குடும்பனின் நாட்டார் பாரம்பரியத்தில்

சிவக்குமார் சொக்கலிங்கம்

நான் திருச்செந்தூர் தேவேந்திரகுல வேளாளர் அற மடங்களின் நிர்வாகிகளில் ஒருவர். தலைவர் பதவி அங்கு இல்லை.

ஒவ்வொரு வருடமும் அனைத்து மடங்களையும் ஒருங்கிணைக்க மற்றும் வைகாசி விசாகம், சஷ்டி திருக்கல்யாண வைபோகம் இந்த நிகழ்ச்சிகளை , நம் மடம் சார்ந்த பணிகளை செய்வதற்கு ஒரு மடம் நியமிக்கப்படுகின்றது. அந்த மடத்தில் இருந்து ஒருவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு இந்த பணிகளை செய்து வருகின்றார். 

என்னுடைய ஊர் ஸ்ரீமூலக்கரை - கீழுர், ஶ்ரீவைகுண்டம். ( சிவகளை - பேட்மாநகரம் அருகில் உள்ளது). எங்கள் ஊரில் உள்ள இடுகாடு மற்றும் பல பகுதிகளில் ஆதிச்சநல்லூர் போல பல தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

எங்கள் ஊர் உங்களுக்கு நன்கு பரீட்சையமான ஊராகும்.

ஒவ்வொரு வருடமும் உங்கள் ஊரில் உள்ள பார்வதியம்மன் கோவில் கொடை விழாவிற்கு எங்கள் ஊரில் இருந்து அனைவரும் கலந்து கொள்வார்கள். 

ஆழ்வார் கற்குளம் கலவரத்திற்கு முன்னால் வரை கோவில் பந்தலில் எங்கள் ஊருக்கு என்று தனியாக இடம் போட்டு வைத்திருப்பார்கள் என்று சொல்வார்கள். 

ஆழ்வார் கற்குளம் பிரச்சனையில் அருகில் உள்ள தேவேந்திரகுல வேளாளர் ஊர்கள் எதுவும் உதவவில்லை என்று வருத்தம் காரணமாக இடையில் தொடர்பு விட்டுப் போனதாக சொல்கிறார்கள்.

எங்கள் ஊரில் போன தலைமுறை வரை ஆண் , பெண் குழந்தைகளுக்கு பார்வதி என்றே பெயரிட்டு வந்தனர்.

எங்கள் ஊர் தேவேந்திரகுல வேளாளர் பட்டணக்கரையார் சிக்க வள நாட்டார் அற மடத்திற்கு பாத்தியபட்டது.

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை மடத்தின் நோட்டுகள் மற்றும் நோட்டீஸ்களில் சிக்க வம்சம் என்று தான் பதியப்பட்டு இருந்தது. ஆனால் மடத்தின் பெயர் அஞ்ஞா ( அஞ்ஞை) மடம் என்று அழைக்கப்பட்டு வந்தது. அரசு ஆவணங்களில் "பட்டணக்கரை தேவேந்திரகுலம் சிக்க வம்சம்" என்று தவறான பதிவு செய்யப்பட்டிருந்தது. 


2018 ஆண்டுகளில் அனைத்து மடங்களையும் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்ற பின்பு தான், எங்கள் மடத்தின் தாய் பத்திரம் , 1900-1920 ஆண்டுகளில் போடப்பட்ட தீர்மானம் மற்றும் கொடுக்கப்பட்ட நோட்டீஸ்கள் பல ஊர்களிலிருந்து மீட்டு பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆவணங்கள் அனைத்திலும் ஒருங்கிணைந்த திருநெல்வேலி ஜில்லா பகுதிகளில் வாழும் "பட்டணக்கரையார் என்று அழைக்கபடும் சிக்க வள நாட்டு தெய்வேந்திர குல மக்கள்" என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது. 1930 களுக்கு அப்புறம் இந்த பெயரை பயன்படுத்தும் வழக்கம் முற்றிலுமாக வழக்கொழிந்து போய் விட்டது .

எங்கள் சிக்க நாட்டு ஊரில் உள்ள மக்களும் குடும்பன் , காலாடி பட்டத்தை மட்டுமே பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். 

ஆனால் மதுரை திரு.ம.தங்கராஜ் அவர்கள் 20 வருடங்களுக்கு முன்னால் ஆய்வு செய்து சிக்க நாட்டார் மடம் என்று தேவேந்திரர் மலரில் பதிவு செய்த ஆவணப்படுத்தி உள்ளார்.

பழனி பட்டயத்தில் பட்டணக்கரையார் என்ற வரலாற்று சிறப்புமிக்க பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், அந்த மக்கள் எங்கு வாழ்ந்தார்கள் என்று யாருக்கும் தெரியாமல் இருந்த வேளையில் , மடம் ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர்தான் "சிக்க வள நாட்டார்கள் தான் பட்டணக்கரையார்" என்ற ஆவணம் மடம் நிர்வாகிகளுக்கு கிடைக்கப்பெற்றது. 

பட்டணக்கரையார் / அஞ்ஞா ( அஞ்ஞை) என்ற பட்டத்துடன் இலங்கை மற்றும் உலகத்தின் பல துறைமுகங்களில் நம் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இதை மறைந்த ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு அவர்கள் பல இடங்களில் இதை பதிவு செய்துள்ளார்.


பட்டங்களையும் பெயர்களையும் தொடர்ந்து நம் மக்கள் பயன்படுத்தி வந்தால் தான் அதை உரிமை கொண்டாட முடியும். அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க முடியும்.


இதே போல் பல பட்டங்களும் பெயர்களும் பயன்பாட்டில் இல்லாமல் வழக்கொழிந்து, மறைந்து போய்விட்டன.

மடங்களில் வசதிகள் செய்யப்படாமல் இருந்ததாலும், தங்குவதற்கு போதிய வசதிகள் இல்லாமல் இருந்த காரணத்தினாலும், வாகன போக்குவரத்து வசதி உருவான காரணத்தினாலும்

400 ஊர்களுக்கு மேல் பாத்தியப்பட்ட சிக்க நாட்டார் மடம் அருகில் உள்ள ஊர்கள் மட்டுமே வந்து பயன்படுத்தும் மடமாக பிற்காலத்தில் மாறி போயிருந்தது.


மேலும் எங்களுடைய மடத்தில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாகத்தை ஒட்டி நாட்டு கூட்டம் போடப்பட்டு வருடாந்திர கணக்கை சமர்ப்பிக்கும் வழக்கம் 2000 வது ஆண்டு வரை இருந்துள்ளது. 


தற்போது 2018 ஆம் ஆண்டு முதல் மீண்டும் ஒவ்வொரு வருடமும் அனைத்து ஊர் குடும்பர்களையும் , ஊர் மக்களையும் அழைத்து நாட்டு கூட்டம் நடைபெற்று வருகின்றது .


தற்போது 1970 ஆண்டிற்கு பின்னால் மடத்தை பராமரிக்க உதவிய, நிர்வாகத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 160 ஊர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு நிர்வாக கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டு வருகின்றது.


திருவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் , கயத்தாறு, எட்டயபுரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் முதுகுளத்தூர் தாலுகவில் உள்ள ஊர்கள் மற்றும் தூத்துகுடி மாவட்டத்தின் எல்லையில் உள்ள தென்காசி, திருநெல்வேலி , விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சில ஊர்கள் மடத்திற்கு பாத்தியபட்டதாக , தொடர்பில் உள்ள ஊராக உள்ளது.


மடத்திற்கு பாத்தியப்பட்ட ஒவ்வொரு ஊரிலிருந்தும் வருடம் ஒரு குறிப்பிட்ட தொகை ஊர் வருட வரியாக இன்று வரை பெறப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மாசி, பங்குனி அல்லது சித்திரை மாதங்களில் ஊர்களில் நடைபெறும் ஊர் கூட்டங்களில் மடத்திற்கென்று தனியாக வரியை எடுத்து வைத்து விடுகிறார்கள். அதை மடத்திற்கு செலுத்தி அதற்கான ரசிதையும் பெற்றுக் கொள்கிறார்கள்.


முந்தைய காலங்களில் இதை வசூலிப்பதற்கென்று மடத்திலிருந்து ஒரு நபரை எல்லா ஊர்களுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். 


இப்பொழுது மடத்தின் வங்கி கணக்கில் பணத்தை செலுத்திவிட்டு அதற்கான ரசீதை பெற்றுக் கொள்கிறார்கள்.


ஊர் வருட வரி ( சந்தாவை) பாக்கி இல்லாமல் முறையாக செலுத்தும் ஊர்கள் தான் சிக்க நாட்டார் மடத்தின் நிர்வாக விஷயங்களில் முறையாக தலையிட முடியும் என்ற கட்டமைப்பு உள்ளது. அப்படிப்பட்ட ஊர்களில் இருந்து தான் நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


முந்தைய காலங்களில் ஊர் குடும்பு - அதனை அடுத்து நாட்டு குடும்பு முறை இருந்துள்ளது. 


மடத்தின் பழைய ஆவணங்களை ஆய்வு செய்த பொழுது சிக்க வள நாட்டார் - நாட்டு கட்டமைப்பில் ஆளுமை மிக்க பல நாட்டுக் குடும்பர்கள் இருந்துள்ளனர். இதே போல ஒவ்வொரு நாட்டார்கள் மடங்களிலும் பல ஆளுமைமிக்க நாட்டு குடும்பர்கள் இருந்துள்ளனர்.


குறிப்பாக சிக்க வள நாட்டு குடும்பு அமைப்பில் கீழத்தட்டபாறை தெய்வத்திரு. சிதம்பரவேல் குடும்பன் முதல் பல நாட்டுத் தலைவர்கள் இருந்ததாக ஆவணங்கள் உள்ளது.


இன்றைய தலைமுறையினர் பல ஊர்களில் ஊர் குடும்பு நிர்வாகத்தை பொதுவெளியில் கணக்கு / கேள்வி கேட்கிறேன் என்று நினைப்பில் ஊர் குடும்பர்களை அவமானப்படுத்தி கேலியும் நகைப்புக்கும் உள்ளாக்குகின்றனர்.

இதனால் பாரம்பரியமாக ஊர் குடும்பர்களாக இருந்த குடும்பங்கள் கூட ஒதுங்கி விட்டது. 

பல ஊர்களில் மதிப்பும் மரியாதை மிக்க தன்னுடைய தந்தை ஊர் குடும்பர் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், பல பேர் முன்னிலையில் ஊர் கூட்டத்தில் தன் வயது ஒத்த இளைஞர்கள் மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள் என்ற காரணத்தினால் ஊர் குடும்பர் பதவியை ஏற்க கூடாது என்று தங்களுடைய தந்தையிடம் சண்டை போடுகின்றனர்.

ஊர் குடும்பு நிர்வாகத்திற்கும், ஊர் குடும்பன் அவர்களுக்கும் நாம் தான் மரியாதை கொடுக்க வேண்டும். நம் வீட்டுப் பிள்ளைகளுக்கு தங்களுக்கு பிடிக்காதவர்கள் ஊர் குடும்பன் பதவியில் இருந்தால் கூட அந்தப் பதவிக்கு மரியாதை கொடுத்து அழகு பார்க்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும்.

அதே நேரத்தில் ஊர் குடும்பன் பொறுப்பில் உள்ளவர்கள் தன்னுடைய ஊர் மக்களின் நலனுக்காக நேர்மையாகவும் எதையும் தியாகம் செய்யும் அர்ப்பணிப்புடன் உள்ளவராக இருக்க வேண்டும். 

இரு பக்கங்களும் அப்படி அமையும் பட்சத்தில் ஊர் குடும்பு நிர்வாகம் வலுப்பெற்று நாட்டு குடும்பு நிர்வாகமும் செழித்து வளரும். 

தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு மீண்டும் ஆளுமை உள்ள பதவிகள் பதவிகள் வந்து சேரும்.


நாட்டு கட்டமைப்பு எவ்வளவு வலிமையானது என்று தமிழகத்தில் பல இடங்களில் , பல சமூகத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் அரசியல் கட்சிகளை , வேட்பாளர்களை தீர்மானிக்கவும், ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்கவும் பல மாவட்டங்களில் பிற சமூகத்தில் உள்ள நாட்டு கட்டமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

நம்முடைய சமூகத்தில் "பருத்திப்கோட்டை நாட்டார் - நாட்டு கட்டமைப்பு" மட்டும்தான் இப்போது வரை ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து அரசியல் , அதிகாரம் சமூக சூழ்நிலைகளில் வெற்றி கண்டுள்ளது, சாதித்துள்ளது.

இதுபோல ஒவ்வொரு நாட்டு கட்டமைப்பும் உருவாக வேண்டும் என்பது தான் சமூக அக்கறை உள்ள ஒவ்வொருவருக்கும் ஆசையாக உள்ளது. 

வேந்தன் வழிபாட்டினாலும் , வேந்தன் அருளினாலும் மீண்டும் இந்த கட்டமைப்பு *திருச்செந்தூரில் உள்ள தேவேந்திர குல வேளாளர் அற மடங்களின்* மூலமாக மீட்டெடுக்கப்படும். 


திருச்செந்தூரில் உள்ள தேவேந்திர குல வேளாளர் அற மடங்களின் நிர்வாகிகளும் அதற்கான பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றோம்

ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர் சமூகமும் அரசியல் ஆளுமை , சமூக அதிகாரம், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் காலம் விரைவில் வரும்.

அதற்கு நாம் அனைவரும் தனிமனித ஒழுக்கத்துடன், சமூக கட்டமைப்புக்கு கீழ்படியும் பண்புடனும் , ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தியாக மனப்பான்மையுடம் இருக்க வேண்டும்

அப்பொழுதுதான் மேலே உள்ள அனைத்தும் சாத்தியமாகும்

*சமூகக் கட்டமைப்பு உருவாக்குதல் என்பது தலைவர்களிடம் இல்லை நம் அனைவரின் ( ஒவ்வொருவரின்) பங்களிப்பில் தான் உள்ளது.*

நன்றி

சிவக்குமார் சொக்கலிங்கம்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்