குடும்பனின் வாழ்வியலில்

 என்னங்கய்யா உளுந்தா? என்றதும் 



சிரித்துபடியே இது கேழ்வரகு/கேப்பை ஐயா என்றார் 


கேழ்வரகா? அதுவும் நம்ம ஊர்லையா என்றதும் 


கேழ்வரகு நம்ம ஊர்ல விளையும் ஐயா, ஆனா என்ன கொஞ்சம் மெனக்கிடனும் என்றார் 


என்னங்கய்யா நீங்களே அறுவடை பன்றீங்க ஆள் யாரும் வரலையா என்றதும்? 


பெரிய காணிகாரங்க கூப்ட்டாலே இன்னைக்கு ஆள் வர மாட்ராங்க, இதுல நான் கூப்ட்டா வந்துர போறாங்க, எல்லா நாள் திட்டத்துக்கு போயிடுறாங்க, இது வெறும் ஒரு காணி தான் ஐயா, அதனால ஈசியா அறுத்துடலாம் என்று முடித்தார் 


சரிங்கய்யா இத அறுவடை பண்ணி எங்க விப்பீங்க? என்றதும் 


இது விக்குறதுக்கு இல்லைங்கய்யா, நம்ம வீட்டுக்கு, நமக்கு அண்ணன் தம்பி இருக்காங்க, நம்ம வெச்சிகிட்டது போக மீதிய அவங்களுக்கு கொடுத்துருவ, காலையில கூழ் காச்சி குடிப்பாங்க, இல்ல களி பண்ணி சாப்பிடுவாங்க


இது எந்த ரசாயனுமும் கலக்காத பயிர் ஐயா, பாதி விளைச்சலா இருந்தாலும் பரவாயில்ல ரசாயனம் மட்டும் கலக்கமாட்டோம், பயிரும் ஆரோக்கியமா இருக்கனும் அதை சாப்பிடுற நம்மளும் ஆரோக்கியமா இருக்கனும் என்று சிரித்தபடி முடித்தார்


கேழ்வரகு என்ன பண்ணி சாப்பிடுவீங்க? என்றதும் 


என்னங்கய்யா இப்படி கேட்டுட்டிங்க, வீரப்பன் தெரியுமா உங்களுக்கு? அவருக்கு புடிச்ச உணவே கேழ்வரகு தான், உடம்பு கடைசி வரைக்கும் எப்படி இரும்பு மாதிரி இருந்துச்சுன்னு பாத்தீங்களா, ஒரு தூக்கு கூழ் குடிச்சா ரெண்டு மலை ஏறி இறங்கலாம், சொல்லிருக்காரு


காலையில இந்த இட்லி தோசை சாப்பிடுறதெல்லாம் ஆரோக்கியம் இல்லைங்கய்யா, அப்போலாம் தீபாவளி பொங்கலுக்கு தான் இட்லி தோசை, இப்போ அதைய வழக்கமா ஆக்கிட்டாங்க, அதுகூட நோயும் இன்னைக்கு வழக்கமாகிடுச்சு


நீங்க எந்த டாக்டர்கிட்ட போய் என்ன சாப்பிடலாம்ன்னு கேட்டாலும் எதை வேணும்னாலும் சாப்பிடுன்னு பொத்தாம் பொதுவா சொல்லிட்டு போயிடுவாங்க, ஆனா அப்படி கிடையாது, நாம் சாப்பிடுற சாப்பாடு தான் மருந்து, அத ஆரோக்கியமா சாப்பிடனும், டெய்லி தொடர்ந்து 40 நாளுக்கு காலையில கூழ் கரைச்சு குடிச்சு பாருங்க, சும்மா உடம்பு கயிறு மாதிரி ஆகும், சர்க்கரைய கட்டுபாட்டுல வெச்சிருக்கும், இரத்தம் அழுத்தம் சீரா இருக்கும், உடம்பு சுறுசுறுப்பா இயங்கும், நீங்க சொல்றத உடம்பு கேட்கும் 


ஒரு காலத்துல கேழ்வரகு ஏழைகளோட உணவு இன்னைக்கு பணக்காரங்களோட உணவு, எங்க குடும்பத்துல இன்னைக்கு வரைக்கும் சிறுசா இருந்தாலும் பெருசா இருந்தாலும் காலையில எல்லாருக்கும் கூழ் தான், சாம்பரோ ரசமோ ஓட்டல் போய் சாப்பிடவே மாட்டோம் 


கேழ்வரகு கூழ், கம்பங் கூழ், ரேஷன் அரிசி, பட்டை தீட்டாத அரிசி, மரவள்ளி கிழங்கு, மல்லாட்டை, பனங்கிழங்கு, பலாக்கொட்டை சாப்ட்டு வேலை செய்யுங்க, உடற்பயிற்சி செய்யுங்க அப்பறம் எப்படி வியாபாரம் ஆகும் இன்சுலின் ஊசி இன்சுலின் மாத்திரை யெல்லாம், எல்லாமே நம்ம உணவுல தான் இருக்கு என்று முடித்தார் 


மாலை வேலை என்பதால் நாங்கள் இருக்கும் பகுதியிலிருந்து வடக்கு திசையில் ஆங்காங்கே மயில்கள் உணவுக்காக மேய்ந்து கொண்டிருந்தன, ஒரு பக்கம் வாழை தோட்டம், ஒரு பக்கம் செண்டு மல்லி தோட்டம், ஒரு பக்கம் மாந்தோப்பு, ஒரு பக்கம் மல்லிகை தோட்டம், ஒரு குயில் மரக்கிளையில் அமர்ந்து கொண்டு நிதானமாய் பாடிக் கொண்டிருந்தது, இருட்டுவதை உணர்ந்து மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் மேய்ச்சலை நிறுத்திக் கொண்டு தங்களது வீட்டை நோக்கி புறப்பட ஆயுத்தமாகி கொண்டிருந்தன, வானில் ஐந்தாறு கிளிகள் கீ கீ கீ என கத்தியபடியே வேகம வேகமாய் கூட்டை நோக்கி பறந்து சென்றுக் கொண்டிருந்தன, எங்கோ வெகு தொலைவிலிருந்து மாரியம்மா எங்கள் மாரியம்மா என்று எல்.ஆர். ஈஸ்வரியின் பாடல் மிக மெலிதாய் காற்றில் கலந்துபடி வந்து கொண்டிருந்தது, 30 நிமிடங்களுக்கு இடைவெளியில் அவ்வப்போது ஒரு இருசக்கர வாகனம் வந்து போய் கொண்டிருந்தது


சுற்றியுள்ள அத்தனையும் கவனித்துவிட்டு 


ஐயா நீங்க ஆரோக்கியமா இருக்கிறதுக்கு காரணம் உணவு தான் சொன்னீங்க ஆனா அது மட்டும் இல்லைங்கய்யா அதையும் சேர்த்து நீங்க வாழும் இது போல சுத்தமான இயற்கை சுழலும் கூட, இதை ஒத்துக்குறீங்களா? என்றதும் 


தனது மெலிதான சிரிப்பு கலந்து ஆமாம் என்பவரை


இப்போ உங்கள புகைப்படங்கள் எடுத்திருக்கன் அதை எதுல போட போறேன் தெரியுமா? இன்ஸ்டாகிராம்ல

இன்ஸ்ட்டாகிராம்னா என்னன்னு தெரியுமா என்றுதும்?


தனது சட்டை பாக்கெட்டில் இருந்து ஒரு பழைய கீபேட் மொபைலை வெளியே எடுத்து காட்டி இதான் என்னுடைய டெலகிராம் என்றதும் 


இருவரும் ஒருவரையொருவர் பார்த்து வாய்விட்டு சிரித்தோம் 


பின் இருவரும் சிரித்து ஆசுவாசபடுத்திவிட்டு


சரிங்கய்யா, நான் கிளம்புறேன் இருட்டுது, உடம்ப பாத்துக்கோங்க, மறுபடியும் இந்த பக்கம் வரும் போது உங்கள பாக்குறேன் என்று புறப்படும் போது 


கொஞ்சம் கேழ்வரகு பையில போட்டு தரேன் எடுத்துட்டு போய் கூழ் வெச்சி குடிங்கய்யா, கொஞ்சம் இருங்க என்று நிலத்திலிருந்து சட்டென வரப்பின் மேலே ஏற முயன்றவரை அன்போடு கையை பிடித்து தடுத்தி நிறுத்தி, நீங்க வேலைய பாருங்க, நான் கிளம்புறேன் என்று அவருக்கு சிரித்து தலையாட்டி அவரிடமிருந்து விடைபெற்று அங்கிருந்து நகர்ந்தேன் 


வீட்டை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் வழி முழுக்க அவரது சிந்தனையே


ஒரு விவசாயி வெறும் விவசாயி மட்டுமல்ல, ஒரு கைதேர்ந்த மருத்துவனும் கூட


இன்று நல்ல ஆரோக்கிய உணவுகளை உண்ணும் மூன்றே நபர்கள் விவசாயி, மருத்துவர், செல்வந்தர் 


ஆனால் இதில் விவசாயியை தவிர பொது மக்களுக்கும், சாமனியனுக்கும் எதை உண்ண வேண்டும் எப்படி உண்ண வேண்டும் என்பதை மருத்துவரும், செல்வந்தரும் வெளிபடையாக கொண்டு சேர்ப்பதில்லை 


கொண்டு சேர்க்க முற்படும் விவசாயின் பேச்சு ஏழை என்பதால் அவனது உணவுமுறையும், அறிவுரையும் சபை ஏறுவதுமில்லை


நமது குடும்பம் எப்படி ஆரோக்கிய உணவை உண்ணுகிறதோ அதேபோல் நமது நாட்டின் பொது ஜனங்களும் ஆரோக்கிய உணவை உண்டு மகிழ்ந்து நூறு வரை அவர்களது சந்ததிகளோடு வாழவேண்டும் என்ற தன்னலமில்லாத ஓர் பரந்த எண்ணம் உலகில் விவசாயியை தவிர வேறு எந்த மனிதனுக்கும் சாத்தியமில்லை 


உணவுகளின் மருத்துவமும், மகத்துவமும் பற்றிய ரகசியங்கள் மற்ற மனிதர்களால் மறைக்கபடலாம், காக்கபடலாம் ஆனால் எதையும் தன்னுள் ஒளித்து வைத்துக் கொள்ள தெரியாத பரிசுத்தமான உயிரினம் விவசாயி


ஒருவேளை அதனால் தான் என்னவோ பல மனிதர்களால் விவசாயிகள் இன்றும் தெய்வமென மதிக்கபடுகிறார்கள் போற்றபடுகிறார்கள் என்ற உதட்டோர சிரிப்புடன் வீடு வந்தடைந்தேன்.


#கீழ்குமாரமங்கலம்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்