குடும்பனின் பார்வையில்

 மாங்குளம் எனும் அரிட்டாபட்டி கல்வெட்டு குறித்து திரு. ஐராவதம் மகாதேவன்  



“ காணிய நாந்தாஸிரி யகஅன் தமாம்

இதா நெடிஞ்சாழியான் ஸாலாகான்

இளாஞ்சாடிகான் தாந்தைய் சாடிகான் செயியா பாளிய்”  இவ்வாறு படிக்கிறார். 


இதன் பொருள் "கணியன் நந்தாசிரியன் எனும்  துறவிக்குத் தந்த கொடை" பற்றிய செய்தி என்றே பலரும் இதுவரை கருதி வந்தனர் ஆனால் இதன் உண்மையான பொருள்.. 


தமிழகத்தில் சமணம் , பெளத்தம் போன்றவை பரவுவதற்கு முன்பே ஆசிவகம்  நிலைபெற்று இருந்தது . அதன் பின்னான காலத்தில் இச் சமயங்களுக்கு இடையே நடந்த பூசல்களில் அந்த சமயங்களில்  ஒன்றாக ஆசீவகமும்  இருந்தது என்பதனை பற்றிய குறிப்பு மணிமேகலையில் கூட காணப்படுகிறது. 


அத்தகைய நிலையில் இந்த ஆசீவகம் பற்றிய முழுமையான ஆய்வை மேற்கொண்டவர்களில் பிரதான இடத்தை வகித்த ஆசுத்திரேலியரான ஏ.எல். பாசம்  "ஆசீவகம் - அழிந்து போன ஒரு இந்திய சமயம்’ எனத் தம் ஆய்வு நூலுக்குப் பெயரிட்டார். 


அவர் தனது ஆய்வு நூலில்

ஆசீவகத்தின் வேர்கள் தமிழகத்திலேயே நிலைகொண்டுள்ளன என்ற உண்மையையும் வெளிப்படுத்தினார்.இது குறித்த தகவல்களை பலரும் பாளி,பாகத மொழிகளில் உள்ள பௌத்த, சைன நூல்களிலேயே தேடிக் கொண்டிருந்த நிலையில் அவர் அதனை

மற்றவர்களின் ஆய்விலிருந்து விலகி தமிழ் இலக்கியங்களான மணிமேகலை,நீலகேசி, சிவஞான சித்தியார் ஆகிய

நூல்களில் இருந்தும் ஆசீவகம் பற்றிய செய்திகளைத் திரட்டித் தம் ஆய்வினை மேற்கொண்டார். 


மோரியர் காலமான கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பின்னர் புத்தம் தளைத்த நிலையில் மேற்படி ஆசீவகம்

வடநாட்டில் செல்வாக்கை இழந்துவிட்டது எனக் கூறிய ஆய்வாளர்கள் மத்தியில் ஆசீவகம் குறித்த குறிப்புக்கள் தமிழ் இலக்கியங்களில் கி.பி. 14ஆம்நூற்றாண்டு வரையிலும் 

இடம்பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டினார். அதற்கான கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளையும் நிறையவே எடுத்துக் காட்டினார்.

ஆசீவகம் பற்றியகுறிப்புக்கள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டுவரை தமிழ் இலக்கியங்களில் காணப்பட்டாலும் ஆசீவகத்தின் தோற்றம்  வடநாட்டுக்கு உரியதொன்றாகவே ஏ.எல்.பாசம் உள்ளிட்ட பல்வேறுபட்ட அறிஞர்களும் நம்பிக் கொண்டிருந்தனர். 


ஆனால் ஆசீவக மரபில் கழிவெண் பிறப்பைக் கடந்து வீடுபேறடைந்தவர்களாக மூவர்

குறிப்பிடப்படுகின்றனர். அம்மூவர் ஆசீவகத்தின் தோற்றுநர்களாகிய

மற்கலிகோசாலர், கிசசாங்கிசா, நந்தவாச்சா

என்போராவர். இவர்களுள் மற்கலி கோசலர் தவிர்ந்த ஏனைய இருவரைப் பற்றியும் பாளி, பாகதம் முதலான வடமொழிகளில் எவ்வித தகவலும்

காணப்படவில்லை எனவே அதன் காரணமாக அவ்விருவரைப் பற்றியும் ஆராய

முடியவில்லை எனவும்  மேற்குறித்த ஆய்வை மேற்கொண்ட ஏ.எல். பாசம் அவர்கள் வருத்தப்பட்டிருந்தார். 


இந்நிலையில் " ஆசீவக மரபின் அழியாச் சின்னங்கள்"  என்னும் நூலின் அணிந்துரையில் ஆசீவக பேரறிஞர் முனைவர் க. நெடுஞ்செழியன்  

தமிழில் ‘கழிவெண் பிறப்பு’ என்ற நிலையை எய்தியவர்களை  நல்வெள்ளை என்பர். அந்த நிலையை எய்தியவர்களை நல்வெள்ளையார் என்பர்.

அதைப் பாளி மொழியில் ‘பரம சுக்க’என்பர். பாளி முதலான வட மொழிகளில் அவர்களைப் பற்றி யாதொரு

செய்தியும் காணப்படவில்லை எனவே ஆசீவகத்தின் வேர்கள் தமிழ்

நாட்டிலேயே நிலை கொண்டிருப்பதாக ஏ.எல். பாசம் கூறியிருப்பதன் காரணமாக அவர்களுள் மற்கலி கோசலர் தவிர்ந்த ஏனைய ஆசீவக நல்வெள்ளை நிலையை எய்தியதாக கூறப்படும்

கிசசாங்கிசா, நந்தவாச்சா ஆகிய இருவரைப் பற்றிய குறிப்புக்களை தமிழ்

மூலங்களில் ஆராய்ந்த போது அவை பற்றிய வியப்பூட்டும் தகவல்கள் கிடைத்தன என்கிறார் திரு அண்ணாமலை சுகுமாரன் அவர்கள். 


அவரது இந்தத் தேடலில் முதலில் அடையாளம் காணப்பட்டவர் நல்வெள்ளையார்" நந்தவாச்சா" ஆவார். 


அத்தகவலானது மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள மாங்குளம்

கற்படுக்கைகள் கணி நந்தாசிரியன் எனும் ஆசீவகத் துறவிக்குஅமைக்கப்பட்டது அக் கற்படுக்கைகளை அமைத்தவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும் அவன் உறவினரும் ஆவர். 


அக் கல்வெட்டில் உள்ள நந்தாசிரியன் எனும் பெயரே நந்தவாச்சா

எனப் பாளி மொழியில் வழங்கப்பட்டுள்ளது. 

ஆசிரியன் எனும் இச்சொல்லுக்கு ஆசான் எனவும் பொருள் வழங்கும். தமிழ் ஆசான் - பிறமொழிகளில் ஆச்சாரியார் எனவும் ஆச்சான் எனவும் திரியும். இதற்கு பெரியவாச்சான் எனும் வைணவ பெரியாரின் பெயரே அதற்குச்

சான்றாகும். பெரிய+ஆசான் >பெரியவாச்சான் என்றானதைப் போன்றே

நந்த+ஆசான் > நந்தவாசான் > நந்தவாச்சா என்று மருவியுள்ளதும் புலனாயிற்று. 


அந்த வகையில் ஆசீவக அறிவியலான வானியலில் இவர் மிகுந்த தேர்ச்சி

பெற்றிருந்ததால் இவர் கணியன் நந்தாசிரியன் என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளதை மாங்குளம் கல்வெட்டின் மூலம்  அறிந்து கொள்ள முடிந்தது. எனவே இக் கணி நந்தாசிரியனே முக்கல் ஆசான் நல்வெள்ளையார் எனும் #நற்றிணை புலவராவார் என்பதனை தனது ஆராய்ச்சி ஊடாக கண்டுகொண்டார். 


திண்டிவனம் அருகே  உள்ள பெருமுக்கல் என்ற இடத்தில் உள்ள

குன்றில் இவர் ‘முக்தி’ அடைந்ததால் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என அழைக்கப்பட்டுள்ளார்.அதன் காரணமாக இன்றும் அங்குள்ள கோயில்

முத்தியாலீசுவரர் கோயில் என்று அழைக்கப்படுவதுடன்,  அந்த மலையின்

அடிவாரத்தில் ஐயனார் கோயில் இருப்பதும் பழைய வரலாற்றை உறுதி

செய்யக் காணலாம்."  என முனைவர் க. நெடுஞ்செழியன் அவர்களும் இந்த இடத்தினை பற்றி குறிப்பிட்டிருந்தார் . 


இதிலிருந்து நாம் ஆசிவகத்துறவி பயன்படுத்திய இக்கற்படுக்கையை , பிற்காலத்தில் இலங்கையை சேர்ந்த அரிட்டா பயன்படுத்தி இருக்கலாம் .அதனால் அந்த ஊருக்கு அரிட்டா பட்டி  என்று பெயர் வந்திருக்கலாம் என்ற வரலாற்றை தெரிந்து கொண்டார். 


கி மு 3 முன்பே ஆசிவகத்துறவி நந்தாசிரியர் இங்கு வாழ்ந்திருக்கிறார் அவர் ஆசிவகத்தை  தோற்றுவித்ததில் ஒருவர் என்பதும் அறிய முடிகிறது . 


நற்றிணைகூறும் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என்பதும் நந்தாசிரியரரே என்பதும் தெளிவாகிறது . 


எனவே பெருமுக்கல் என்ற ஊரில் உள்ள குன்றில் இவர் ‘முக்தி’ அடைந்ததால் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் என அழைக்கப்பட்டுள்ளார். 


கற்படுக்கை என்றதும் சமணர்களை சுட்டுவதும் , முதுமக்கள் தாழி என்றதும் 

ஏதோ தொல்  மனிதரின் எச்சங்கள் என்று முடித்துக்கொள்வதும் ஆய்வாளர்களின் வாடிக்கை ஆகிவிட்டது . 


ஆனால் கற்ப்படுக்கைகள்  சமணருக்கு  முன்பே வேறு மரபினராலும் பயன் படுத்தப்பட்டது அந்த மரபின் பெயர் ஆசிவகம் என்பதுதான் இப்போது கூற விளைந்த செய்தி .ஆகும்           

ஆசிவகம் என்பது ஒரு இடவாகுபெயர் . 


அதாவது மக்கள் தங்களது அனைத்து வாழ்வியல் ,உடலியல், மருத்துவம், உழவு, தொழில், வானவியல் போன்ற அனைத்து பிரிவின் ஐயங்களுக்கு விடைகாணும் இடம் அது .  

ஆசு + ஈவு +அகம்   =ஆசிவகம் எனப்பட்டது .

ஈவு என்பது அணைத்து கணிதங்களில் கிடைக்கும் விடை அல்லவா , அவ்வாறே 

அனைத்து சிக்கல்களுக்கும் ஈவு காணும் இடம் ஆசிவகம் .

தன்னை விடவும் படிப்பறிவிலோ, பட்டறிவிலோ தேர்ந்த வல்லுநர்களை அடையாளம் கண்டு அணுகிடப் போதுமான செய்திப் பரிமாற்றங்களும்  இல்லாத அந்தக்காலச் சூழலில் யாரிடம் தனக்கான ஈவு பெறுவது?

அவர்களுக்கு  அன்று ஈவு கொடுப்பதற்கு ஒரு இடம் இருந்தது. அதுவே ஆசீவகத் துறவிகளின் கற்படுக்கை

ஆசீவகம் என்ற பெயர் அத்துறவிகளின் வாழிடத்திற்கான பெயரேயாம். அத்தீர்வுகளைத் தருபவர்கள் அந்நாளைய  சித்தர்கள் ஆவர். 


ஆசீவகம் என்பது ஒரு இந்திய மெய்யியல் கொள்கையும் துறவு இயக்கமும் ஆகும்.   

இவர்கள் கி.மு. 500-250 காலப் பகுதியில் முதல் பெளத்தர்கள், ஜைனர்களோடு ஒத்த காலத்தில் அல்லது அவர்களுக்கு முன்போ இருந்தாக கருதப்படுகிறது. 

இந்த மெய்யியல் பெளத்தம், ஜைனம், சார்வகம் போன்றே வேதத்தை முழுமையாக புறக்கணித்த மெய்யியல் ஆகும் 


ஆசீவக நெறியைப் பின்பற்றுபவர்கள் பல்வேறு பெயர்களால் அறியப்படுகிறார்கள். அண்ணர், அண்ணல் என்றும் அழைக்கப்பட்டனர் மற்றும் ஆசீவகர்,மற்கலியர்,ஏகாந்த வாதி,சித்தர் (அ) ஆசீவக சித்தர் முதலியன . 


சித்தன்னவாசல்(அண்ணல் வாயில், சித்தர் அண்ணல் வாயில்),   திருவண்ணாமலை(திரு அண்ணர் மலை), அண்ணமங்கலம்(அண்ணல் மங்கலம்), கருப்பண்ண சாமி(தன்னைவிட அறிவில் முதிர்ந்தோரையும் வயதில் முதிர்ந்தோரையும் அண்ணன் என்று அழைக்கும் வழக்கமும் இதனடியே தோன்றியதேயாகும். 


அண்ணர் எனும் சொல்லும் இதன் அடிப்படையில் எழுந்ததே. ஈற்றுப் போலியாக அண்ணல் எனவும் மருவி இத்தகு அறிவர் வாழ்ந்த இடங்கள் திரு அண்ணர் மலை, அண்ணல் மங்கலம் எனும் பெயர்களுடன் வழங்கப் பட்டு இன்று திருவண்ணாமலை, அண்ணமங்கலம் எனும் பெயர்களால் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விடங்களில் இன்றும் ஆசீவகப் பள்ளிகளின் எச்சங்கள் காணக் கிடக்கின்றன.)

ஆசீவகச் சித்தர்களின் துறவு வாழ்க்கையில் அறுவகையான நிறக் கோட்பாடு பின்பற்றப் பட்டது. 


துவக்க நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு வண்ணச் சீருடையும் படிப்படியாக மெய்யியலில் முன்னேறும் போதெல்லாம் வேறு வேறு வண்ணச் சீருடைகளும் அணிவர். ஒரு ஆசீவக அறிவர் பள்ளி பல நிலையிலுள்ள துறவு மாணவர்களை அவர்தம் சீருடையின் வண்ணத்தைக் கொண்டே அவரது மெய்யியல் படிநிலையினை அறிந்து கொள்ளலாம்.

இதில் முதலாவதாக வரையறுக்கப்படும் வண்ணம் கருப்பு வண்ணமாகும். இந்தக் கருப்பு வண்ண உடையணிந்தவர்கள் கரும் பிறப்பு நிலையில் உள்ளவராகக் கூறப் படுவர்.    இந்த நிலை மெய்யியலின் துவக்க நிலையாகும். 

இந்த நிலையில் உள்ளவர்களுக்கு உணவுப் பழக்கங்களிலும், துறவறப் பயிற்சிகளிலும் பெரிய பட்டறிதல் இல்லை.  ஏனெனில் இதுதான் துவக்க நிலை. கரும் பிறப்பு நிலையைக் கடந்த பின் அதாவது அடிப்படை ஒழுக்கங்களையும் துவக்க நிலைப் பயிற்சிகளையும் செம்மையாகக் கற்றபின் கருநீல வண்ண உடையால் அடையாளப் படுத்தப் படுவர். அதன் பின்னர் அடுத்த படிநிலைக்கு உயர்த்தப்பட்டு அதற்கேற்ற வண்ண உடையால் அவர் அடையாளப் படுத்தப் படுவார்.

இவ்வாறு ஆறு படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே இறுதி நிலையான நல்வெள்ளை நிலைக்கு அவர் சென்று வீடுபேறடைவார். இவ்வாறு அறுவகை நிலையிலும், ஒவ்வொரு வண்ணத்திலும் மூவகைப்பட்ட படிநிலைகள் அதாவது 6 x 3 மொத்தம் 18 படிநிலைகளை ஒருவர் கடந்த பிறகே அவர் வீடுபேறடைய முடியும் என்பது வரைவு. 


ஆசீவகப் பள்ளியில் பயிற்சி பெற்ற பின்னரே இல்லறத்திற்குச் செல்லும் வழக்கமிருந்தது.அப்போது      வாழ்வியல் சிக்கல்களுக்கு விடைதேடி அலைவதினை இது குறைக்கும் என்பதும் அதன் சிறப்பு. 


துறவி கூட உழைத்தே உண்ண வேண்டும் என்பது ஆசீவகப் பொருளியல். 


ஆசீவகத்தினர் அறுவகை நிறங்களால் வகைப்படுத்தப் பட்டனர். இந்த வகைப்பாடு அவரவர்தம் சிந்தனை, செயல், தகுதி, அறிவுநிலை, ஊழ்கப் பயிற்சி, மெய்யியல் அறிவு இவற்றை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆறு நிறங்களாவன: கருமை & சாம்பல் - துவக்க நிலை – இரவு விண்ணின் நிறம்

நீலம் - இரண்டாம் நிலை – விடியற்காலை கதிரவன் உதிக்கும் முன் விண்ணின் நிறம்

பசுமை - மூன்றாம் நிலை – கதிரவன் உதிக்கத் துவங்கும் பொழுது சிறிய நேரத்திற்கு இருக்கும் நிறம்

செம்மை - நான்காம் நிலை – கதிரவன் உதித்தப் பிறகு விண்ணின் நிறம்

மஞ்சள் - ஐந்தாம் நிலை - கதிரவன் உதித்தப் பிறகு கதிரவனின் நிறம்

வெள்ளை - இறுதி நிலை – கதிரவன் உச்சிக்கு வந்த பிறகு கதிரவனின் நிறம்

இந்த அறுவகை வண்ணத்திலும் மும்மூன்று படிநிலைகள் உண்டு. அவை: 


துவக்க நிலை - இது வண்ண ஒழுக்கத்தின் துவக்க நிலை. இந்த வண்ணத்திற்குரிய ஒழுக்கங்களையும் கடமைகளையும் அறியத் துவங்கும் புகுநிலை மாணாக்கர் முதல் படிநிலையிலிருப்பவர்.

இடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செயல்படுத்தி முறைப்படுத்தி ஒழுகினாலும் ஐயந்தெளியா நிலையில் உள்ள மாணவர்கள்.

கடைநிலை - இது வண்ண ஒழுக்கத்தையும் பயிற்சிகளையும் செவ்வனே தேர்ந்து அடுத்த நிறத்திற்கு உயர்வு பெறத் தகுதியுடைய நிலை. ஐயந்திரிபற உணர்ந்தவர்.

ஒரே நிறத்தில் இந்த மூன்று படிநிலைகளையும் உணர்த்த படிநிலை உயர உயர நிறத்தின் அழுத்தம் குறைக்கப்படும். 


இவற்றைக் கடந்த பிறகே (மேலே கூறப்பட்ட 18 படிகளையும்) நல்வெள்ளை எனும் நிறமிலி நிலையினை அடைவர் என்பதே நிறக்கோட்பாடு. அதாவது கருமையிலிருந்து நல்வெள்ளை நிலை வரையிலும் தகுதி உயர உயர நிறத்தின் அடர்வு குறைவதனைக் காணலாம். அதாவது பயிற்சியாளரின் குறைகளும் குறையும். அவரது அறிவைச் சூழ்ந்துள்ள மாசு குறைவதனையே (அறியாமை இருள் நீங்குவதனை) இந்த நிற வேறுபாடு குறிக்கும். 


படிநிலை உயர உயர நிறம் குறையும். இதுவே ஊழ்கப் பயிற்சியிலும் 18 படிநிலைகளைக் கடந்த ஐயனாரை அடைவது எனும் கோட்பாடு.

(ஆசீவகமும் ஐயனாரும்)


சேர நாட்டு ஐயனாரே தற்போது ஐயப்ப வழிபாட்டால் வணங்கப்படுகிறார். 


இந்த வழிபாடு செய்ய மாலை அணிவோர் தொடர்ந்து 18 ஆண்டுகள் செல்வர். இதில் முதல் மூன்றாண்டுகளும் கருப்பு உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் நீல உடையினையும், அடுத்த மூன்றாண்டில் பச்சை உடையினையும், அடுத்த மூன்றாண்டுகளில் சிவப்பு உடையினையும் அதற்கடுத்த மூன்றாண்டுகளில் மஞ்சள் உடையினையும் இறுதி மூன்றாண்டில் ஒளிர் வெண்மை உடையினையும் அணிந்து நோன்பிருப்பர். 18ஆம் ஆண்டிறுதியில் தென்னை வைத்து நோன்பு முடிப்பர். 


இது ஆசீவக மரபின் ஐயனார் ஊழ்கத்தைத் தழுவிய ஒரு வழிபாடேயாகும். 

இதில் இறுதியில் கூறப்படும் தென்னை வைத்தல் எனும் நிகழ்வு தேங்காயின் உட்பருப்பு நல்வெள்ளை எனும் கருத்துப் படவே கையாளப் படுகிறது. 


இப்போதுதான் எனக்குப் புரிகிறது ஏன் இதனைத் தமிழர்கள் தொடர்ந்து திரளாக ஐயப்பனைநாடி செல்கிறார்கள்  என்பது . ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் மரபில் மறைந்து கிடைக்கும் இந்தத் தூண்டுதலே அவர்களை அய்யப்பன் கோயில்  தூண்டுகிறதுபோலும் ..

அது மட்டுமல்ல நான் காணும் பெருவாரியான ஐயனார்கள் 

ஆசிவகத்தவரே ., இதை பேராசிரியர் க.நெடுஞ்செழியன். கூறுகிறார்  அவர் தனது 35 வயதில் தொடங்கிய பயணம் 74 வயதிலும் தொடர்கிறது. மொத்தம் 18 நூல்களை எழுதியிருக்கிறார். அதில் பெரும்பான்மையானவை ஆய்வு நூல்கள். ‘ஆசீவகமும் அய்யனார் வரலாறும்’ நூல் அவரது ஆய்வின் உச்சம்.

அதில் அவர் ,

"ஆசீவகத்தை உருவாக்கியவர் மற்கலி என்பதை தமிழ் இலக்கியம், பௌத்தம், ஜைனம் ஆகிய மூன்று மரபுகளும் உறுதிசெய்துள்ளன. ஆனால், ஆசீவகம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் அனைவரும் பௌத்த, ஜைன மரபுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதால், அந்த ஆய்வு ஒருதலைச் சார்பாக அமைந்துவிட்டது. தமிழ் இலக்கிய, நாட்டார் மரபுகளையும் சேர்த்து ஆராய்ந்தபோது, மற்கலிதான் தமிழ் மக்கள் வணங்குகிற ‘தர்ம சாஸ்தா’ (அய்யனார்களில் ஒருவர்) என்று உறுதிசெய்ய முடிந்தது. மகாவீரரும் மற்கலிகோசாலரும் ஒன்றாகப் பணியாற்றி, பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர் என்று ஜைன இலக்கியத்தில் குறிப்பு உள்ளது. மற்கலியின் ஆயுதம் செண்டாயுதம். நம் அய்யனார் கையில் இருப்பதுவும் அதுவே.

பெரிய புராணத்தின் ‘வெள்ளானைச் சருக்கம்’ வழியாக அய்யனார் பிறந்த இடம் திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகேயுள்ள திருப்பட்டூர் என்று அறிய முடிந்தது. 


அங்கே கள ஆய்வுசெய்தபோது, அய்யனார் பிறந்த ஊர் என்பதற்கான கல்வெட்டு ஆதாரம் கிடைத்தது. அவ்வூரில் சிவாலயமும், அய்யனார் கோயிலும் உள்ளன. சிவாலயத்தை நுட்பமாக ஆராய்ந்தபோது, அதுவும் ஆசீவக ஆலயமாக இருந்ததுதான் என்ற உண்மை விளங்கியது. 


‘தர்ம சாஸ்தா’ மரணமடைந்த இடமான சித்தன்னவாசலில், குகைக்குள்ளாக மூன்று சிலைகள் இருக்கின்றன. கிறிஸ்தவ மதத்தில் துறவியர் தொடங்கி போப் ஆண்டவர் வரையில் பல படிநிலைகள் இருப்பதுபோல, ஆசீவகத்திலும் வண்ணக் கோட்பாடு இருந்தது. கருப்பு, நீலம், பச்சை, செம்மை எல்லாவற்றையும் கடந்து கழிவெண் பிறப்பு (பரம சுக்ல) நிலையை அடைந்தவர்கள் இவர்கள் மூவரும். நடுவில் இருப்பவர் வேளிர் மரபில் பிறந்து சிற்றரசராக வாழ்ந்து, துறவியான அறப்பெயர் சாத்தன் (தர்ம சாஸ்தா). இரண்டாவது நபர் கிராமங்களில் பூரணம், பொற்கலை எனும் இரு மனைவியரோடு அருள்பாலிக்கிற பூரண அய்யனார். மூன்றாவதாக இருப்பவர் அடைக்கலம் காத்த அய்யனார் (பாண்டிய மன்னரின் படைத்தளபதியாக இருந்து துறவியானவர்)." 


  அடுத்ததாக அகழ்வாய்வில்  அதிகம் கிடைக்கும் முதுமக்கள் தாழிபற்றியும் சில தகவல்கள் கிடைக்கின்றன .

தக்கயாகப்பரணி உரை(16ஆம் நூற்றாண்டு)என்ற நூலைக்குறித்து 

பௌத்தமும் தமிழும் எனும் நூலில் மயிலை திரு.சீனி. வேங்கடசாமி  (1900-1980) அவர்கள் கொடுத்த விளக்கம்:

    ஆசீவக மதத்துறவிகள் முதுமக்கட் சாடியில் அமர்ந்து தவம் செய்தனர் என்று 12 ஆம் நூற்றாண்டில் தோன்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலுக்கு எழுதப்பட்ட உரையான 16ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட தக்கயாகப்பரணியுரையில் கூறப்பட்டுள்ளது. இதனை, 


        'தாழியிற் பிணங்களுந் தலைப்படா வெறுந்தவப்

        பாழியிற் பிணங்களுந் துளப்பெழப் படுத்தியே' 


என்னும் 376-ஆம் தாழிசைக்கு உரையாசிரியர் 'தாழி-முதுமக்கட் சாடி .. தாழியிற் பிணமென்றது, ஆருகதரிலே ஆசீவகர் பெருமிடாக்களிற் புக்குத் தவம்செய்வராதலின், அவரைச் சுட்டிநின்றது' என்று எழுதியிருப்பதினின்றும் அறியலாம் 

எனவே ஆசிவகம் குறித்து அகழ்வாய்வில் இனியாவது கவனம் செலுத்தினால் சில புதிய செய்திகளை அறியலாம் .

ஆசீவக நெறி இருந்ததற்கான சான்றுகள் அந்நெறியின் கோட்பாடுகள் இன்னும் பல தமிழ் இலக்கியங்களில் பொதிந்து இருக்கின்றன. ஆசீவக நெறி இருந்ததற்கான தொல்லியல் சான்றுகளும் தமிழகம் முழுவதும் இருக்கிறது .அது ஒரு பண்டைய வாழ்வியல் முறையாக 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கிறது .அதுவே தொடர்ந்து 16 நூற்றாண்டுவரை நிலைத்திருந்த சான்றுகள் உள்ளன . 


திவாகர முனிவரால் கிபி 8ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகர நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது. 


     சாவகர் அருகர் சமணர் ஆகும்;

     ஆசீ வகரும் அத்தவத் தோரே

                            - திவாகர நிகண்டு

அதாவது, சமணர் எனும் சொல் சாவகர், அருகர், ஆசீவகர் ஆகியவர்களைச் சேர்த்துக் குறிக்கும் பொதுச்சொல் எனக் குறிப்பிடுகிறது. 

திவாகர முனிவரின் மாணாக்கருள் ஒருவரான பிங்கல முனிவர், தான் இயற்றிய பிங்கல நிகண்டு எனும் தமிழ் மொழி நிகண்டில்

ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவாகக் குறிப்பிடுகிறார்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்