குடும்பனின் பார்வையில்
✒️ சம்சாரிகளும், குடித்தனங்களும்..
தமிழர் வாழ்வியலில் குடித்தனம் என்ற சொல் நீண்ட மரபைக் கொண்டது..
சமூக அங்கீகாரத்தோடு ஓர் ஆணும் பெண்ணும் கூடிக் குடும்பம் நடத்துவதைத் தான் குடித்தனம் செய்தல் என்று குறிப்பிடுகிறோம்..
குடித்தனம் நடத்துவதற்குத் தேவையான அடிப்படைப் பண்பு சம்சாரித்தனம் வாய்க்கப் பெறுதல்.
சம்சாரி என்பதும் கூட குடித்தனக்காரனைக் குறிப்பிடும் சொல் தான்.
சம்சாரித்தனம் என்பது குடும்பம் நடத்தும் ஆளுமைப் பண்பைக் குறிக்கும்.
ஏலே... நீ சம்சாரி வயித்துல தான் பொறந்தியா ...??
இல்ல..
செறச் சித்திண்ணிப் பயலுக்குப் பொறந்த யாடா..??
ஏலே...!!
நீ சம்சாரியா... சொல்லு..!!?
காலையில இருந்து கட்டுத் தொறயில கட்டுன மாடு அப்புடியே கெடக்கு....!!
இப்படியான ஏச்சுகளை அப்போதெல்லாம் அடிக்கடி கேட்பதுண்டு.
கட்டுனவளோட குடித்தனம் பண்ணத் துப்பில்லாத துப்புக் கெட்ட பய...!!!!
பேசுறாம் பாரு பேச்சு...!!!!
கோபக் கொந்தளிப்புகளின் போது தான் பல பண்பாட்டுச் சொற்களுக்கு அர்த்தம் புரிகிறது.
திருப்பூட்டு முடிந்து பெற்றோரை விட்டுப் பிரிந்து புதிதாக குடும்பம் நடத்தச் செய்யும் ஏற்பாடு புதுக்குடித்தனம், தனிக் குடித்தனம் எனப்பெறும்..
குத்து விளக்கு
பான சட்டி ரெண்டு கரண்டியோட தான் நான் தனிக் குடித்தனம் போனேன் ...
என்ற புலம்பல்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களால் பேசப்படும்..
மனைவியோடு சேர்ந்து வாழத் தெரியாதவனை குடித்தனம்பன்னத் துப்பில்லை ... என்று வசவுவார்கள்.
உழைத்துப் பொருளீட்டி குடும்பம் செய்வதுதான் சம்சாரிக்கு லட்சணம் இதைத்தான் "உத்தியோகம் புருஷ லட்சணம்" என்றார்கள்..
சமீபக காலங்களில் இளந்தலைமுறையினரில் பலர் குடித்தனம் நடத்துவதில் தோற்றுப் போவதைப் பார்க்கிறோம்..
இப்போதெல்லாம் ஊருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் திருமணமுறிவு பெற்று வாழ்வதைப் பார்க்க முடிகிறது..
முன்பெல்லாம் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்தால் பெரியவர்கள் பெருமுயற்சி எடுத்து இணைத்து வைத்தார்கள்..
நானறிய கோபங்கொண்டு தாய்வீடு போனவள் பதிமூன்றாண்டுகள் கழித்து திரும்ப வந்து குடித்தனம் நடத்திய துண்டு..
இருபதாண்டுகள் கழித்து மகப்பேறு அடைந்து வாழ்ந்தவர்கள் உண்டு..
இப்போதெல்லாம் திருமணம் முடிந்து மூன்று மாதங்களில் பிரிந்தவர்கள் இருக்கிறார்கள்..
"திருமணம் ஆகி மூன்றே மாதங்கள் தான் சேர்ந்து வாழ்ந்தோம் அத்தோடு பிரிந்து போய் விட்டாள்..
ஆறேழு ஆண்டுகள் கடந்து விட்டன இதுவரை தனித்தனியாகக் காலந்தள்ளுகிறோம் "...என்று நேற்று வருத்தப்பட்டார் ஒருவர்..
அந்த வருத்தத்துடைய தாக்கம் தான் இந்தக் கட்டுரைக்கான கரு.
குழந்தைப்பேறு இல்லாமலே இறுதி வரை வாழ்ந்த தம்பதிகள் உண்டு..
" வருத்தம் நீண்டால் வஞ்சமாக மாறும் "
என்றொரு பெரு வழக்கு இருக்கிறது..
மனவருத்தங்களை நீளச் செய்யாமல் சரி செய்து கொள்வதுதான் சம்சாரிக்கு அழகு..
சம்சாரித்தனம் என்பது விட்டுக் கொடுப்பதில் இருக்கிறது..
அது குடித்தனக்காரனுக்கு மிகஅவசியமாகும்.
நாடோடியாய் வாழ்ந்த கூட்டத்தில் கூடிக் குடும்பம் நடத்தக்கற்றுக் கொடுத்தவர்கள் குடும்பர்கள்..
குடித்தனம், சம்சாரி ஆகிய சொற்களைக் கண்டறிந்து கொண்டவர்கள் நாம்..
ஆகவே இளந்தலைமுறையினர் விட்டுக் கொடுத்தும் மனக்கசப்புகளைப் பேசித் தீர்த்தும் குடித்தனம் செய்யப் பழகுவோம்..
வாழாத வாழ்க்கைக்கு ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன.
ஆனால் ஒரு பதிலும் இல்லை.
©️✒️ யாழி
10.10.2024.
Comments
Post a Comment