குடும்பனின் வாழ்வில்
✒️ஜீன்-16 அப்பாக்கள் தினம்..
நினைக்க மறந்த அப்பாக்களை இனியாவது நினைத்துப் போற்றுவோம்.!!!!
ஐம்பது வயதைக் கடந்தவர்களின் அப்பாக்களுக்கும் ஐம்பது வயதுகளில் அப்பாக்களாக இருப்பவர்களுக்கும் அப்பாக்களின் அருமை தெரிந்திருக்கும்..
முன்பெல்லாம் வாகனங்கள் இல்லாத போது பிள்ளைகளை தமது தோளில் காவடி தூக்குவது போல தூக்கிப் போவார்கள்.
இரண்டாவது மகனைத் தோளில் தூக்கிப் போகும் போது மூத்தவன் தூக்குச் சட்டியில் கஞ்சி தூக்கிப் போன காலங்கள் உண்டு..
உழவுதலையில் ஏரை நிறுத்திவிட்டு அரைச் சம்மனம் (ஒரு காலை மடக்கி இன்னொரு காலை குத்துக் காலாக வைத்து) போட்டு கஞ்சி குடிக்கும் போது கஞ்சி கொண்டு வந்த பிள்ளைக்கு ஊட்டாமல் உண்டதில்லை அப்பாக்கள்.
மழைக்காலங்களில் ஒழுகுகிற குடிசைகளில் பிள்ளைகளின் தூக்கம் கலையாமல் இருக்க மழைநீருக்குப் பாத்திரம் வைத்தவர் அப்பா..
உழவு மாட்டையும் பிள்ளைகளையும் ஒரே விதமாய்ப் பாவித்தவர் அப்பா.
இரண்டையும் அவர் அடிப்பார் . ஆனால் பிறர் தொடச் சம்மதியார்..
அப்பாக்களோடு அதிக காலம் வாழ வாய்ப்புப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.
ஆண் பிள்ளைகளை விடவும் பெண் பிள்ளைகளுக்குத் தான் அப்பாக்களை அதிகம் பிடித்திருக்கிறது.
அப்பாக்களை நினைவு கூறுவோம்.
அப்பாக்களோடு வாழ்பவர்கள் அவர்கள் கரம் பற்றி ஒரு முத்தமிடுங்கள்.
அப்பாக்கள் ஒருபோதும் தீங்கானவர்கள் அல்ல..
நம் வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் முகம் காட்டுபவர் அவர் தான்..
நன்றி அப்பா.
©️✒️ யாழி
16.06.2024.
Comments
Post a Comment