குடும்பனின் பார்வையில்
ஆடித் திருவாதிரை.
02.08.2024...
*சோழப்பெருவேந்தன் இராஜேந்திர சோழன் பிறந்ததினம்*
நினைவில் நிற்கும் ஓர் வரலாற்று நிகழ்வு.
"கங்கை கொண்ட சோழன்"
உடையார் ஸ்ரீராஜேந்திர சோழன்
சோழபுரம் என்னும் ஒரு தலை நகரை புதிதாக உருவாக்குகிறார். தனது தலைநகரத்திலேயே சோழீஸ்வரம் என்ற பெயரில் பிரமாண்டமாய் ஒரு சிவன் கோவில் கட்டுகிறார். மக்கள் பயன்பாட்டுக்காக மிகப்பெரும் ஏரி ஒன்றை வெட்டுகிறார்.
தனது நகரத்தையும், சோழீஸ்வரர் கோவிலையும் சோழபுரம் ஏரியையும் கங்கை நீரால் சிறப்பிக்க வேண்டும் வேண்டும் என்பது அரசனின் விருப்பம்.
உள்ளூரில்தான் காவிரி ஆறு கடலென ஆர்ப்பரிக்கிறதே..
பிறகு எதற்கு கங்கையிலிருந்து நீர்.?
உள்ளூரில் கற்கள் ஏராளமாக இருந்தாலும் இமயத்து கல்லில்தானே கண்ணகிக்கு சிலை செய்தான் சேரன் செங்குட்டுவன்.
உள்ளூரில் மலைக்குன்றுகள் இருந்தாலும் இமயத்துப் பாறையில்தானே புலிச்சின்னம் பொறித்தான் சோழப் பெருவேந்தன் கரிகாலன்.
இவர்கள் வழி வந்த இராஜேந்திரனுக்கும் அந்த விருப்பம் இருக்கும்தானே.
கங்கை நதிக்கரையில் இருக்கும் வடபுலத்து வேந்தர்களின் அதிகார மமதையை அடக்கி சோழ பராக்கிரமத்தை பறை சாற்ற வேண்டும். தமிழ் நிலத்து வீரத்தையும் தீரத்தையும் கங்கை கரைப்பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.
கங்கை நீரை தனது சோழநாட்டிற்கு கொண்டு வரவேண்டும். கங்கை கொண்ட சோழபுரம் என்று தனது நகருக்கு பெயர் சூட்டவேண்டும். கங்கை கொண்ட சோழன் என்னும் பட்டம் தனக்கு வேண்டும்.
தீர்மானித்தார் உடையார் இராஜேந்திர சோழர்.
சோழப்பேரரசின் அந்த மகத்தான கங்கை படையெடுப்புத் தொடங்கியது.
அத்தனை எளிதல்ல வெற்றி...
மிக மிக நீண்ட தொலைவு.
பெரும் மலைக் குன்றுகளும் அடர்ந்த காட்டுப் பகுதியும் குறுக்கிடும் பெரும் ஆறுகளும் இன்னும் பல
இயற்கைச் சீற்றங்கள்.
வடபுலத்து அரசர்களின் பெரும்படை.
ஐந்துக்கும் மேற்பட்ட வட புலத்து அரசர்களை வென்றால்தான் கங்கை ஆற்றில் கால் வைக்கமுடியும்.
இத்தனைத் தடைகளையும் தாண்டி சாதித்தது சோழர் படை.
கங்கைப் பகுதி மன்னர்களை வென்று கங்கை நீரை சோழ நாட்டிற்கு கொண்டு வந்தது.
எப்படி நடந்தது இப்படையெடுப்பு.?
சோழர் படைகள் எவ்வாறு சென்றது.?
என்ன வகையான படைப்பிரிவுகள் புறப்பட்டது.?
எவ்வழியே சென்றது.?
குறுக்கிடும் கடல் போன்ற ஆறுகளை சோழர் படை எவ்வாறு கடந்தது.?
சோழர்களை எதிர்த்த வடபுலமன்னர்கள் யார்.?
அவர்கள் எவ்வாறு முறியடிக்கப்பட்டார்கள்.?
கங்கை நீர் எவ்விடத்தில் எடுக்கப்பட்டது.?
எடுக்கப்பட்ட கங்கை நீர் எவ்வாறு சோழபுரம் கொண்டு வரப்பட்டது.?
சோழபுரம் வந்த கங்கை நீரை வைத்து என்ன செய்தார்கள்.?
இந்த அனைத்து விபரங்களையும்
திருவாலங்காடு செப்பேடுகளும் இராஜேந்திரனின் சாசனக் கல்வெட்டுகளும் வரலாற்றுத் தரவுகளாக பதிவு செய்கின்றன.
தமிழர்களின் பெருமைமிகு வீர வரலாற்றை பதிவு செய்யும் திருவாலங்காடு செப்பேட்டின் செய்யுள்
109 - 124 வரை உள்ள வடமொழிப் பகுதியின் தமிழாக்கம்..
--------------------------------
செப்பேட்டின் 109 வது செய்யுள்...
"பகீரதனின் தவத்தின் வலிமையால் பூமிக்கு வந்த கங்கை நீரை தன் தோளின் வலிமையால் அந்த கங்கை நீரைக்கொணர்ந்து தன் நாட்டை புனிதமாக்க முயன்றான்
இராஜேந்திரன்"
செய்யுள் 110..
"கங்கை நதிக்கரையில் வாழும் பகையரசர்களை வெல்வதற்கு வீரத்தில் சிறந்தவனும் பலமான படைகளை உடையவனும் அறமறிந்தோரில் முதல்வனுமான தன் படைத்தலைவனுக்கு ஆணையிட்டான்.
செய்யுள் 111..
"பனிமலையிருந்து வரும் கங்கை நீரைப் போல் கல கல என்னும் ஒலி எழுப்பியவாறு
அப்படைத்தலைவனின் குதிரைகள் சென்றது "
செய்யுள் 112...
"யானைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட பாலத்தால் இராஜேந்திரனின்
படைகள் கங்கை நதியை கடந்தது "
செய்யுள் 113..
"யானைகள், குதிரைகள், வீரர்கள் இவர்கள் எழுப்பிய புழுதி பறந்தவாறு விக்ரமச்சோழனின் ( இராஜேந்திரன்)
படைகள் எதிரி மணடலத்தில் நுழைந்தன."
செய்யுள் 114..
"இராஜேந்திரனின்
படைகள இந்திரரதனை முதலில் வென்று சந்திரகுலத்தின் ஆபரணமாய் திகழும் இடத்தைக் கைப்பற்றியது"
செய்யுள் 115
"நடைபெற்ற போரில் அம்புகளால் துளைக்கப்பட்ட, தண்ட நுனியினை உடைய வெண் கொற்றக்கொடை
கீழே விழுந்தது. இது சந்திரனின் பிம்பமே கீழே விழுந்தது போல் இருந்தது "
செய்யுள் .. 116
"சிபிகுல அரசனின் ( இராஜேந்திரன்) படைத்தலைவன்
இரணசூரனை வென்று தர்மபாலனின் நாட்டில் நுழைந்தான்.பிறகு தேவநதியான கங்கை நோக்கிச் சென்றான் "
செய்யுள் 117...
"அந்த நதிக்கரையில் இருக்கும் அரசர்களை படைத்தலைவன் வென்றான். அந்த புனித நீரை தன் தலைவன்
மதுராந்தகனுக்காக கொண்டு வந்தான்."
செய்யுள் 118..
"கோதாவரி நதிக்கரையை இராஜேந்திர சோழன் அடைகிறார். சந்தனப்பூச்சுகள் கொண்டு நதிக்கரையில்
நீராடி முடிக்கிறார். வெற்றியுடன் வரும் தன் படைத் தலைவனை வரவேற்கிறார்."
செய்யுள் 119
"அவனுடைய வேகமான அந்தப்படை எதிரி அரசனை வென்று பெரும் புகழ் மற்றும் இரத்தினங்கள் இவற்றுடன் கங்கை நீரையும் தன் தலைவனுக்காக கொண்டு வந்தது "
செய்யுள் -124
"தன்னுடைய தேசத்தில் சோழ கங்கம் என்ற பெயருடையதும், கங்கை நீரால் ஆனதுமான ஜய ஸ்தம்பம் ஒன்றை நிறுவினான்."
( நீர் மயமான வெற்றித்தூண்)
----------------------------------
இவ்வாறு முடிந்தது இராஜேந்திரனின் கங்கை படையெடுப்பு..
இப்படையெடுப்பின் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.
வீரர்கள் படை, குதிரைப்படை, யானைப்படை என்ற சோழர்களின் முப்படைகளும் பங்கேற்றன.
மிக பிரம்மாண்டமான கங்கை ஆற்றை யானைகளைக்கொண்டு பாலம் அமைத்து கடந்தார்கள்.
எதிர்த்த மன்னர்கள் அனைவரையும் வென்று கங்கை நீர் எடுக்கப்பட்டது.
கோதாவரி நதிக்கரையில் நீராடிய சோழப் பேரரசர் இராஜேந்திரன் கங்கை நீருடன் வரும் தனது படைகளை வரவேற்றார்.
கங்கை நீர் கொண்டு சோழபுரம் சிறப்பிக்கப்பட்டு கங்கை கொண்ட சோழபுரம் என்று பெயர் சூட்டப்பட்டது. சோழீஸ்வரருக்கு கங்கை நீரால் திருமஞ்சனம் செய்து கங்கை கொண்ட சோழிஸ்வரர் என்று பெயரிடப்பட்டது.
ஏற்கனவே வெட்டி வைத்திருந்த அந்த பிரம்மாண்டமான சோழ ஏரியில் கங்கை நீர் ஊற்றப்பட்டு சோழகங்கம் ஏரி என்று பெயர் வைக்கப்பட்டது. ஏரியில் ஊற்றப்பட்ட கங்கை நீர் ஒரு நீர் மயமான வெற்றித்தூண் போல் இருந்தது
( ஜல ஸ்தம்பம்)
இந்த பெருவெற்றியின் விளைவாக கங்கை கொண்ட சோழன் என்னும் வரலாற்று பெயர் பெற்றார்
ஸ்ரீராஜேந்திர சோழர்.
---------------------------
தமிழர்களின் வரலாற்று பெரு நிகழ்வான சோழர்களின் கங்கை படையெடுப்புத் தொல்லியல் தரவுகளை செயற்கை செய்யறிவு(AI) மூலம் காட்சிகளாக உருவகப்படுத்திப் பார்த்தால் சம காலத்திற்கே சென்ற உணர்வு.
Comments
Post a Comment