பாண்டியனின் வழிகாட்டலில்

 மகனே பாண்டியா....☯️


இன்று ஏழாம் அகவையில் அடி எடுத்து வைக்கிறாய், ஏழு வருடங்கள் எப்படி ஓடியது என்று தெரியவில்லை. சரி, அது எப்படித்தான் ஓடிப்போனது என்று நினைவை பின்னோக்கி நகர்த்தினால் நகர்வின் ஒவ்வொரு புள்ளியிலும் நீதான் என் கண் முன் வந்து நிற்கிறாய், இந்த ஏழு ஆண்டுகளாய் நீதானே என் உலகம்....!


இந்த தருணத்தில் உனது முதல் பிறந்த நாளுக்கு நான் உனக்கு எழுதிய #பதிவு நினைவுக்கு வருகிறது, 

அதில் சொன்னபடி தான் இந்த ஏழு வருடங்களும் நகர்ந்திருக்கிறது நமக்கு, ஒவ்வொரு வருடமும் அந்த பதிவை எடுத்து என்னை நானே புதுப்பித்துக் கொள்கிறேன் மகனே....!


இந்த #ஏழு வருட அனுபவத்தை மட்டும் தனியாக சேமித்து உனக்காக என் நினைவடுக்குகளில் பாதுகாத்து வைக்கப் போகிறேன், இன்பங்களை நீ அனுபவித்து தெரிந்து கொள், துன்பங்கள் எப்படி இருக்கும் என்பதை என்னிடம் கேள், நான் இந்த ஏழு வருடங்களிடமிருந்து ஏதோ ஒரு பகுதியை எடுத்து பாடமாக உனக்கு காட்டுவேன், அத்தனை அனுபவங்கள், துன்ப நினைவுகளை தேக்கி வைப்பதில் எனக்கு ஒருபோதும் விருப்பமில்லை மகனே, ஆனால் அப்படியோர் ஆர்வத்தில் நீ அதை எப்போதேனும் தேடிவிட கூடாதே, அதற்காக ஒரு முன் ஏற்பாடு....!!


அப்போ இனிமே நமக்கு துன்பமே இல்லையா என்று கேட்கிறாயா, நிச்சயமாக சொல்கிறேன், நாம் அந்த எல்லையை கடந்துவிட்டோம் மகனே. 

மகனே பாண்டியா, 

இனிமே நமக்கு எல்லாமே #வெற்றி தான்.....☯️


இந்த உலகம் நமது அடையாளத்தை திருடிக்கொண்டு நமக்கொரு அடையாளத்தை வலிந்து திணித்தது, திணித்துவிட்டு அந்த அடையாளங்களை வைத்தே நம்மை உளவியலாக வீழ்த்த நினைத்தது, கேலி செய்தது, இரக்கப் பட்டது, பாவம் என்றது, மெதுவாக ஈராயிர வருட அடிமையாக கட்டமைக்கத் துணிந்தது, பின்னொருநாள் அது இன வன்மத்தில் இரங்கி பிறகு அது நம்மிடம் அம்பலப்பட்டது, 

இப்போது #அடையாளம் அபத்தம் என்கிற நிலைக்கு அது வந்திருக்கிறது. இப்போது நான் உனக்கு சொல்கிறேன் கேள்.....!!!!


உலகில் அடையாளத்தை விட சிறந்த ஆளுமை எதுவும் இல்லை, அதிலும் மகனே #பாண்டியா, 

நம் அடையாளத்தை விஞ்ச உலகில் எந்த ஆளுமையும் இல்லை, உலகின் உன்னதமான அடையாளம் உன்னுடையது, 

அதனால்தான் நம்மீது மொத்த உலகத்திற்கும் ஒரு எச்சரிக்கை பார்வை, அதனால்தான் வெவ்வேறு வகையில் பிரிந்து கிடைக்கும் கும்பல்கள் கூட நம்மை எதிர்க்க மட்டும் ஒன்று சேர்ந்து விடுவார்கள்....!!!


அடையாளம் நேரடியாக வரலாற்றோடு தொடர்புடையது மகனே, வரலாறு நிலத்தோடும் பொழுதோடும் தொடர்புடையது, பொழுதோ இந்த பிரபஞ்சத்தோடு தொடர்புடையது, பிரபஞ்சம் நம் பெரும்பாட்டன் #இந்திரனோடு தொடர்புடையது, காலம் வரும்போது நான் உனக்கு சொல்லித் தருகிறேன்.....!!


நாளை இந்த உலகம் நம்மை கொண்டாடும் போது, நீ அந்த வெற்றி கொண்டாட்டதின் நடுவே, உலகை வெல்ல நினைப்பவர்களுக்கு மத்தியிலே, உன் வெற்றியின் ரகசியம் என ஏதோ சொல்ல வேண்டுமே, அது வரை தயாரித்து விட்டேன் மகனே, நாம் வெற்றியை நம் பக்கம் கொண்டு வர வேண்டியது தான் இனி செய்யப் போவது....! 


நான் உனக்கு நாள் தோறும் சொல்லும் #ராஜா கதையில் உனக்காகவே ஒரு உலகத்தை உருவாக்கி தந்திருக்கிறேன் மகனே, நீ வளர வளர அந்த உலகம் நிசமாவதை நீ காண போகிறாய், அந்த உலகத்தில் அன்பும், அறமும், செல்வமும் செழித்திருக்கும், மக்கள் முகத்தில் மலர்ச்சியை காண முடியும், அங்கே ஒரு வெள்ளை யானை இருக்கும், அதன் மீது நீ ராஜாவாக வலம் வருவாய், 

நல்வாழ்த்துகள் மகனே....

☯️ -ஆதி

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்