குடும்பனின் வரலாற்றில்
நீரும் பழிசுமந்த நாள்.
நிலமே கதியென்று
உழைத்துக் கிடந்தவர்களின்
கையளவுக் காணிகளை
அதிகாரக் களவாணிகள்
களவாடிய பின்பும்,
குத்தகை வாரத்துக்கும்
கொத்துக்கும் கூலிக்குமாய்
உழைத்து மாய்ந்திடத்
தஞ்சமடைந்த ஆவிகளின்
தொப்பூள்க் கொடிகள் யாவும்
அந்த நிலத்தையே தான்
சுற்றிக் கிடந்தன.
கதிரறுப்பு
களம் மாறிப் போனாலும்,
கழுத்தறுப்பு இழவுகள்
பல சுமந்தாலும்,
நிலத்தறுப்பு பொறுக்காது
மாங்கு மாங்கென்று
உழைத்த மேழியரின்
உயிர் அறுத்துக் கொன்ற
அதிகாரப் பயங்கரவாதம்,
கீழ்வெண்மணித் தீயாக
எரிந்து கொண்டிருக்கிறது;
தாமிரபரணி ஆறாக
ஓடிக் கொண்டிருக்கிறது
இன்னும்.
நீரிலே கரைந்திருக்கும் மாஞ்சோலை - தாமிரபரணி ஈகியருக்கு
வீர வணக்கம்.🇧🇫🌸☘️🇧🇫
நெல்லைமாவட்டம் பாளையங்கோட்டை
தாமிரபரணி நதிக்கரை
பாளையங்கோடையை திருநெல்வேலியுடன் இணைக்கும் ஏறக்குறைய 200 ஆண்டுகள் பழமையான சுலோச்சனா முதலியார் பாலம்.
மேலும் இந்த இடமானது இந்த சுதந்திர இந்திய வரலாற்றில் அரச பயங்கரவாதிகளால் கறை படிந்த இடமானது.
ஆம்
இவ்விடம்அருகே 23/07/1999 அன்று மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளிலாளர்களின் உரிமைக்காகவும், கூலி உயர்வுக்காக போராடி கைதாகி திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கபட்ட 650 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை விடுதலை செய்யக்கோரியும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியில் ஈவு இரக்கமற்ற அரச பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதிக்கபட்டு ஆற்றில் விழுந்து 10 வயது பாலகன் உள்ளிட்ட 17 பேர் துடிதுடித்து செத்து மடிந்து காலத்தால் அழிக்க முடியாத கறைபடிந்த இடம்.
கீழ வெண்மணி மண்ணாக இருந்தாலும் தாமிரபரணியாக இருந்தாலும் செத்து மடிந்தவர்கள் இந்த மண்ணின் பூர்வக்குடி உழைக்கும் மக்கள்தான்.
உரிமைக்காக ஒன்று சேரும் மக்களின் எழுச்சியை விரும்பாத அரசு, வன்முறை மூலம் தன் அடக்குமுறையையும் முதலாளிகளுக்கு ராஜ விசுவாசத்தையும் காட்டி முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்களுக்கு பதில் மரணமாகவே இருந்தது என்பது வேதனையான உண்மை.
அரசியலதிகாரம், ஆட்சிஅதிகாரம் கிடைக்காதவரை இதே போல மரண ஓலம் கேட்டுகொண்டே தான் இருக்கும் என்பதும்,
மாஞ்சோலை தொழிலாளர்களின் உரிமை போராட்டத்தில் பங்கேற்ற டாக்டர் க.கிருஷ்ணசாமி, சோ.பாலகிருஷ்ணன், எம்.அப்பாவு, ஜேஎம் ஆரூண், வேல்ராஜ், ஆர்.ஈஸ்வரன், சிபிஐ சிபிஐ மாவட்ட செயலாளர்கள், ஐக்கிய ஜமாத் தலைவர்கள் மட்டுமல்ல ஒரு போதும் பிறழ் சாட்சியாக மாறாமல் ஓடிக்கொண்டு இருக்கும் தாமிரபரணி தாய்க்கும் தெரியும்.
தியாகிகளுக்கு வீரவணக்கம்

Comments
Post a Comment