குடும்பனின் பார்வையில்
✒️டோர் டெலிவரி
செய்யப்படும் கள்ளச் சாராயம்..!!!!!
இதுவரை இப்படி ஒரு சோகத்தைத் தமிழகம் கண்டதில்லை.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நிகழ்ந்த விசச்சாராயச் சாவுகள் நம்மைப் பெருஞ் சோகத்தில் ஆழ்த்தியுள்ளன.
மூன்று முறை குண்டர் தடுப்புச் சட்டத்தால் தண்டிக்கப்பட்டு இனிச் சாராயம் விற்க மாட்டேன் என நீதிமன்றத்தில் உறுதி கூறிவிட்டு வந்த கண்ணுக்குட்டி என்பவர் தொடர்ந்து சாராயம் விற்று வந்துள்ளார்.
அரசு மதுபானத்திற்குப் பதிலாக சாராயத்தை அப்பகுதி ஆண் பெண் சிறுவர்கள் என எந்த வேறுபாடுமின்றி குடித்து வந்துள்ளனர்.
பால்பாக்கெட்டுகளைப் போல சைக்கிள்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் வந்து வீடுவீடாக விற்பனை செய்ததாக அறிகிறோம்.
கருணாபுரத்தில் வாழ்பவர்கள் பெரும் பகுதியினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர்.
சுமை ஏற்றும் தொழிலாளிகள். உள்ளூர்காரர்களும், அங்கு நடந்த ஒரு சாவுக்கு வந்தவர்களும் ஆக நூற்றுக்கு மேற்பட்டவர்கள் செவ்வாய்க்கிழமை சாராயம் குடித்துள்ளனர்.
அன்று மாலையே பலருக்கும் உடல் உபாதைகள் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்ந்துள்ளனர்.
கருணாபுரத்தில் மட்டும் இதுவரை 28 பேர் இறந்துள்ளனர்.
இவர்களில் 7 பேர் கிறிஸ்தவர்கள்.
அருகிலுள்ள
கோமுகி ஆற்றங்கரையில் ஏழு கிறிஸ்தவர்களின் உடல்கள் முறைப்படி புதைக்கப்படுகின்றன.
மீதமுள்ள 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் எரியூட்டப்படுகின்றன.
மீதமுள்ள உடல்கள் அருகிலுள்ள அவரவர் கிராமங்களில் அடக்கம் செய்யப்படுகின்றன.
பாதிக்கப்பட்ட ஒருவருக்கு முற்றிலும் கண் பார்வை பறிபோனது.
ஒரு வீட்டில் குழந்தைகளை நிர்க்கதியாக விட்டுவிட்டு தாயும் தந்தையும் இறந்துள்ளனர்.
ஒட்டுமொத்த தமிழகமும் உறைந்து போயுள்ளது.
இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்னும் 101 பேர் தீவிரச் சிகிச்சையில் உள்ளனர்.
சிகிச்சையில் உள்ள பலர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது வருத்தமளிக்கிறது.
வருவாய்த் துறையினர், ஊராட்சி நிர்வாகம், காவல் துறையினர், மக்கள் பிரதிநிதிகள், கிராமமக்கள் என அனைவரும் இந்தச் சாவுகளுக்குப் பொறுப்பானவர்கள்தாம்.
மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்வதாலோ, மாவட்ட காவல் துறைத் தலைவர், காவலர்களை இடமாற்றம் செய்வதாலோ இப்பிரச்சனை தீரப்போவதில்லை.
அரசுக்கு ஒரு பெரும் பொறுப்பு உள்ளது என்பதை சொல்லத் தான் வேண்டும்.
தமிழகத்தின் பல கிராமங்களில் விசச்சாரயம் பரவியுள்ளன.
கல்வி வளாகங்களில் விதவிதமான போதைகள் பயன்பாட்டில் உள்ளன.
கள்ளச்சாராயம் விசச்சாராயமாக மாறியுள்ளது.
அங்கே இருந்து 900 லிட்டர் அளவுக்குப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதெல்லாம் உள்ளுர் காவல் துறைக்கு அறியாமல் நடக்க வாய்ப்பில்லை என பாதிக்கப்பட்ட உள்ளூர்வாசிகள் தொலைக்காட்சிகளில் புகார் தெரிவிக்கின்றனர்.
இனியாவது அரசு கள்ளச் சாராயத்தை ஒழிக்கத் தீவிரம் காட்ட வேண்டும்.
ஏழை எளிய மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும், மலைவாழ் மக்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கெல்லாம் காரணம் போதைக்கு அடிமையானவர் அதிலிருந்து மீள முடியாமல் விலை குறைந்த சாராயத்தை நோக்கிச் செல்வதுதான்.
வயதான பெண்கள் கூட குடிக்கு அடிமையாகியிருந்ததைப் பார்க்க முடிகிறது.
முதலில் விழிப்புணர்வு தேவை.
இதில் இளைஞர்களின் பங்களிப்பு பெருமளவில் தேவைப்படுகிறது.
அடுத்து குடிப்பழக்கத்திலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்க நடவடிக்கை தேவை.
இதற்கு மருத்துவத் துறையின் முயற்சிகள் அவசியமாகும்.
எல்லாவற்றிற்கும் மேலாக மது ஒழிப்புத் தான் நிரந்தரத் தீர்வு.
நிரந்தரத் தீர்வை எட்ட இயலாதவரை இம்மாதிரியான துயரங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, நமக்கும் இருக்கிறது.
கூடுதல் பொறுப்பு காவல் துறைக்கு என்பதே பொதுவான கருத்தாகும்.
இனியாவது குடியால் குடிகெடும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் பெண்களுக்கு ஆறுதல் சொல்வோம்.
மதுவை ஒழிப்போம்
மதுப்பழக்கத்தை நிறுத்துவோம்..
©️✒️ யாழி
20.06.2024.

Comments
Post a Comment