குடும்பனின் பார்வையில்

 தேவேந்திர குல வேளாளர் அறிவு பெருமக்களே... அரசு ஊழியர்களே... 

சற்று நேரம் ஒதுக்கி இந்த நீண்ட பதிவை பொறுமையுடன் வாசியுங்கள்




மிகவும் முக்கியமான அதேநேரம் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் வருங்கால சந்ததிகளுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு தீர்ப்பினை நேற்றைய தினம் உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது. தமிழ்நாடு அரசின் கீழான கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றில் அருந்ததியருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புதான் அது. அருந்ததியர் மக்கள் உண்மையிலேயே மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 

ஆனால் இந்த மூன்று சதவீத உள் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்ததன் உள்குத்துகளையும், துரோகங்களையும், வெளியில் தெரியாத அரசியலையும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

 அதற்கு தேவேந்திரகுல வேளாளர் அரசு ஊழியர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்????


அருந்ததியருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்தது அடிப்படையிலேயே தவறாகும். 

அதாவது தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்புகள் எடுக்கப்படவில்லை. எந்தெந்த சாதி எவ்வளவு மக்கள் தொகை இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் எதுவும் அரசிடம் இல்லை. அப்படி இருக்கும்போது எந்த அடிப்படையில் மூன்று சதவீதம் வழங்கப்பட்டது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. 

அதிலும் அந்த மூன்று இடங்களையும் சுழற்சி முறையில் பட்டியல் இனத்தவர்களுக்கான முதலாவது வாய்ப்பில் அருந்ததியினருக்கு வழங்கப்பட்டது என்பது பட்டியல் இனத்தில் பெரும்பான்மையாக உள்ள ஆதிதிராவிடர்கள், தேவேந்திர குல வேளாளர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.

 இதன் மூலம் ஒவ்வொரு துறையிலும் இருக்கக்கூடிய பெரிய பதவிகளில் அருந்ததிய மக்களே நியமிக்கப்படும் துர்பாக்கியமான நிலை கடந்த பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இதனை தற்போது உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தி உள்ளது. 


பட்டியலினம் என்பது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, அடக்கப்பட்ட என்ற வரையறைக்குள் பல சாதிகளை அடைத்து ஏற்படுத்தப்பட்ட ஒரு அட்டவணை ஆகும். அத்தகைய சாதிகளுக்குள் வேறுபாடுகளை ஏற்படுத்துவது மிகப்பெரிய முரண்பாடான விஷயம். அதனைத் தான் தமிழ்நாடு அரசு செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தமிழ் மொழி பேசாத, தமிழர் அல்லாத அருந்ததிய மக்கள் மிகப்பெரிய பதவிகளை எளிதில் அடைந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

சரி போகட்டும். அனுபவித்துப் போகட்டும். எங்களுக்கு இழிவுடன் கூடிய எதற்கும் பயன்படாத இட ஒதுக்கீடு தேவையில்லை என்று மக்கள் ஒருமித்தமாக முடிவுசெய்து எங்களை பட்டியல் இனத்திலிருந்து மாற்றி மிகவும் பிற்படுத்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வையுங்கள் என்று பல வருடங்களாகப் போராடியும் அந்த கோரிக்கைக்கு யாரும் செவிமடுக்கவில்லை. 

அதாவது நீங்கள் தாழ்த்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள். நீங்கள் அங்கு தான் இருக்க வேண்டும். ஆனால் அங்கும் உங்களுக்கு, நீங்கள் முன்னேறுவதற்கு நாங்கள் ஒருபோதும் வாய்ப்பு வழங்கப் போவது இல்லை என்று தமிழ்நாட்டை ஆளும் அரசுகள் ஒரு முடிவோடு ஒரு மிகப்பெரும் சமுதாயத்தின் அடையாளத்தையே அழிக்கும் துரோகச் செயலைத் தொடர்ந்து செய்து வருவதை இன்னும் எத்தனை வருடங்களுக்கு பொறுத்துப் போவது. 


ஏற்கனவே அரசியலிலும் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு போதிய அங்கீகாரமோ, பொறுப்புகளோ இல்லை. அதனால் கல்வி ஒன்றே தங்களை வாழ்விக்கும் என்ற மன உறுதியோடு நன்கு கற்று அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசுப் பதவிகளை வைத்தே அவர்கள் முன்னேறி வருகின்றனர். தான் சார்ந்த சமுதாயத்தையும் முன்னேற்றத் துடிக்கின்றனர். அதற்கும் இப்போது தமிழக அரசுகள் முட்டுக்கட்டை போட்டு அழித்தொழிக்க முற்படும்போது அதனை வெறுமனே கடந்து செல்வதுதான் படித்த, அறிவான தேவேந்திர குல வேளாளர் அரசு ஊழியர்களின் செயல்பாடாக இருக்கப் போகிறதா...? 


இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பல வருடங்களாக பல தடைகளுக்குப் பிறகு இறுதி விசாரணைக்கு வந்து, பட்டியலினத்தில் உள்ள மற்ற பெரும்பான்மை சாதிகளான ஆதிதிராவிடர் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தினர் சார்பில் சரியாக வாதம் எடுத்து வைக்கப்படாமல் அல்லது வழக்கை கவனிக்காமல் போனதன் விளைவுதான் நேற்றைய இறுதி தீர்ப்பு. 

அதே நேரம் மற்றொருபுறம் அருந்ததிய மக்கள் மன உறுதியோடு ஒற்றுமையாக அமைப்பாக திரண்டு பணம் வசூல் செய்து வழக்கை நடத்தி வெற்றி பெற்றுள்ளார்கள். இதற்காக இரண்டு மூன்று பேர் தீக்குளித்து உயிரை இழந்தனர். 


இதிலிருந்து ஒவ்வொரு தேவேந்திர குல வேளாளரும் தம்மைத் தாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 

அருந்ததியர் விவரமானவர்களா? தேவேந்திரகுல வேளாளர்கள் விவரமானவர்களா ?

அவர்கள் புத்திசாலிகளா ? 

நீங்கள் புத்திசாலிகளா ?

அவர்கள் ஒற்றுமையாக வாழ்கிறார்களா?

நீங்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்களா...?


இப்படி பலப்பல கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டும். 


இப்போதும் காலம் கெட்டுவிடவில்லை. எந்த அரசும் நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. இனிவரும் அரசுகளும் அவ்வாறே இருக்கும் என்பதுதான் நிதர்சனம். எனவே படித்த அரசு ஊழியர்கள் ஒரு அமைப்பாகத் திரண்டு, மிகப்பெரும் சமுதாயமாக தமிழகத்தில் இருக்கும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் எந்தெந்த வழிகளில் எல்லாம் புறக்கணிக்கப்படுகிறார்கள், அவமதிக்கப்படுகிறார்கள், அடிமைப்படுத்தப்படுகிறார்கள், வாழ்வாதாரத்தை வாழும் உரிமையை இழக்கிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள் என்பனவற்றை நம் மக்கள் வாழும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று தெருமுனை பிரச்சாரக் கூட்டமாக நடத்த வேண்டும்.

 ஒவ்வொருவரையும் அறியும்படி செய்ய வேண்டும். ஒரு குறும்படமாக தயாரித்து கிராமம் கிராமமாக நமது மக்களை சந்தித்து இரவு வேளைகளில் விளக்கிப் பேசி அந்த குறும்படத்தை திரையிட்டால் மக்களிடம் ஒற்றுமை ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக நடத்தினால் அதன் மூலம் நமது மக்களுக்கு நாம் நினைக்கும் பட்டியல் வெளியேற்றம் நடைபெற வாய்ப்பாக அமையும். நமது மக்களுக்கான அரசியல் அங்கீகாரமோ இன்ன பிற விஷயங்களோ கிடைப்பதற்கு வாய்ப்புகளும் ஏற்படும்.

 இது நமது வாழ்நாளில் நடைபெற விட்டாலும் நாம் விதைக்கும் விதை நமக்குப் பிறகு நமது தேவேந்திர குல வேளாளர் சந்ததிகளுக்கான ஒரு வழியினை, வாய்ப்பினை நாம் ஏற்படுத்தும். இந்த மன உறுதியோடு ஒவ்வொரு தேவேந்திர குல வேளாளர் அரசு ஊழியரும் இது தொடர்பாக சிந்தித்து ஒருங்கிணைய வேண்டும் இது காலத்தின் கட்டாயம்.




Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்