குடும்பனின் பார்வையில்
/// பண்டைய மக்கள் நிலைமை///
தமிழரசர் காலத்தில், தமிழ் மக்கள், திணைநிலை திணை மயக்கநிலை ஆகிய இருநிலைப்பட்டு வாழ்ந்து வந்தனர். குறிஞ்சியில் குறவரும் முல்லையில் இடையரும் மருதத்தில் உழவரும் நெய்தலில் செம்படவரும் பாலையில் கள்ளர் மறவர் முதலியோருமாக ஒவ்வொரு திணைக் குலமும் தனித்தனி வாழ்வது திணைநிலை; சிற்றூரிலும் பேருரிலும் நகரிலும் மாநகரிலும் பல திணைக்குலம் கலந்து வாழ்வது திணை மயக்க நிலை.
முதலாவது மருதநிலத்திலும் பின்னர்ப் பிற நிலத்தூர்களிலும் திணைமயக்க நிலையாலும் தொழிற்பிரிவினாலும் பல குலங்கள் ஏற்பட்டிருந்தன. ஆசிரியரும் பூசாரியாரும் துறவியரும் அந்தணர் என்றும் ஆட்சிவினை பூண்டோர் அரசர் என்றும், விற்பனையும் இருவகை வாணிகமும் மேற்கொண்டோர் வணிகர் என்றும், உழுதும் உழுவித்தும் உண்போர் வேளாளர் என்றும், கைத்தொழில் செய்பவர் வினைவலர் என்றும், குற்றேவல் செய்பவர் ஏவலர் என்றும், இரந்துண்போர் இரப்போர் என்றும் #மருதநில மக்கள் எழுபெரு வகுப்பினராக வகுக்கப்பட்டு நால்வகை நிலத்தும் நாடு முழுதும் பரவினர்.
முற்கூறியவாறு பெருநகரங்களில் வந்து தங்கிய அயல் நாட்டார், நாடுபற்றிய குலத்தினராய் வாழ்ந்து வந்தனர்.
மக்களெல்லாரும் பெரும்பாலும் முன்னோர் தொழிலையே செய்து வந்தாலும், அவருக்கு விரும்பிய தொழிலை மேற்கொள்ள உரிமையிருந்தது. பிறப்புப்பற்றிய குலப்பிரிவும், அப்பிரிவுபற்றிய ஏற்றத்தாழ்வும், தீண்டாமையும் முற்காலத்திலில்லை. தொழில் பற்றிய குலப்பிரிவும், அறிவும் துப்புரவும் ஒழுக்கமும்பற்றிய ஏற்றத் தாழ்வுமே இருந்துவந்தன. கல்வி எல்லாருக்கும் பொதுவாயிருந்தது. பாணர் இசை நாடகத் தொழிலையும், வள்ளுவர் கணியத் தொழி லையும் மழிவினைஞர் செல்லியத் தொழிலையும் (Surgery), எங்கும் நடத்தி வந்தனர்.
கரும்பு தின்னக் கைக்கூலி கொடுக்கவும், குழைகொண்டு கோழி யெறியவும் விளைவுஞ் செல்வமும் விஞ்சியிருந்தன.
அறிவும் அருளுஞ்சான்ற அந்தணரும் தம்மையுந் தம் புதல்வரையும் முறைசெய்யும் அரசரும்,
"வடுவஞ்சி வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறை கொடாது
பல்பண்டம் பகர்ந்துவீசும்" 1 (பட்டினப்பாலை, 208-211)
வணிகரும், விருந்திருக்க வுண்ணாத வேளாளரும் பல்கியிருந்தனர்.
பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு உழவனையே தலைமைக் குடிவாணனாகப் பண்டைத் தமிழ்நாடு போற்றிவந்தது. மக்களிடை ஒற்றுமையும் அரசனுக்கும் குடிகட்கும் இடையே இருதலையன்பும் இருந்துவந்தன. ‘அரசனாணை‘ என்ற தொடர் மொழிக்குக் கூட அனைவரும் கட்டுப்பட்டிருந்தனர்.
பிறப்புப்பற்றிய குலப்பிரிவு தமிழ்நாட்டில் ஏற்பட்டதிலிருந்து, தமிழ்நாட்டு நிலைமாறிவிட்டது, தமிழருக்குள் குலப்பற்று மிகுந்து இனவுணர்ச்சி ( national feeling ) குன்றிப்போயிற்று. தீண்டாமையாலும் அதினிலுங் கொடிய காணாமையாலும் தாக்குண்ட ஒருசார்த் தமிழினம் தன் சீரிய நிலைமையையும், மக்களுரிமையையும் இழந்தது. சுருங்கச் சொல்லின், தமிழினம் முழுதும் பல்வேறுவகையில் சின்ன பின்னப்பட்டுத் தாழ்வடைந்து விட்டது.
அடிக்கடி நிகழ்ந்த போராலும், இடையும் இறுதியும் ஏற்பட்ட அயலார் ஆட்சியாலும், படையேறு குழப்பத்தாலும். கொள்ளையாலும், வெள்ளத்தாலும், பஞ்சத்தாலும், வரிக் கொடுமையாலும், பொதுமக்கள் நிலைமை வரவரச் சீர் கெட்டு வந்தது. வறுமையும் அடிமைத்தனமும் வளர்ந்தோங்கின. தனியடி மையும் கொத்தடிமையும் குலவடிமையுமாகப் பற்பலர் மீளா அடிமைப்பட்டு, அவர் வழியினரும் அந்நிலையராயினர். வெளியார் திரள்திரளாய் வந்து குவிந்ததினாலும், மக்கள் தொகை மிக்கதினா லும், பொருளாதார வீதங் குன்றிற்று. குடிகள் வலசை போனதினால் சில ஊர்கள் குடிப்பாழாயின. அன்பாட்சி நீங்கி அதிகாரவாட்சி ஓங்கியதால், குடிகள் பெரும்பாலும் அஞ்சி வாழ வேண்டியதா யிற்று. மக்களிடையே ஒற்றுமையும் நாட்டுப்பற்றும் அரசப் பற்றும் மறைந்தன.
இங்ஙனம், தமிழாட்சி முடிவுற்ற 17ஆம் நூற்றாண்டுத் தமிழகம், பலவகையிலும் அலைப்புண்டு அல்லற்பட்டிருந்தது...
------
பழந்தமிழாட்சி
மொழிஞாயிறு
ஞா.தேவநேயப் பாவாணர்


Comments
Post a Comment