குடும்பனின் பார்வையில்

 #மூடி_மறைக்கப்பட்ட_உலகின்_மூத்த நாகரிகமான_பொருநை

(கி.மு_10000_தொடக்கம்_கி.மு_1000_வரை) 



      சிந்து நாகரிகம் நிலவிய தொடக்க நிலையான கிமு 3000 அளவில் , அதாவது கடந்த 5000 ஆண்டுகளுக்கு முன்பு முந்து தமிழின் கிளை மொழிகள் எவையும் தோன்றி இருக்க வாய்ப்பேதும் இல்லை என்பதே உண்மையாகும் . காரணம் கிமு 1300 அளவில் ஆரியர் இங்கு வரும்வரை இந்திய இனங்களிடையே குருதிக் கலப்பேதும் நிகழவில்லை என்று இன்று அறிவியல் வழியில் நிறுவப்பட்டிருக்கிறது . ஆரியர் வந்த பிறகே தமிழ் மொழிக் கலப்படைந்து வெவ்வேறு இந்திய மொழிகளாயின என்பதை விட , தமிழால் முதலில் இந்தியாவில் கலப்படைத்து , திரிந்த மொழி ஆரிய இனத்தின் வேத மொழியேயாகும் என்பதே முதல் உண்மையாகும் .  


மொகஞ்சதாரோவில் இருந்து 250 கிமீ தொலைவில் பலுசிஸ்தான் மாநிலத்தில் வழங்கி வரும் தமிழின் கிளை மொழியெனப்படும் பிராகூயி மொழி இன்றும் அதற்குச் சான்றாக நிற்கின்றது . இந்நிலையில் சிந்து எழுத்து எம்மொழிக்குரியதோ என்ற ஐயமின்றி , தமிழ்தான் என்னும் தெளிவுடன் சிந்து எழுத்தின் வழி வந்த அதன் தொடர்ச்சியான சங்க காலத் தமிழ் எழுத்தான தமிழி எழுத்து வடிவங்களின் வடிவ ஒப்புமை அடிப்படையில் சிந்து எழுத்தின் அடிப்படை வடிவங்களும் , தமிழி எழுத்தின் வடிவங்களும் அமைகிறது . 


       தமிழி எழுத்து கிமு 700 முதல் கிபி 200 வரையில் தனக்குரிய முழுமையான எழுத்துத் திறனுடன் தமிழகத்தில் வழங்கிய எழுத்து முறையாகும் . தமிழகத்தில் சிந்து எழுத்து கிமு1300 வரையில் நிலவியது . இதை சாணூர் பெருங்கற்காலத்து புதைகுழிகளில் நடந்த அகழ்வாய்வு நிறுவுகிறது . இக்காலத்தை ஒட்டியே பெருங்கற் கால நாகரிகம் மலர்ந்தது . அதன்பின் சிந்து எழுத்து வடிவங்கள் தமிழியாக மாற்றமுறத் தொடங்கின . பெருங் கற்காலத்தில் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி தமிழகத்தில் எழுத்து முறையை வளர்த்தது . இக்காலம் முதல் கிமு 700 வரையில் சிந்து எழுத்து அடைந்த மாற்றங்களைப் பெருங்கற்கால வாழிடங்களில் மேற் கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் கிடைத்த பானையோட்டு வடிவங்கள் ( graffiti signs ) தெளிவாக உணர்த்து கின்றன . கிமு 1000 முதல் கிமு 700 வரையில் தமிழி எழுத்து தமிழகத்தில் கருக்கொண்டு முதிர்ந்த நிலையைச் சாணூர் , பெருமுக்கல் , யாழ்பாணம், பொருந்தல் அகழாய்வுச் சான்றுகள் நன்கு விளக்குகின்றன .   


      தமிழி எழுத்து முறையைக் கொண்டுதான் தொல்காப்பியம் முதல் ( அதன் இன்றைய பெரும்பான்மையான பகுதிகள் ) , சங்க கால இலக்கிய நூல்கள் யாவும் எழுதப் பட்டன என்பதே உண்மை . சங்க காலத்துக் கல்வெட்டுகளில் பகரம், மகரம் ஆகியவை பல இடங்களில் U வடிவம் போலவே எழுதப்பட்டது . இவற்றுள் மகரம் உள்பக்கம் ஒரு குறுக்குக் கோடிட்டு எழுதப்பட்டது . உண்மையில் பகர வடிவின் இடப் பக்கக் கோடு சற்றே உயரமாக எழுதப் படும் . எழுதும்போது இரண்டையும் U வடிவில் எழுதும் முறையால் ஏற்படும் பிழையைத் தவிர்க்கவே தொல்காப்பியர் பகர மகரங்களிடை யே ஏற்படும் வடிவ வேறுபாட்டை உணர்த்த உட்பெறு புள்ளி உருவாகும்மே என்று நூற்பா எழுதினார் . 


       கிமு 2300 அளவில் செமிடிக் இன மன்னன் சார்கோன் சுமேரியாவைக் கைப்பற்றிய பின்பே மொழி , பண்பாடு ஆகிய வற்றில் மாற்றம் நிகழ்ந்தது . முந்திய சுமேரிய நிலப்பரப்பில் சுமேரிய நாகரிகம் மலர்ந்தது முதல் தொடர்ந்து 2500 ஆண்டுகள் அங்கு தமிழ்ப் பண்பாடும் , வழிபாட்டு முறைகளும் மிகவலிமையாக நிலைபெற்றிருந்த மையைச் சுமேரிய அகழ்வாய்வுகள் காட்டுகின்றன . இந்நிலையினைத் தெற்கு சுமேரிய குன்றுப் பகுதியான அல் - உபைது அகழ்வாய்வுகள் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன . 


        அகழ்வாய்வுகள் கிமு 4500 கால அளவு முதல் அங்கு சுமேரியர் வாழ்ந்து நாகரிகத்தை வளர்த்ததாக ஆய்வுகள் காட்டுகின்றன . அப்போது சுமேரியா என்று பெயர் பெறவில்லை  

அது , மெசபட்டோமியா -- ஈராற்றிடை நிலம் -- என்றே வழங்கியது . அங்கே வாழ்ந்த மக்கள் இனக்குழுவினராக பண்பாட்டு முதிர்ச்சி அற்றவர்களாக , அநாகரிகர்களாக வாழ்ந்தனர் என்று சுமேரிய வரலாறுகள் காட்டுகின்றன . கிமு 3 ஆம் நூற்றாண்டில் சுமேரிய வரலாற்றைத் தொகுத்து எழுதிய பால் ( Bal -- பாலன் . அன் விகுதி பெறாது வந்தது ) கோயில் பூசாரி பெரோசஸ் என்பவர் ( Berossus ) மிகத் தெளிவாகவும் , விரிவாகவும் விளக்கு கிறார் . பால் கோயில் என்பது பாலன் முருகனது கோயிலேயாகும் . அங்கு இவ்வழிபாடு கிமு முதல் நூற்றாண்டு வரையில் சிறப்புற்றிருந்தது , 


      பெரோசஸ் சுமேரிய நிலப்பரப்பில் இருந்த வரலாற்றுத் தரவுகள் , மரபுச் செய்திகள் அனைத்தையும் நன்கு ஆராய்ந்து சுமேரியாவின் தொன்மை வரலாற்றை எழுதினார் . இப்போதும் அவ்வரலாற்று நூல் சிதைந்த நிலையில் கிடைத்துள்ளது . அவரது நூலில் சுமேரிய நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் அநாகரிகர்களாக -- காட்டாண் டிகளாக ( Brutes ) வாழ்ந்தனர் என்று கூறுகிறார் . ஆனால் , பாரசீக கடல் வழியாகக் கிழக்கிலிருந்து வந்த மக்கள் அவர்களுக்கு சுமேரிய நாகரிகத்தைக் கற்பித்தனர் என்கிறார் . அவர் குறிப்பிடும் மக்கள் கடல் வழியாக வந்ததால் அவர்கள் Minas - மீனாஸ் -- மீனவர் எனப்பட்டனர் . இது இயல்பே . பெரோசஸ் குறிப்புகளில் அவர்கள் தொன்மக் கதை மாந்தர்கள் போலக் குறிப்பிடப்படவில்லை . அவர் தனது நூலில் மீனர்கள் கடல் வழியே வந்து சுமேரியருக்கு நாகரிகத்தைக் கற்பித்தனர் என்கிறார் . அவருடைய வருணணையின்படி அவர்கள் மனிதர்களே . இதனை அவர்கள் மொழி , எழுத்து , உயர் அறிவியல் , பண்பாடு ஆகியவற்றை சுமேரியக் காட்டாண்டி களுக்குக் கற்பித்தனர் என்ற அவரது கூற்றால் அறியலாம் . மேலும் , சுமேரிய நாட்டுக்கான சட்ட திட்டங்கள் , நீதி ஆகியவற்றையும் அவர்களே வகுத்து அளித்தனர் . 


       ஆனால் , அவ்வாறு நாகரிகத்தைக் கற்பித்த மனிதர்களைச் சுமேரியர்கள் கிமு முதல் நூற்றாண்டு அளவுக்குள் தொன்மக் கதை மாந்தர்களாக மாற்றி வழங்கலாயினர் . மீனவர்கள் என்பதனால் பாதி மீனும் , பாதி மனிதர்களுமாக இருந்தவர்கள் , பாரசீக கடல் வழியாக வந்தனர் என்பதாகக் கூறி தொன்மப்படுத்திவிட்டனர் . காரணம் பண்டைக்காலத்தில் , கிமு 4500 அளவில் , தங்களுக்கு 5000 ஆண்டுக ளுக்கு முன்பு பரந்தக் கடல்பரப்பில் இருந்து உயர்நாகரிக மாந்தர் தங்கள் நிலத்துக்கு வந்து வாழும் வழியைக் கற்பிப்பார்களென்று எவரால் நம்ப இயலும் ? சுமேரியர் சிந்து நாகரிகக் காலம்வரை ஆழ்கடலோடிககள் அல்லர் . கிமு 2300 அளவில் சுமேரிய இந்தியக் கடல் வணிகம் செழித்து வளர்ந்து பேரளவில் இருந்தது . அந்த நிலையில்தான் சுமேரியாவைக் கைப்பற்றிய மன்னன் சார்கோன் கடல் வணிகத்தின் மிகுந்த ஆதாயம் கருதி தானே கப்பல் -- கடல் வணிகத் தில் ஈடுபட்டதை வரலாறு உணர்த்துகிறது . கிமு 4500 அளவில் கடல் வழியே சுமேரியாவுக்கு வந்தவர்களைக் கண்டு வியந்து , அவர்களது நாகரிக உயர்வு கருதி அவர்களைத் தொன்மக் கதை மாந்தராகப் பாதி மீனும் பாதி மனிதர்களுமாகக் கருதியதில் வியப்பில்லை . 


       சுமேரியாவிற்கு வடக்கே நிலவழி யாகச் சென்று மேற்கு ஆசியாவை அடையலாம் . அவ்வழியே அரேபிய நிலப்பரப்பை அடையலாம் . அங்கு அரேபியப் பாலைவனப் பகுதியில் இருந்து புறப்பட்டு மெசபடோமியா -- சுமேரியா வந்து அடைந்தவர்களே செமிடடிக் இன மக்கள் . அவர்கள் நாகரிகம் பெற்ற சுமேரியாவிற்குப் புலம்பெயர்ந்து பரவி பின்னர் கிமு 2350 அளவில் சார்கோன் தலைமை யில் நாட்டைக் கைப்பற்றி அரசினை அமைத்தனர் . ஆனால் , கிமு 4500 அளவில் அரேபிய -- மேற்கு ஆசியப் பிறைநிலப் பகுதியில் ( Crescent land ) இருந்த எந்த இனத்தவரும் சிறந்த நாகரிகம் பெற்றவர் அல்ல . புகழ் பெற்ற எகிப்தியர்கள் கூட கிமு 3300 அளவிற்குப் பின்னரே நல்ல நாகரிகர் ஆயினர் . 


ஆனால் , அப்போது கிமு 4500 அளவிலேயே பாரசீக வளைகுடாவுக்குக் கிழக்கில் அத்தகைய நனியுயர் நாகரிகம் பெற்ற மக்கள் இருந்தனர் . 


       சுமேரியாவிற்கு வந்து நாகரிகம் கற்பித்த மீனவர்கள் ( Minas ) மிகச் சிறந்த கடலோடிகள் எனவே மீனவர் எனப்பட்டனர் . பெரோசஸின் வருணணைகள் அவர்களது தோற்றம் , வடிவம் , இனம் ஆகியவை குறித்து ( origin and race ) கூறும் பெரோசஸ் , அவ்வாறு வந்த இரண்டு குழுக்களின் தலைவர்களின் பெயர்களையும் கூறி யுள்ளார் . இவ்வாறு 7 குழுவினர் வந்த போதும் இரண்டு குழுக்களின் தலைவர்களின் பெயர்கள் மட்டுமே அவரது நூலில் இருந்து தெரிகிறது . பிறரது பெயருள்ள பகுதிகள் கிடைக் கில்லை . இவற்றுள் இறுதி ஏழாவது குழுவின் தலைவன் ஒரு கப்பல் தலைவன் . முதல் ஐந்து குழுக்களில் ஒருவர் பெயர் தெரிகிறது . இவர்க ளைப்பற்றி காண்போம் .  


     1 . ஓவண்ணஸ் -- Oannes . 


      ஓவண்ணஸ் என்று குறிகப்பெறுகின்ற தலைவனது பெயர் சுமேரிய நாகரிக அகழ்வாய்வுகளில் ஈடுபட்ட ஐரோப்பிய ஆய்வாளர்களால் மொழி பெயர்த்து எழுதப்பட்டது . Oannes என வழங்கும் பெயரின் பின்னொட்டு es என்பது சுமேரிய மொழிக்கு உரியது அல்ல . அது கிரேக்க மொழிப் பின்னொட்டு . ஆக , இது Oann -- Oanna ஆகும் . Oan என்னும் ஆங்கில மொழிப் பெயர் உண்மையில் Ovan என்பதே . இது Ovanna என்பதேயாம் . இதனை , 


      = Oanna -- Ovanna = ஓவண்ண  


என்று தமிழில் எழுதலாம் . பொருள் : 


       = ஓவண் -- ஓவண்ண 

       = ஓவ + அண்ணல் . 

       = ஓவர் + அண்ணல் 


        = ஓவர் அண்ணல் 


ஓவர் அண்ணல் : ஓவர் = கம்மாளர் , ஓவியர் . சங்க இலக்கியங்கள் , சிலப்பதிகாரம் முதலிய இலக்கியங்கள் ஓவர் மாக்க ளென்று இவர்களைக் குறிக்கும் . ஓவர் என்போர் தொழில் வினைஞர்களாவர் . 


       கம்மாளர் என்போரே தமிழில் பண்டைக் காலத்தில் கம்மியர் என்று அழைக்கப்பட்டனர் . கம்மியர் என்று செம்பு உலோகத் தொழில் , தச்சுத் தொழிலாளர் , வரைகலை வாணர்கள் , பொற்கொல்லர் , பிற்காலத்தில் இரும்புக் கொல்லர் ஆகியோர் பெயர் பெற்றனர் . இத்தகைய தொழில் வல்லோன் யாராக இருக்க முடியும் மெகார்கரில் இருந்து சிந்துவெளி நாகரீகத்தின் கால்கோளாக விளங்கியவர்களா அல்லது அதனினும் சிறந்த நாகரீகம் அடைந்த பொருநை நாகரீக மாந்தர்களா எனின் மெகார்கர் நாகரீகமும் அதன் பின்னான அவர்களுடைய சிந்துவெளி நாகரீகமும் செம்பு நாகரீகமாகவே அடையாளம் காணப்பட்டிருக்கிறது. அத்தோடு சுமேரியாவில் கி.மு 4500 இல் மேற்குறித்த ஓவிர்கள் தமது நாகரீகத்தை பரப்பியபோது சிந்துவெளி நாகரீகம் தோன்றியிருக்கவில்லை. அடுத்து காலத்தால் முந்தைய மெகார்கர் நாகரீகம் ஓர் அவ்வளவு தூரம் வளர்ந்த நாகரீகமல்ல அதுவும் சிற்றூர் நாகரீகமாகும். அது செம்பு காலத்திலே திகழ்ந்தது. 


சிந்துவெளி நாகரீகம் தோன்றுவதற்கு முன்பாகவே தமிழக சிவகலையில் கண்டெடுக்கப்பட்ட இரும்பாலான பொருட்கள் சிவகலை கி.மு 3300 இல் இரும்பு நாகரீகமாக வளர்ந்து விட்டதனை பறைசாற்றுகின்றன. ஆகவே பொருநை நாகரீக மாந்தராக அன்றைய சிறப்புமிக்க பொருநை நாகரீக மாந்தையை சேர்ந்த மயன்வழி வந்த நாகர்களே கி.மு 4500 இல் சுமேரியா சென்றும் கி.மு 3300 இல் எகிப்து சென்றும் நாகரிகம் , தொழில் கற்பித்தனர் என்பது மிகச் சரியான அறிவியல் தேர்வாகும் . இந்த ஓவர் வழிவந்தோர் கி.மு 4500 இல் சுமேரிய நகர நாகரிக உருவாக்கத்தில் கி.மு 3300 இல் எகிப்திய நகர நாகரீக உருவாக்கத்தில் பெரும் பங்காற்றியுள்ளனர் . 


     தமிழி எழுத்துரு தோன்றுவதற்கு முன்பாக சிந்துவெளி தொடக்கம் பொருநை வரை தமிழ் மொழியின் எழுத்துருவாக விளங்கிய சிந்து வெளி எழுத்துரு முத்திரைகளில் காணப்படும் நாகரிக இறைவனை ஓவர் மாக்கள் ஓவர் -- அண்ணல் = ஓவண் ணல் என்று போற்றித் தங்களது தலைவன் -- இறைவனாகக் கருதினர் என்று சிந்து முத்திரை வழியாக அறிந்து கொள்கிறோம் . 


அவ்வாறான முத்திரை : 


    மொகஞ்ச தாரோ : 1028 . 


  # ஆ கய் லார் " வண் ஓ 


= ஓவண்ண " ஓவண்ணலார் கய்ய ஆ 


= ஓவர் அண்ணலுக்கு உரிய ஆ 


சிந்து மரபுகள் யாவும் மெகார்கர் நாகரிகத்திலிருந்து தொடர்ந்து வருவது . 


       சிந்துவில் காணும் இறைவனே ஓவண்ணல் ஆவான் . இவரே பண்டைக் காலத்தும் அதே பெயரைப் பெற்றிருப்பார் .  


சுமேரியா : ஓவண்ண 

சிந்து : ஓவண்ணலார் . 


   2 . Odakon -- ஓடக்கோன் . 


        இவரைப்பற்றி அதிகமாக விளக்க வேண்டியதில்லை . தெளிவான தமிழ் மொழிப் பெயர் . 


      = ஓடகோன் 

     

      = ஓடக்கோன்  


ஓடம் = படகு , கப்பல் . கோன் = தலைவன் . இப்பெயர் கப்பல் தலைவன் ஒருவனது பெயராகும் . சுமேரியா சென்ற ஏழு குழுக்களில் முதலில் கூறிய தலைவன் ஒரு தொழில் வினைஞன் . ஏழாவது சென்ற கடைசிக் குழுவின் தலைவன் கப்பல் தலைவன் . இதிலிருந்து நாம் அறிவது முதலில் சென்ற பல்வேறு குழுக்களில் தொழில் வினைஞர்கள் போன்றோர் சென்றனர் . 


      இதனை ஒரு சிந்து எழுத்து முத்திரை உணர்த்துகிறது . ஓடக்கோன் என்பது இறைவன் பெயரே ஆகும் . கப்பலோட்டிகளின் முக்கியச் சிறப்பு சிந்து வெளிக் காலம் வரை தொடரந்துள்ளது . இது சிந்து மக்களின் முன்னோர் சிறந்த கடலோடிகளாக இருந்ததை உணர்த்துகிறது இத்தகைய கடலோடிகளின் தலைவன் ஒருவனே சுமேரிய வரலாறு கூறும் ஓடக்கோன் சிந்து முத்திரை இறைவனையோ , குல முன்னோனையோ குறிக்கிறது .

முத்திரை : 


   சனுகு தாரோ : 6213 . 


     # ஆ ணா ட ஓ 


     = ஓடணா ஆ 


     = ஓட அண்ணா ஆ 


ஓடம் = கப்பல் , படகு . 

அணா -- அண்ணா = தலைவன் . 

ஓடணா = கப்பல் தலைவனாகிய இறைவன் . இறைவன் கப்பல் தலைவனாகிறான் . இங்கும் முத்தி ரைக் குறிப்பிடும் ஓடண்ணா என்ப வர் இறைவனாகவோ , குல முன் னோனாகவோ இருக்கலாம் . 


சுமேரியா : ஓடக்கோன் 

சிந்து : ஓடண்ணா . 


  3 . Andubaries -- அந்துபரியஸ் . 


       பாபிலோனியப் பதிவுகள் குறிப்பிடும் இன்னொரு பெயர் மிகவும் முக்கியமானது . தொன்மையான பாஸ்சல் கிரோனிகல் ( Paschal chronicle ) இப்பெயரைத் தருகிறது . பழங்காலத்தில் அர்பாசட் ( Arphaxad ) என்ற பாபல் கோபுரத்தைக் கட்டுவதற்கு உடன் இருந்து உதவிய இந்திய வானியலார் ஒருவரைப்பற்றி அப்பதிவிலுள்ளது . கிரோனிகல் குறிப்பிடும் இவ்வானியலாரே இந்தியருக்கு உரிய வானியல் விதிகளை வகுக்க உதவியவர் என்று இரவுலின்சன் என்பார் J . R . A . S , Xll ஜர்னலில் கூறுகிறார் . அப்பதிவு குறிப்பிடும் பெயர் Andubaries என்பதாகும் . 


     இப்பெயரிலும் ies என்பது கிரேக்கப் பின்னொட்டாகும் . ஆகவே , இப்பின்னொட்டினை நீக்கினால் Andubar -- ies = Andubar . 


       = அந்துபரியஸ் 


       = அந்துபர்   


       = அந்துவர்  


       = அந்துவன் 


       இங்கு , அந்துவன் என்ற தமிழரது பெயரைப் பெறுகிறோம் . அதனால் , அந்துவன் என்ற பெயரின் V > B ஒலிமாற்றம் அடைந்த மரியாதைக் பன்மைப் பெயரே அந்துபர் -- Andubar என்பது . அந்துபர் Andubar -- Uzdubar உஸ்துபர் என்று மருவி அசிரியரின் முன்னோர் பெயராக விளங்குவதாக மேலும் அவர் கூறுவார் . சோவியத் அறிஞர் களும் சிந்து நாகரிக காலத்திலேயே இந்திய வானியல் வகுக்கப்பட்டதாக உரைப்பர் . 


       அந்துவன் என்பது சங்க காலத்தில் தமிழகத்தில் பெருவழக்காக இருந்ததை நாமறிவோம் . அந்துவன் சாத்தன் , அந்துவனார் போன்ற பெயர்கள் வழங்கின இவை தூய தமிழ்ப் பெயர்கள் என்பதில் ஐயம் இல்லை . இந்த அந்துவன் ஒரு புகழ்பெற்ற வானியலார் . கீழ்த்திசை நாடுகளில் ஒன்றிலிருந்து சுமேரியா சென்று அங்கு அர்பாசட் எனப்படும் பாபெல் என்ற விண்ணுயர் கோபுரம் கட்டும் பணியில் பங்கேற்க சுமேரிய நாட்டிற்குச் சென்றிருக்க வேண்டும் . இது ஓவண்ணல் , ஓடக்கோன் காலத் திற்குப் பின்னராக இருக்க வேண்டும்  

நாம் முன்னர் குறிப்பிட்டவாறு மரபுச் செய்தியாக வழங்கி பாஸ்சல் கிரோ னிக்கலில் -- காலவாரிப் பதிவில் -- இடம்பெற்றிருக்க வேண்டும் . 


      சுமேரிய வரலாறு கூறும் இம்மூன்று பெயர்களும் தமிழுக்கே உரியவை . மேலும் , அத்தொன்மைக் காலத்தில் ஏதோ ஒரு தமிழர் வாழும் நிலப்பரப்பில் இருந்து சென்றிருக்க வேண்டும் என கருதுவர் . அக்காலத்தில் நிறுவப் பெற்றுள்ள சான்றுகளின்படி கிழக்கே சிந்து நாகரிக நகரங்கள் -- நகர நாகரி கம் உருவாகவில்லை . சிந்து நகர நாகரிகம் கிமு 3000 அளவிலேயே கருக்கொள்ளத் தொடங்கியது . ஆனால் அவற்றை காட்டிலும் தெற்கே நிலவிய முதிர் பொருநை நாகரிகம் நிலவிய மாந்தை போன்ற நகரங்கள் இருந்தன . அந்நாகரீகம் மெகார்கர் நாகரிக காலத்திலேயே தன்னை இரும்பு காலத்திற்கு வளர்ச்சியுற்று சுமேரியாவுடனான கடல் வணிகம் , எகிப்துடனான கடல் வணிகம் ஆகியவற்றில் தன் தளத்தினை பதித்து கொண்டுவிட்டது. 


இக்கடல் வழியே நடைபெற்ற சுமேரியத் தொடர்பு கிமு 5000 முதலே ஏற்பட்டிருக்க வேண்டும் . அது , கிமு 4500 அளவில் சுமேரிய நாகரிக வளர்ச்சிக்கு வித்திட்டிருக்க வேண்டு மெனத் தெரிகிறது . கடலோடி மீனவர் உருவாக்கிய இத்தொடர்பு அவர்களை உலகின் சிறந்த நாகரிக நிலப்பரப்பில் ஒன்றாக உயர்த்தி விட்டது . சுமேரிய நாகரிகத்தைக் கற்பித்தவர்களென சுமேரிய வரலாறு கூறும் எழுவரும் , வானியலார் அந்துவரும் தமிழர்கள் என்பது உறுதி . ஆகவே , கீழ்த்திசை இந்தியத் துணைக் கண்டத்தில் கிமு 8000 முதல் நாகரிகம் படைத்தவர்கள் தமிழரே என்பதும் அவர்களே மாந்தையை சேர்ந்த மயன் வழிவந்த ஓவிர்கள் என்பதும் உறுதி . 

அத்தொல் பழங்காலத்திலேயே தமிழினம் நனிநாகரிகாக மாந்தையும் அதன் பொருநை நாகரீகமும் உயர்ந்து நின்றதை வரலாறு சுட்டிக்காட்டுகின்றது . அதாவது கடந்த 10,000 ஆண்டுகளாகத் தமிழர் உயர் நாகரிகமான மாந்தை விளங்கியது . இந்நாகரீகம் கி.மு 3900 இல் ஏற்பட்ட கடற்கோள் காரணமாக பெரும் அழிவிற்கு உள்ளாகியது. பின் தன்னை மீளவும் நிலைப்படுத்திக் கொண்டு பெரும் அழிவிற்குள்ளான அறிவார்ந்த வானியல்,பொறியியல்,இலக்கண,இலக்கிய ஏடுகளை தோற்றுவிக்க முதற்சங்கமாகிய தென்மதுரையை ஆங்கே தாபித்தார்கள், அதுவும் கி.மு 2105 இல் ஏற்பட்ட கடற்கோள் காரணமாக அழிந்தது. அதன் பின் குதிமலையை அண்டிய பொன்பரப்பியில் தமது இடைச்சங்க கபாடபுரத்தினை கி.மு 930 வரை நிறுவி இருந்தனர் . அதுவும் அழிந்துபோயிற்று அதன் பின்பாக மணலூர் என்ற இன்றைய யாழ்ப்பாணத்திலுள்ள நாகதீவினை கோநகராக கொண்டு சிறிது காலம் விளங்கிய பின் ஆரியர்களுடைய வருகை காரணமாக விந்தியமலை தொடக்கம் ஈழம் வரை உள்ள தமிழர் தேச பெருநிலப்பரப்பை பாதுகாக்க மதுரையை கோநகராக கொண்டு விளங்கி வந்தமையும் மூவேந்தர்கள் உருப்பெற்று ஆரியர்கள் மீது மாறிமாறி போர் தொடுத்தமையும் கண்ணகிக்கு கோட்டம் சமைத்தமையும் பின்வந்த வரலாறு .

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்