பழனி பள்ளர் பட்டயத்தின் தனித்துவமான சிறப்பு.
*****************
தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி.
****************-*
எனது ஆய்வு வாழ்க்கையில் பலசெப்புப் பட்டயங்களை படித்து வெளியிட்டிருக்கிறேன்.
குறிப்பாக பல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பழனிமுருகனுக்கு காலபூசைக்காகவும் திருமஞ்சன அபிசேகத்துக்காகவும் கட்டளைப் பண்டாரங்களையும் திருமஞ்சனப் பண்டாரங்களையும் நியமித்து பூசைகளும் திருமஞ்சனமும் நடத்திவர தங்கள் சமூகத்துக்குள் வரி வசூல் செய்து அதை பண்டாரங்களிடம் கொடுத்து 'கல்லும் காவேரியும் சந்திரனும் சூரியனும் உள்ளவரை' அந்த தர்மம் நடைபெற ஏற்பாடு செய்து அதை செப்பேடுகளில் பொறித்து வைப்பது வழக்கம்.இந்த வழக்கப்படி வரிவசூல் செய்து திருமஞ்சனம் செய்ய எழுதப்பட்ட செப்பேடுகளே அதிகம்.ஆனால் பள்ளர்களாகிய @காலாடி@பண்ணாடி @பணிக்கர்@பலகான் @மூப்பன் எனும் குடும்பர்கள் எழுதி வைத்த செப்பேடு மட்டும் பொங்கல் விசயத்தில் ஒரு தனித்தன்மையோடு விளங்குவதை கவனிக்க முடிகிறது.
வசூல் செய்யப்படும் வரியில், குடும்பர்கள்@ தேவேந்திரப் பள்ளர்கள் தாங்கள் கட்டிய மடத்தில் (தேவேந்திர அறமடம்) திருவிளக்கு(நந்தாவிளக்கு) எரிக்க வேண்டியும் மலைமேல் திருக்கண்சாத்துக்கும் திருமஞ்சனத்துக்கும் வரி வசூல் செய்திருப்பதையும் மலை ஏறும் வழியில் தண்ணீர் மடம் கட்டி அதை குறைவற நடத்தி வர ஏற்பாடும் செய்திருப்பதையும் 02/02/1657 ல் (கி.பி.17 நூற்றாண்டில்) தங்களது செப்பேட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள்.
குடும்பர்களின் இந்தச் செப்பேடு திருவிழாவுக்கு பேரூருக்கு 5 பணமும் சிற்றூருக்கு 3 பணமும் வரி போட்டு அதன்மூலம் விநாயகர் சதுர்த்தி,சரஸ்வதிபூஜை ,சிவராத்திரி, கந்தசஷ்டி ஆகியவற்றை கொண்டாடினார்கள் என்று கூறுகிறது.
அத்துடன் சங்கராந்தி எனப்படும் பொங்கல் கொண்டாடுவதற்கும் ஊருக்கு ஒரு பணம் வரி வசூலித்து பொங்கலை குடும்பர்கள் கொண்டாடி இருக்கிறார்கள் என்பதை செப்பேட்டின் 255 & 266 ஆம் வரிகள் குறிப்பிடுகின்றன.இது ஒரு மிக முக்கியமான குறிப்பாகும். முருகனுக்கு பட்டயம் எழுதிய சமூகங்கள் எல்லாம் திருமஞ்சனம் செய்ய மட்டும் வரி வசூல் செய்த நிலையில் குடும்பர்கள் மட்டுமே தமது (மருத)திணை வழி பாரம்பரியத்தை நிலை நிறுத்தும் வகையிலும் உழவுப் பண்டிகையான பொங்கல் தமது முன்னோர்களின் திணைவழி பரம்பரை கொண்டாட்டம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஊருக்கு ஒரு பணம் வரி வசூல் செய்து பொங்கலை கொண்டாடி அதை தமது செப்பேட்டிலும் பதிந்திருக்கிறார்கள் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு பெருந்திறல் உழவர் என்று பிங்கல,திவாகர நிகண்டுகளில் போற்றப்படும் மள்ளர்களாகிய உழவுக்குடிகள் தமது திணைவழி அடையாளத்தை இழந்து விடாமல் ஊர்கூடி உலகம் கூடி பொங்கலைக் கொண்டாடி இருக்கிறார்கள் என்பதை அறியும் போது மனம் பெருமை கொள்கிறது. கந்தசஷ்டி, விநாயகர் சதுர்த்தி,சிவராத்திரி ,சரஸ்வதி பூஜை போன்ற ஆரிய புராணக்கதை வழி பண்டிகைகளைக் கொண்டாடிய போதும் குடும்பர்கள் தமது தொன்மை அடையாளப் பண்டிகையை மறந்து விடவில்லை என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.
இவ்வாறு பொங்கல் கொண்டாட ஊருக்கு ஒரு பணம் வரிவசூல் செய்த செய்தி வேறு எந்தச் செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் காணக் கிடைக்காதது.
பொங்கல் என்று எழுதாமல் சங்கராந்தி என்று செப்பேடு குறிப்பிடுவதன் மூலம் பழந்தமிழ் திணைக்குடிகளாகிய மள்ளர்களின் அடையாளத்தை ஆரிய புராண அடையாளம் அழித்தொழித்து இருக்கிறது என்பதை அறிய முடிகிறது.உழவர்களின் விழாவான பொங்கல் உலகெங்கும் தற்போது ஒட்டுமொத்த தமிழ்க்குடிகளின் சொந்த அடையாளமாய் மாறி நிற்பது பெருமை கொள்ளத்தக்க ஒரு விசயம்தான். நமது தொன்மை அடையாளங்களின் மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுத் தாக்குதல்தான் பொங்கலை சங்கராந்தியாக மாற்றியது.
அதேபோல்தான் பொங்கலுக்கு முதல்நாளான "காப்புக்கட்டு " என்பது 'போகி' யாக அடையாளம் மாறியதால் பழசைக் கொளுத்தும் சடங்கில் நமது வரலாற்று /இலக்கிய ஆவணங்களை நாம் இழந்து போனோம்.
உண்மையில் இந்தக் காப்புக்கட்டு என்பதன் பொருளே வேறு.எனது தாயார் எனது சிறுவயதில் இதற்கான காரணத்தைச் சொல்லி இருக்கிறார். அதாவது அறுவடை முடிந்து வீட்டுக்கு வந்த நெல்லை கொள்ளையடிக்க "சங்கராந்தி"எனும் பேய் வரும். இந்தப் பேயிடம் இருந்து வீட்டையும் வீட்டில் இருக்கும் நெல்லையும் காப்பாற்றவே/ பாதுகாக்கவே "காப்பு"கட்டப்படும். இந்தக்காப்பு வேப்பிலை மற்றும் சிறுபீளை கொண்டு வீட்டின் நான்கு மூலையிலும் கட்டப்படும்.பெருநகரங்களில் மறைந்து வரும் இவ்வழக்கம் கிராமங்களில் இன்றும் தொடர்கிறது.
தமிழ் பொங்கலை ஆரியம் சங்கராந்தி என்கிறது. அந்தச் சங்கராந்தியை நமது முன்னோர்கள் பேய் என்கிறார்கள். கால ஓட்டத்தில் இதன் உண்மைக் காரணம் தற்போது நமக்குக் தெரியாமல் போய்விட்ட நிலையில் இது பல வரலாற்று யூகங்களுக்கு வழி வகுக்கிறது.
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.
Comments
Post a Comment