குடும்பனின் பார்வையில்
✒️ பகையை வென்ற கண்டதேவி தேரோட்டம்..!!!!
இன்றைக்கும் பல கிராமங்களில் வாழும் தேவேந்திர குல வேளாளர்களும் கள்ளர்களும் உறவு முறை சொல்லி அழைத்துக் கொண்டு இணக்கமாக வாழ்வதைப் பார்க்கிறோம்.
அநேக கிராமங்களில் கள்ளர்கள் தேவேந்திரர்களோடு மட்டும்தான் உறவு முறை சொல்லியும் அதனை அங்கீகரித்தும் வாழ்கிறார்கள்..
பொருளாதாரப் பாகுபாடு இல்லாத இடங்களில் இது இன்னும் இறுக்கமான பிணைப்பை ஏற்படுத்துகிறது.
அதிகாரம் செலுத்த ஆசைப்படுகிறவர்கள் தான் பிரிவினைகளை விதைக்கிறார்கள்..
1800களின் தொடக்கத்திலேயே தென் தமிழகத்தில் இரு சமூகங்களுக்கு இடையே மோதல் போக்குகள் தொடங்கி விட்டதாக அறிகிறோம்..
1810 காலக் கட்டத்தில் தேவேந்திரர்கள் பரமக்குடியில் ஒன்றுகூடித் தம் சமூகத்தின் ஒற்றுமை குறித்துப் பேசியிருக்கிறார்கள்.
1858 - 59 க்கான சென்னை மாநகர நிர்வாக அறிக்கை இப்பகுதியில் நடந்த சாதியத் துவேசம் குறித்து பேசுவதாக அறிகிறோம்.
அதன் எதிர்ப்பைத் தேவேந்திரர்கள் காட்டியதாக பதிவுகள் உள்ளன.
இப்படியான விரும்பத்தகாத போக்குகளை இலங்கையிலிருந்து வெளியான ஆதி திராவிடன் என்ற பத்திரிக்கை அரசுக்குச் சுட்டிக்காட்டியது.
இவையெல்லாம் அரசியல் தளத்திலும் கோயில் விழாக்களிலும் மோதல் போக்கை வளர்த்தன.
இப்படியான மோதல்கள் கோயில் விழாக்களில் உரிமைப் போராக வெடித்தன.
கண்டதேவி தேரோட்டத்திலும் இரு சமூகங்களுக்கும் பிணக்கு வர வழியேற்பட்டது இவ்வாறு தான்.
சமூக வரலாறுகளைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்கள் இணக்கமாக வாழவே விரும்புகிறார்கள்.
இதெல்லாவற்றையும் இப்போதுள்ள புதிய தலைமுறையினர் "சமூகத்தில் திணிக்கப்பட்ட நீதியற்ற செயல்கள்" என்பதைப் புரிந்து கொண்டார்கள்.
யாரோ ஒரு சிலரின் ஆதாயத்துக்கான முன்னேற்பாடுகளில் சாதிய முரண்களுக்கான பாடத்திட்டங்கள் இப்படித்தான் தயாரிக்கப்பட்டன.
உறவுகளைப் பிரிப்பதற்காகவே சாதியத்துவேசங்களைப் பரப்ப பல கூட்டங்கள் திட்டமிட்டே நடத்தப்பட்டன..
அவற்றில் வெறுப்பை வளர்க்கும் பிரசுரங்கள் தயாரித்து வினியோகிக்கப்பட்டன.
1919 இல் கல்லலில் கள்ளர் கூட்டம்..
1930 இல் தேவகோட்டையில் கள்ளர் கூட்டம்..
1934 இல் சித்தனூர் பள்ளர் எழுச்சி மாநாடு...
1936 இல் கண்டதேவி யில் கோயில் நுழைவுப் போராட்டம்..
1954 இல் இரவு சேரி கோவில் நுழைவுப் போராட்டம் ...
1976 இல் உஞ்சனைக் கொலைகள்...
என இரு சமூகங்களும் வேறுபட்டு நின்றதைப் பார்க்கிறோம்.
இவற்றையெல்லாம் தேவேந்திரர்களும் கள்ளர்களும் மறந்து விட்டு இணக்கமாக வாழ முனைந்திருப்பது பாராட்டுக்குரியதே..
நூற்றாண்டுகள் கழித்து இரு சமூகங்களும் தமக்குள் நிலை கொண்டுள்ள இனம் தெரியப்பகையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது பெரு மகிழ்ச்சியைத் தருகின்றன..
அதன் வெளிப்பாடுதான் தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளையின் தலைவர் மதுரை ம.தங்கராஜ் அவர்களும் , வழக்கறிஞர் சிவ. கலைமணி அம்பலமும் இணைந்து செய்த புரிந்துணர்வு நிகழ்வு.
இந்த ஆச்சரியப் படத் தக்க நிகழ்வுக்குத் துணை நின்றவர் துக்ளக் ஆசிரியர் திரு. குருமூர்த்தி அவர்கள்.
இனியும் பகையை வளர்த்து எந்தப் பயனும் ஆகப் போவதில்லை என்பதை சாதாரண மக்கள் புரிந்து கொண்டதன் வெளிப்பாடுதான் கண்டதேவித் தேரோட்டம் வெற்றிகரமாக நடந்தேறியது..
இரு சமூகங்களும் தலைமுறை தலைமுறையாய்ப் பகையைக் கடத்துவதை நிறுத்திவிட்டு இணக்கமாக வாழத் தொடங்கி விட்டார்கள் என்பதன் சாட்சி தான் மதுரை ஒத்தக் கடையில் நடந்த "ஆன்மீகப் பேரெழுச்சியில் மகத்தான கண்டதேவி திருத்தேரோட்டம் " எனும் புத்தக வெளியீட்டு விழா.
"பகை வென்றான்" களுக்கு எம் வாழ்த்துகள்..
மகிழ்ச்சியாய்க் கூடித் தேரிழுப்போம்..
துணை நின்ற நூல்கள்..
1. 'முதுகுளத்தூர் கலவரம்.'- தினகரன்
2.'பரமக்குடி எனும் படுகளம்' - இளம்பருதி
©️✒️ யாழி .
25.06.2024.

Comments
Post a Comment