குடும்பனின் பார்வையில்
✒️வைக்கோல் படப்பும்,
பட்டறையும் ...
இப்போது மாதிரி முன்பெல்லாம் மாப்பிள்ளை தேடுபவர்கள் மாப்பிள்ளை என்ன வேலை செய்கிறார் என்று கேட்பதில்லை..
மாறாக மாப்பிள்ளை வீட்டாருக்கு எவ்வளவு நிலபுலன்கள் இருக்கிறது என்பதைத்தான் விசாரித்தார்கள்..
அதன் அளவுகோளாக ஒருவரின் வைக்கோல் படப்பையும், நெல் பட்டறையையும் பார்த்தார்கள்..
அவங்க வீட்டு பட்டறைய அண்ணாந்து பாத்தா உருமா கீழ விழுந்துடும் என்பார்கள்..
தலையில் துண்டு கட்டுதல் உருமா என்றழைக்கப்பட்டது.
தலைப்பாகை என்பதெல்லாம் பின்னால் வந்த வழக்கு...
தேவேந்திரர்களின் வாழ்வியலில் உருமா மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
ஒருவர் இறந்தால் அவருக்கு எண்ணெய் முழுக்குச் சடங்கன்று குடும்பத்தில் மூத்த மகனுக்கு அல்லது அனைத்து ஆண் பிள்ளைகளுக்கும் உருமாக் கட்டும் வழக்கம் இன்று தொடர்கிறது.
அது ஒரு சமூகப் பண்பாடு.
அடக்கம் செய்ய பிணத்தைக் குளிப்பாட்டி புதுத் துணியால் சுற்றப்படும்..
அந்தத் துணி தோம்பு எனப்படுகிறது.
இறந்தவர்களைப் பிணம் என்று அழைக்கும் வழக்கம் எம்மில் இல்லை.
இறந்த உடலைச் சவம் என்றே அழைத்தனர்.
தோம்புத் துணி சிவப்பு நிறத்தில் தான் இருக்கும்..
உடலைச் சுற்று முன்பு ஒரு சாண் அகலம் நான்கடி நீளமும் கொண்ட அளவில் தோம்புத்துணி கிழித்துப் பத்திரப் படுத்துவார்கள்...
அப்படிப் பத்திரப் படுத்தப்பட்ட தோம்புத் துணியை வைத்துத் தான் எண்ணெய் முழுக்கன்று உருமா கட்டுவது வழக்கம்..
இவ்வழக்கம் இப்போது மறைந்து வருகிறது.. ஏதாவது ஒரு புதுத் துண்டை எடுத்து உருமாக்கட்டும் வழக்கம் இப்போது பரவி வருகிறது..
திருமணத்தில் பெண்ணை முடிவு செய்யும் நிகழ்வை பாக்கு மாத்துதல் /காய்ச்சி ஊத்துதல் என்ற பெயரால் அழைத்தனர்..
கிடாய் விருந்து காய்ச்சி ஊத்துதல் என்றழைக்கப்பட்டது.
மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்கு அரிசி ஆட்டுக்கிடாயுடன் சென்று விருந்து செய்த பின் தான் பாக்கு மாற்றும் சடங்கு நடக்கும்.
கிறிஸ்தவ தேவேந்திரர்கள் இந்த நிகழ்வை
" பாக்கு மாத்தி,காய்ச்சி ஊத்தி கோயிலுக்குக் கூட்டிப் போதல் " என்று அழைத்தனர்.
அப்படியான சடங்கில் பாக்கு மாற்றும் நிகழ்வு தவறாமல் நடந்தேறின.
இன்றும் பல இடங்களில் பாக்கு மாற்றும் நிகழ்வில் பாக்குகளை எண்ணி மாற்றும் நடைமுறை தவறாமல் பின்பற்றப்படுகிறது.
சில இடங்களில் பாக்குக்கு பணம் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இதெல்லாம் நமது கலாச்சாரத்தின் அடையாளங்கள்..
தேவேந்திரர்கள் குடும்ப மார்கள் என்றே அழைக்கப்பட்டனர்.
இன்றும் கூட கிராமங்களில் சில வீடுகளை குடும்பன் வீடு என்றே அடையாளப்படுத்துகின்றனர்.
அதே மாதிரி ஊரான் என்ற அடையாளமும் இருக்கிறது..
குடும்பர்கள் நில உடைமையாளர்களாகவே வாழ்ந்தனர்.
உழவைத் தவிர வேறெந்தப் பிழைப்பும் அவர்களுக்குத் தெரியவில்லை..
ஆகவே நில உடமையின் அளவுகோளாக வைக்கோல் படப்பையும், பட்டறையையும் கருதினர்..
அனேக கிராமங்களில் வைக்கோல் படப்பு வைக்க ஊருக்குப் பொதுவான இடங்கள் இருந்தன..
அவற்றைக் களம் என்றே அழைத்தனர்.
அதைத்தான் திரு. ஜான்சன் பிரான்சிஸ் தமது தொடரில் பதிவு செய்கிறார்..
வைக்கோல் படப்பு பெரும்பாலும் கிழக்கு மேற்காகவே அமைக்கப்படும்.
காற்றின் திசைக்கு ஏற்ப அவ்வாறாக அமையலாம் எனக் கருதுகிறேன்..
வைக்கோல் படப்பை போர் என்றும் அழைப்பர்..
படப்புக்கும் போருக்கும் வேறுபாடு இருக்கிறது..
வேறொரு கட்டுரையில் அதுகுறித்துப் பேசுவோம்.
அரி, கட்டு, களத்துமேடு, பழுதை,
தழுக்கு, பிணை கட்டி, பிணையல்.. உள்ளணி மாடு கொடியணி மாடு,
பொணயல் ஓட்டி...
கிளாவடி
குவியல்
பொலி
சண்டு
கருக்கால்
முகவாய் ...
இன்னும் இன்னும் இருக்கிறது..
சாப்பாட்டுக்குத் தேவையான நெல் மூட்டைகளை வைக்கோல் படப்பிலும் பாதுகாப்பதுண்டு..
வைக்கோல் பிடுங்கும் போது தான் அதனை எடுக்க இயலும்..
அதில் ஒரு பசி நுட்பம் இருக்கிறது.
பெருஞ்சாடி, குதிர் , பத்தாயம் போன்றவற்றில் சாப்பாட்டுக்குத் தேவையான நெல்லைச் சேமிப்பர்.
தவிர்க்க முடியாத பணத் தேவை வந்து விட்டால் சாப்பாட்டுக்கு ஒதுக்கிய நெல் கூட சில வேளைகளில் செலவு செய்தாகி விடும்..
அந்த நிர்பந்தத்தைத் தவிர்க்கவே படப்புகளில் சாப்பாட்டு நெல்லை மூட்டை கட்டிப் போட்டுப் பத்திரப் படுத்தினர்..
தமிழர் வாழ்வியலின் அடையாளங்களில் பெரும்பான்மைக் கூறுகள் குடும்பர்களின் வாழ்வியலில் தான் காணக்கிடக்கின்றன..
இப்படியான மறைந்து வரும் வாழ்வியல் கலாச்சாரங்களை அடுத்த சந்ததிக்குச் சொல்ல வேண்டிய கடமை நாம் அனைவருக்கும் இருக்கிறது..
நமது சமூகத்தின் பழக்க வழக்கங்களும் பண்பாட்டுக் கூறுகளும் பெரும்பாலும் பதிவு செய்யப்படாமலே போய் விட்டது..
நம் சமூகத்தில் பெரும் நிலக் கிறார்கள் வாழ்ந்துள்ளனர்.
ரெட்டையாளம்
கார்க்கமலம்
கோலேந்திரம்
செய்யானம்
கண்ணாக்கூர்
பில்லிக்குடி
ஆண்டியேந்தல்.
ஒல்லனூர்.
தஞ்சை மாவட்டம் ஆண்டி வயல் மருதங் காவல்,
போன்ற கிராமங்களில் பெரும் நில உடைமையாளர்கள் இருக்கிறார்கள்.
இந்தப் பட்டியல் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு என் கவனத்திற்கு எட்டியவை..
இன்னும் இருக்கலாம்..
இனியாவது பதிவு செய்வோம்..
எழுத்தாளர்களை ஆதரிப்போம்..
சமூக வரலாற்றை வாசித்து கூடுதல் தகவல்கள் இருந்தால் நீங்களும் பதிவிடலாம்...
மண்ணால் செய்து சுடப்பட்டது சாடி..
இது அரிசி தானியங்களைக் கொட்டி கைக்கெட்டும் உள்வெளியைக் கொண்டது.
மேலே உள்ள வாய் வழியாகவே கொட்டவும் அள்ளவும் முடியும்..
சற்று பெரிய சாடியில் அடிப்புறம் ஒரு வட்ட வடிவத் துவாரம் இருக்கும் அதற்குச் சொரிவாய் (சொரிதல்) என்று பெயர்.
இதனைத் தவிர்த்து ஒன்றோடு ஒன்றாக அடிக்கி வைத்து உருவாக்கப்படும் பெருஞ்சாடி குதிர் எனப்பட்டது.
இதுவும் சுடப்பட்ட மண் வடிவம் தான்.
ஒன்றன்மேல் ஒன்றாக வைத்துப் பொருத்த ஏதுவாக நுட்பமாகச் செய்யப்பட்ட மண் சாடி தான்.
இதன் மேற்பரப்பு மஞ்சு என்ற கற்றாழைச் சணல் கொண்டு சுண்ணாம்புச் சாந்தால் பூசப்படும்..
பத்தாயம் என்பது மரப்பலகையால் செய்யப்பட்டவையாகும்..
இவை யாவும் நெல் பாதுகாப்பு உபகரணங்களே..
நன்றி.
வாழ்க குடும்பரியம்.
©️✒️மிக்கேல் ஜெயராஜ்.
26.09.2024.
Comments
Post a Comment