குடும்பனின் பார்வையில்
✒️"ஊர்க் குடும்பு முறை மறுபடியும் மீண்டெழ வேண்டும்."
அண்மையில் ஒரு கட்டுரை வாசித்தேன்..
அதில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் நிலவி வந்த ஊர்க்குடும்பு முறையும் நாட்டு முறையும் எப்படி வலுவிழந்தது என்பதையும் அதனை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியுமான கருத்துக்கள் இடம் பெற்றிருந்தன.
அதில் இடம் பெற்றிருந்த வருத்தம் தோய்ந்த கருத்துக்களை அப்படியே வாசிக்கத் தருகிறேன்.
"... இன்றைய தலைமுறையினர் பல ஊர்களில் குடும்பு நிருவாகத்தை....
கேலிக்கும் நகைப்புக்கும் உள்ளாக்குகின்றனர்"..
இதனால் பாரம்பரியமாக ஊர்க் குடும்பர்களாக இருந்த குடும்பங்கள் கூட ஒதுங்கி விட்டன.
பல ஊர்களில் மதிப்பும் மரியாதை மிக்க தன்னுடைய தந்தை ஊர் குடும்பர் பொறுப்பை ஏற்றுக் கொண்டால் பல பேர் முன்னிலையில் ஊர்க் கூட்டத்தில் தன் வயது ஒத்த இளைஞர்கள் மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள் என்ற காரணத்தினால் ஊர்க் குடும்பர் பதவியை ஏற்கக் கூடாது என்று தங்களுடைய தந்தையிடம் சண்டை போடுகிறார்கள்... "
என்ற ஆதங்கத்தையும் எதார்த்தத்தையும் பதிவு செய்துள்ளது.
தென் தமிழகத்தில் சுமார் 400 கிராமங்களில் ஊர்க்குடும்பு முறையும் நாட்டுக்குடும்பு முறையும் இருந்துள்ளதாக அறிகிறோம்.
புழக்கத்தில் இல்லாததால் பல இடங்களில் வழக்கொழிந்து போய் விட்டன.
குடும்பர்கள் என்று அறியப்பட்ட ஒரு சமூகம் இன்று தாழ்த்தப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுகிறார்கள்.
நல்வாயப்பாக திருநெல்வேலி தூத்துக்குடிப் பகுதியில் மட்டும் தேவேந்திரகுல வேளாளர்கள் திருச்செந்தூரில் அற மடங்களை இன்றும் நிருவகித்து வருகிறார்கள்.
தேவேந்திர குல வேளாளர்கள் பட்டணக் கரையாளர் என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது.
சமூகத்தில் மறைந்து போன பழைய குடிப் பெயர்களையும் குலப் பெருமிதங்களையும் மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.
இது ஏதோ பழைமைவாதத்திற்கு இட்டுச் செல்லும் வழியல்ல.
பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் முயற்சி என்று பொருள் கொள்ள வேண்டும்.
தமிழர்களுக்கு என்று தனித்த பாரம்பரியம் இருப்பது போல அதன் ஆணி வேரான சமூகங்களுக்கும் பண்பாட்டுக் கூறுகள் உள்ளன. இவற்றை மறுதலித்து விட்டு ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரியத்தைப் பேச இயலாது.
சமூகக் கட்டமைப்புத் தான் பாரம்பரிய வரலாற்றைப் பாதுகாக்கும்.
பிறசமூகங்கள் கூட்டமைப்புகளை ஏற்படுத்தி நாடு என்ற பெயரில் கட்டமைவதற்குப் பின்னால் ஒரு பெரும் அரசியல் சூழ்ந்திருப்பதை உணர வேண்டும்.
அண்மையில் தமிழக சட்டமன்றத்தில் அக்.09 தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தது.
நமமில் எத்தனை பேர் அல்லது எத்தனை கிராமங்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தோம்.
நம்மை மதிக்கிறவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்..
அரசியலுக்கு அப்பாற்பட்டு நன்றியறிவிப்புகள் இருக்க வேண்டும்.
அதே போல பெரியவரோ சிறியவரோ படித்தவரோ படிக்காதவரோ சமூகப் பொறுப்புக்கு வந்தவர்களை மதித்துப் போற்ற வேண்டும்.
பெரியவர்களை மதிக்காத சமூகம் தான்தோற்றித்தனங்களால் சுய வரலாற்றையும் அடையாளங்களையும் இழந்து விடும்.
ஆகவே ஊர்க்குடும்பு முறைகளையும், நாட்டுக் குடும்பு முறைகளையும் கட்டமைப்போம்..
அதுதான் பொருளாதாரத்திலும் அரசியலிலும் தலை நிமிர்வை ஏற்படுத்தும்.
©️✒️ மிக்கேல் ஜெயராஜ்.
29.06.2024.
Comments
Post a Comment