குடும்பனின் பார்வையில்
"பொய் வழக்குப் போட்டு - என்
புகழையெல்லாம் தீய்த்து
கைவிலங்கு மாட்டியெனை
கடுஞ்சிறையில் பூட்டி
வெங்கொடுமைச் செய்தாலும்
நான் வீழ்ந்துவிட மாட்டேன்,
பங்கமெலாம் கண்டு
நான் பயந்து விடமாட்டேன்,
வஞ்சகத்தின் முன்னே
நான் மண்டியிட மாட்டேன்"
எனத் தொடங்கும் கவிதை பலருக்கும் பிடித்தமானது
எண்ணற்ற நூல்களை எழுதிய தமிழறிஞர் நெடுஞ்செழியன்! பிறந்த தினம் இன்று.
க. நெடுஞ்செழியன் (K. Nedunchezhiyan, 15 சூன் 1944 – 4 நவம்பர் 2022) ஒரு தமிழ்நாட்டுத் தமிழறிஞர், மெய்யியலாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர். விரிவான ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்டுத் தமிழ், திராவிட இயக்கச் சிந்தனைகளையொட்டி “இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” “தமிழ் எழுத்தியல் வரலாறு” உள்ளிட்ட 25 நூல்களை எழுதினார்.
இவற்றுள் ஆசீவகமும், அய்யனார் வரலாறும் என்ற ஆய்வு நூல் கூடுதல் பதிப்புகளைக் கண்டுள்ளது. இவரது ஆய்வுகள் மொழியியல் ஆய்வாளர்கள் நடுவே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. தமிழரின் பழங்கால சமயமும், ஏறக்குறைய தமிழர்களால் மறக்கடிக்கப்பட்டதுமான ஆசீவகம் குறித்து ஆராய்ந்து எழுதி அந்நெறி குறித்த கருத்துகளை மீண்டும் பொதுவெளியில் கொண்டுவந்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி அருகே கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அன்பில் படுகை எனும் சிற்றூரில் வேளாண்மைத் தொழில் செய்துவந்த மீனாட்சி-கந்தசாமி இணையருக்கு 15 சூன் 1944 அன்று பிறந்தார் நெடுஞ்செழியன். இவர் பிறப்பதற்கு முன்பே இவர் குடும்பத்தினர் (குறிப்பாக இவர் தந்தையும் சிற்றப்பாவும்) திராவிட இயக்கத்துடனும் "பெரியார்" ஈ. வெ. இராமசாமியுடனும் தொடர்பில் இருந்தனர். அந்நாட்களில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் முன்னணிப் பேச்சாளராக இருந்த "நாவலர்" இரா. நெடுஞ்செழியனின் புகழ் கருதி அவர் பெயரை இவருக்குச் சூட்டினர். இவருக்கு ஒரு தம்பியும் மூன்று சகோதரிகளும் உண்டு.
சென்னை மாநிலக் கல்லூரியில் தன்னோடு பயின்று தன் இந்தி எதிர்ப்புக் கவிதைகளால் ஈர்க்கப்பட்ட இரா. சக்குபாய் என்பாரை 11 ஏப்ரல் 1971 அன்று சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார் நெடுஞ்செழியன். சக்குபாய் பின்னாளில் மற்றொரு தமிழ்ப்பேராசிரியராகவும் தமிழறிஞராகவும் பெண்ணியச் செயற்பாட்டாளராகவும் உருப்பெற்றார். இவ்விணையருக்கு நகைமுத்து, குறிஞ்சி எனும் மகள்களும் பண்ணன் என்ற மகனும் பிறந்தனர். ஈழப் போரில் இந்திய அமைதி காக்கும் படை ஈடுபட்ட காலத்தில் (1987-90) பதினெட்டு அகவை நிரம்பிய பண்ணன் வீட்டைவிட்டு வெளியேறித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்ததாகவும் பின்னர் ஒரு துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
நெடுஞ்செழியனின் தாயார் மீனாட்சி,
20 மார்ச் 2018 அன்று திருச்சியில் காலமானார்.
கல்லூரிகள், பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியாற்றிக் கொண்டே விரிவான ஆய்வுப் பணிகளிலும் ஈடுபட்ட பேராசிரியர் க. நெடுஞ்செழியன், தமிழ், திராவிட இயக்கச் சிந்தனைகளையொட்டி எண்ணற்ற ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.
பேராசிரியர் க. நெடுஞ்செழியன் எழுதிய நூல்கள்:
1. இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்
2. மெய்க்கீர்த்திகள்
3. தமிழ் இலக்கயத்தின் உலகாய்தம்
4. உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்
5. சமூக நீதி
6. தமிழர் இயங்கியல் - தொல்காப்பியமும் சகர சம்கிதையும்
7. தமிழர் தருக்கவியல்
8. ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்
9. தமிழ் எழுத்தியல் வரலாறு (இணை ஆசிரியர்)
10. சங்க காலத் தமிழர் சமயம்
11. தமிழரின் அடையாளங்கள்
12. சித்தன்னவாயில்
13. சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும்
14. மரப்பாச்சி (கவிதை)
15. நாகசாமி நூலின் நாசவேலை
16. ஆசீவகமும் ஐயனார் வரலாறும்
17. பேரறிஞர் அண்ணாவும் பெருங்கவிஞர் குமாரன் ஆசானும்
18. தமிழகக் குகைப்பள்ளிகளின் சமயம்
19. பக்தி இயக்கங்களும் வைதிக எதிர்ப்பும்
20. இந்திய சமூகப் புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை
21. தொல்காப்பியம் - திருக்குறள் காலமும் - கருத்தும்
22. தமிழர் அகத்திணை மரபுகளும் இந்திய காதற்பாடல்களும்
23. தரும சாத்திரங்களின் சுருக்கமா திருக்குறள்?
24. சமணர் என்போர் சைனரா?
25. தமிழர் சிந்தனை வரலாறு - தொல்காப்பியம் முதல் பெரியாரியம் வரை
பதிப்பித்தவை
1. இந்திய மெய்யியலில் தமிழகம் - பாரதிதாசன் பல்கலைக்கழகம்
2. பேராசிரியர் க.அன்பழகன் பவழமாலை - காலத்தமிழ் பண்பாட்டு ஆய்வு மன்றம்
3. கலைஞரின் படைப்பிலக்கித் திறனாய்வு - தமிழ் பல்கலைக்கழகம்
4. இந்திய சமூகப்புரட்சியில் - ஜோதிபா ஃபூலே - பெரியார் - அம்பேத்கர் - பாரதிதாசன் பல்கலைக்கழகம்
5. பண்முக நோக்கில் பேரறிஞர் அண்ணா
6. ஆசீவகம் - வேரும் விழுதும்
ஆசீவகமும், அய்யனார் வரலாறும் என்ற இவரது ஆய்வு நூலானது கூடுதல் பதிப்புகளைக் கண்டுள்ளது.
திராவிட இயக்கத்தோடு மிக நெருக்கமான உறவு கொண்ட குடும்பம் பேராசிரியர் நெடுஞ்செழியன் குடும்பம். 1968 ஆம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்தபோது நடைபெற்ற உலகத் தமிழர் மாநாடு தொடர்பாக மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை அண்ணாவின் கரங்களால் பெற்றவர் நெடுஞ்செழியன்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த அனைத்து தமிழ் இயக்கங்களோடும் இணைந்து பணியாற்றி தமிழ் - தமிழர் நலனுக்காகத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார்.
இறுதிக்காலமும் மறைவும்
தன் இறுதிக்காலத்தில் ஆம்பூரை அடுத்த பனங்காட்டேரி பகுதியில் வேளாண் நிலம் வாங்கிக் கொய்யா, மிளகாய், கம்பு போன்ற பயிர்களை விளைவித்தார் நெடுஞ்செழியன். இயற்கை வேளாண்மை குறித்துப் பயிலரங்குகள்,உழவர்களின் சிக்கல்கள் குறித்து தினமணி நாளிதழின் ஆசிரியர் கி. வைத்தியநாதனிடம் உரையாடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளிலும் ஈடுபட்டார்.
திருச்சி கே. கே. நகரில் வாழ்ந்துவந்த நெடுஞ்செழியன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி பொது மருத்துவமனையில் அரசின் துணையுடன் சிகிச்சை பெற்றுவந்தார். எனினும் அங்கேயே 4 நவம்பர் 2022 அன்று அதிகாலை 3 மணி அளவில் தனது 78-ஆம் அகவையில் காலமானார்.அவர் உடலுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.பின்னர் அவரது உடல் அன்று மாலையே திருச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கே.கே.நகர் இராசாராம் சாலையில் உள்ள மனிதம் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் 5 நவம்பர் அன்று மாலையில் அன்பில் படுகைக்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
பகிர்வு

Comments
Post a Comment