குடும்பனின் லயிப்பில்

 "இயற்கையின் அழகான விளையாட்டு அது!!!!!" 


தென் தமிழகத்தின் மிக ரம்மியமான சூழல் ஜூன்,ஜூலை மாதத்திற்கானது



அந்த ஆனி ஆடி மாதங்கள் தென்முனையில் அதுவும் கன்னியாகுமரி பக்கம் அவ்வளவு அழகானவை.


இந்த கன்னியாகுமரி மாவட்டம் இரு கட்சிகளாலும் பணம் வாங்கும் தமிழகம் போல இரு பருவ காற்றுகளாலும் மழைபெறும் மாவட்டம் , அதனில் அந்த சாரல் அவ்வளவு அழகு.


ஆனி, ஆடி சாரல் என அழைக்கபடும் சாரல் மழை அந்த காலகட்டத்தில்தான் சூழலை மிகமிக அழகாக்கும்.


மேற்கு தொடர்ச்சி மலையினை ஒட்டிய பகுதிகளில் மேற்கே கேரளாவில் கொட்டிதீர்க்கும் மழையில் ஒரு சாரலே அங்கு சாரல்மழை, குற்றாலத்தில் அதுதான் பருவம்.


நெல்லுக்கு பாயும் நீர் புல்லுக்கும் பாய்வது போல, கேரளாவில் கொட்டும் கனமழை இங்கு சாரலாக தூறும்.

கொஞ்சம் தூறல்,கொஞ்சம் வெயில்,கொஞ்சம் குளிர், நிறைய கருமேகம் கலந்த‌ அந்த சாரலில் ஆயிரம் சுகங்கள் உண்டு. 

அது ஒரு வசீகரமான அழகு


மொட்டை மாடியில் நின்று மேற்கு தொடர்ச்சி மலையினை நோக்கும் பொழுது மாபெரும் மேககூட்டமும் அது ஆங்காங்கே கால் பரப்பி தூவும் மழையும், இதமான காற்றும் உலகின் வேறெங்கும் கிடைக்காத சூழல்.


உறுதியாக சொல்லலாம் உலகின் வேறு எங்கும் அந்த ரம்மியமான சூழலை போல காண்பது மிக அரிது, அதன் அருமை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆல்ப்ஸ் மலையோ,காஷ்மீரிய மலை சரிவுகளோ கூட ஒருக்காலமும் அந்த மனதை வருடும் வசந்தத்தினை கொடுக்கவே இயலாது.


எதுவுமே அளவுக்கு மீறாமல் அல்லது குறையாமல் காளிதாசன் கவிதை போல, அழகான சிற்பம் போல அப்படி ஒரு சுகந்தம்.


இவ்வழகான சாரல் அருள் பெற்ற இடங்கள் மிக குறைவு, குமரியில் நளினமும் நாட்டியமும் ஆடும் சாரல் , ஆரல்வாய்மொழி வரை அந்த ஆசி உண்டு.


பின் செங்கோட்டை,தென்காசி,குற்றாலம் பகுதியில் மற்றொரு ஆனந்த நடனம், பின்னர் குமுளி,தேனி பகுதியில் மற்றொரு அரங்கேற்றம்.


கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஓங்கி பெய்யும் பொழுது,எங்கெல்லாம் மலைப்பாதைகள் இயற்கையாய் அமைந்துள்ளதோ, அது வழியாக தமிழகத்தினை எட்டிபார்ப்பது அதன் வழக்கம்


அவ்வகையில் ஆனியும் ஆடியும் அவர்களுக்கு சாரல் மழை


கேரளாவில் கொட்டி தீர்த்துவிட்டு, ஆரல்வாய்மொழி கணவாய் வழியாக பெரும் ஆக்ரோஷமாக வரும் காற்று, மேல்காற்று என்றும்,ஆடிகாற்று என்றும் அழைக்கபடும் 


அந்த கடும் காற்று தேரிகாட்டில் மண்ணை அள்ளிபோட்டுவிட்டு வங்ககடலில் நீரெடுத்து மறுபடி வங்கம்,இமயம்,டெல்லி,பஞ்சாப் என பொழிந்து,பொழிந்து கொட்டும். கங்கையும்,பிரம்மபுத்திராவும் அவற்றின் துணையாறும் பொங்கிவழியும். பெரும் வெள்ளம் வடநாட்டில் தாக்கும்.


அந்த கடும் காற்று இன்னொரு அரும் பணியினையும் செய்யும். அக்காலத்தில் உலக புகழ்பெற்ற தன் தமிழக அடையாள உற்பத்தியின் முதல்படி.


இயற்கையின் அழகான விளையாட்டு அது 


கடும் வேகமாய் வீசும் காற்று, கிழக்கே தேரிக்காடு மணலை எடுத்து ,கடலில் மேல் நல்ல தண்ணீருக்காய் வாய் பிளந்து கிடக்கும் சிப்பியின் மீது வீசும்,தனக்கு மிக உறுத்தலான மண்துகளை சுற்றி சிப்பிகள் கட்டும் திரவமே இறுகி முத்தாய் மாறும்.


சரி அந்த சிப்பிக்கள் ஏன் நல்ல நீருக்காய் வாய்திறந்து கிடந்தன என்றால் அதில்தான் அடுத்த ரகசியம் இருக்கின்றது.


வங்கத்தில் கொட்டும் கனமழையால் அந்த கங்கை பெரும் வேகத்தில் கடலில் பாயும், அந்த நீரோட்டம் இந்த முனைவரை எட்டும், அப்போது அந்த நல்ல நீரினை பருக சிப்பிக்கள் இப்படி வருமாம், அதன் மேல் கடும்காற்று தேரிகாட்டு மணலை கொட்டுமாம்.


எப்படியான அற்புதமான இயற்கை விளையாட்டு அது, இதனால்தான் அன்று தென்னகத்து முத்துக்கள் பெரிதாக விளைந்தன அவை உலகெல்லாம் கொண்டாடபட்டன‌


ஆதிகாலம் தொட்டே அந்த முத்துக்கு உலக சந்தையில் கடும் மரியாதை, சிலப்பதிகாரம் காலம்தொட்டே கிரேக்கமும்,எகிப்தும் அதற்கு காத்துகிடந்தது. பெரும் அரசுகளை புரட்டிபோட்ட அழகிகள் (தினத்தந்தி குறிப்பிடும் அழகி அல்ல) அதிலும் பேரழகி கிளியோபாட்ரா நமது தென்பாண்டி நாட்டின் முத்துக்களை அணிந்திருந்தாள்.


 இன்னும் எத்தனை சொப்பன சுந்தரிகள் அணிந்திருந்தினரோ? 


"பாண்டிநாடு முத்துடைத்து" என பெயர்பெற பெரும் காரணம் முத்து, அம்முத்து விளைய பெரும் காரணம் ஆனி ஆடியில் அம்மியையும் தூக்கி செல்லும் அளவுக்கு வீசும் காற்று, அப்படியே வங்கத்தில் கொட்டும் கனமழை.


அக்காலம் முதலே "நல்ல மிளகு" கேரளாவின் சொத்து, சாரல்மழை சீசனில் தான் மிளகு நன்கு விளையும். எப்பொழுதாவது சாரல் மழை பார்க்கும் தென்பகுதி பாண்டிய நாட்டு விவசாயிகளுக்கு திடீர் யோசனை வந்தது. கம்பு,சோளம்,நெல் இவற்றிற்கு பதிலாக மிளகு விளைய வைத்தால் என்ன?. 


ஒரு இரவில் மலையாளம் சென்று 'நல்ல மிளகு' நாற்றுக்களை கொள்ளையடித்து வந்தார்கள். வயல் எல்லாம் நட்டுவைத்தார்கள், கனவில் மிளகிற்கு வெள்ளையன் வந்து பாண்டி நாடெங்கும் முழங்காலில் நின்றான்.


மலையாளிகள் திருவாங்கூர் மன்னனிடம் (கன்னியாகுமரியும் அவர்களோடு இருந்தது) முறையிட்டார்கள், போரிட்டு பாண்டிநாட்டுகாரர்களை பிடியுங்கள்,கொல்லுங்கள் என கோரிக்கையிட்டனர்.


மன்னன் அமைதியாக சொன்னார், "பாண்டிநாட்டுக்காரன் மிளகு நாற்றைத்தான் கொண்டு செல்லமுடியும், ஆனிஆடிசாரலை அவனால் கொண்டு செல்லமுடியுமா? அது இல்லாத மிளகுசெடி கொழுந்துகூடவிடாது, நமக்கென்ன நஷ்டம், போய் வேலையை பாருங்கள்"


அது மிக நிதர்சனமான உண்மை, ஆனிஆடிசாரல் அவர்களுக்கானது, முத்துக்கள் கடற்கரை மக்களுக்கானது. பெருமழை வட இந்தியர்களுக்கானது.


வெறும் வேகமாக வீசும் அந்த கொடுங்காற்று மட்டும் ராதாபுரம் பகுதிமக்களுக்கானது. இனி அதையும் கல்குவாரி பள்ளத்தில் இருந்துதான் அவர்கள் வாங்க வேண்டும், நிலைம அப்படி ஆகிவிட்டது.


எது எப்படி இருப்பினும், அந்த நாகர்கோவில் பக்கம் ஆனி ஆடி காலநிலையும், சுகமான சாரலும்,இதமான தென்றலும்,அந்த மண்ணின் மணமும்,சாரலோடு வானத்தினை பார்க்கும் பொழுது கிடைக்கும் ஏகாந்தமும்,மலைமீது கவிழ்ந்து கிடக்கும் மேககூட்டமும் சாரல் முகத்தில் படும்பொழுது வரும் சிலிர்ப்பும் உலகின் வேறு எந்த பகுதியிலும் கிடைக்காது, 


அது ஒரு வரம், அப்பகுதியில் மட்டும் கிடைக்கும் ஒரு சுகந்தம்.


குற்றாலம் என்பது அருவியின் அழகாக இருக்கலாம், ஆனால் குளிரும் மெல்லிய தூரலும் ரம்மியமான காட்சியும் மனதை அப்படியே கட்டிபோடும் அழகும் அபூர்வமான சிலிர்ப்பும் கன்னியாகுமரி சாரலில்தான் உண்டு

..


Stanley rajan

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்