம்பு சீவி விட்டு, முதுகுக்குப் பின்னால் அவர்களுக்கு கொலைகாரன் என்ற பட்டத்தைக் கொடுத்து அவர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் உங்கள் வீட்டு பெண்ணை ஒரு கொலைகாரனுக்கு கட்டிக் கொடுப்பீர்களா? அவர்களுடன் பழகக் கூட யோசிப்பார்கள். ஜெயிலில் சென்று பார்த்தால் கூட நம் மீது ஏதும் வம்பு வழக்கு வந்து விடுமோ என்று பார்க்கக் கூட செல்ல மாட்டார்கள். பின் எதற்காக இதனை ஊக்குவிக்க வேண்டும்? யாரை நம்பி இது போன்ற கொடிய செயல்களை இந்த சமூக இளைஞர்கள் செய்ய வேண்டும்? பாளையங்கோட்டை சிறையிலும் பேராவூரணி சிறையிலும் சென்று பாருங்கள் இந்த சமூகத்திற்காக கொலை செய்து விட்டு பல வருடங்களாக யாருடைய உதவியும் கிடைக்காமல் மன நோயாளிகளாக இருக்கும் இளைஞர்களை. வாட்ஸ்ப்பிலும் முகநூலிலும் வாழ்த்து பெறுவது வேறு, வாழ்க்கை வேறு. இதைப் புரியாமல் இளைஞர்கள் ஏன் உங்கள் வாழ்க்கையை நாசம் செய்து கொள்கிறீர்கள்?*
*இந்த சமூக மக்களுக்கு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத சிலர் ஏன் இதை ஆதரித்து இந்த இளைஞர்களின் வாழ்க்கையை இருட்டுக்குள் தள்ளி விடுகிறீர்கள்? தேவேந்திர குல இளைஞரின் வாழ்க்கையும் அழிந்து, அவரை கொன்ற பாவத்திற்காக உங்கள் வாழ்க்கையையும் ஏன் அழித்துக் கொள்கிறீர்கள்? சரி வெளியே வந்த பின்னராவது கொலை செய்தவர்கள் நிம்மதியாக இருக்க முடியுமா? யாரைப் பார்த்தாலும் இவர் நம்மை வெட்ட வந்துள்ளாரோ என்ற சந்தேகத்திலேயே வாழ வேண்டுமே, இதெல்லாம் தேவையா? தேவேந்திர குல இளைஞர் ஒரே நாளில் இறந்து விட்டார். நீங்கள் தினம் தினம் சாக வேண்டுமா?*
*இளைஞர்களே யோசியுங்கள். அரிவாள் எடுத்தவர்கள் எப்படி அழிந்தார்கள் என்ற வரலாற்றை திருப்பி பாருங்கள். பசும்பொன் தேவர் கொலை அரசியலை விரும்பினாரா? பசும்பொன் தேவரை தெய்வமாக நெஞ்சில் சுமக்கும் நாம் கொலை அரசியலைக் கைவிடுவோம். அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவோம். கொலை அரசியல்தான் வேண்டுமென்று விரும்புபவர்கள் பசும்பொன் தேவரை விட்டு விடுங்கள். உங்களால் அவருக்கும் அசிங்கம் ஏற்படுகிறது. ஏழாம்படை சித்தர் முக்தியடைந்த பின்னராவது நிம்மதியாக இருக்கட்டும். பேனாவால் சாதிக்க முடியாத காரியத்தை அரிவாள் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை. நம் சமூக பெரியவர்கள், கட்சி நடத்துபவர்கள் யாதொரு காரணத்திற்காகவும் கொலைச் சம்பவங்களை ஆதரிக்க வேண்டாம்.*
*பல கனவுகளோடு உலகிற்கு வந்த புளியங்குளம் தம்பியின் ஆன்மா இறைவனடியில் துயில் கொள்ளட்டும். அவர் குடும்பத்திற்கு அரசாங்கம் அனைத்து விதமான நிவாரணங்களையும் செய்ய வேண்டும். தேவேந்திரகுல மக்களே, யாரோ சிலர் செய்த தவறுக்கு எங்கள் சமூகம் முழுமையும் பொறுப்பாக்கி விடாதீர்கள். இது எங்கள் வேண்டுகோள். உண்மையில் தேவர் சமூக மக்கள் உங்களுக்கு எதிரானவர்கள் அல்லர். யாரோ சிலர் செய்யும் தவறு தேவையற்ற முறையில் தேவர் சமூகத்தை பலிகடா ஆக்கி விடுகிறது. குற்றவாளிகள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப் படுவதை தேவர் சமூகம் ஆட்சேபிக்காது.*
*இனி அனைத்து சமூக மக்களும் ஒற்றுமைப் பாதையில் பயணிப்போம். ஓங்கட்டும் தமிழக மக்கள் ஒற்றுமை*
*இது என் தனிப்பட்ட பதிவு* *மறவனாக அல்ல. மனிதனாக*
*V. மகாராஜன், BABL ML MBA MLM*
*தலைவர், நேதாஜி சுபாஷ் சேனை, தமிழ் நாடு*
Comments
Post a Comment