குடும்பனின் வரலாற்றில்

 // குடும்பன் - குடும்பத்தலைவன் - குடித்தலைவன்//

#குடும்பத்தலைவன் 

  மக்கட்டொகுதிக்கு அடிப்படை யலகாயிருப்பதும், உலகில் முதன்முதல் தோன்றிய கூட்டொழுங்கும் குடும்பமே. கட்டுப் பாடின்றி ஒருவனுக்கு ஒரு மனைவியோ பல மனைவியரோ இருந்த முதற் காலத்தில், பிள்ளை பிறக்கும்வரை கணவனாகவும், அதன்பின் கணவனுந் தந்தையுமாகவும் இருந்த குடும்பத் தலைவனே தன் குடும்பத்தை ஆண்டுவந்தான். புதல்வரும் புதல்வியரும் பிறந்து பெரியோராகி மணந்து பல்குடும்பமான பின், கூட்டுக் குடும்பத் தலைவனான பாட்டன் அல்லது பூட்டன் (பாட்டனின் தந்தை) அல்லது சேயான் (பூட்டனின் தந்தை) ஆண்டு வந்தான். 

  இக்காலத்தும் ஒருசிலர் இருநூறாண்டும் மேலும் வாழ்வதால், இருவளமும் மிக்க தொடக்கக் காலத்தில் மாந்தர் சிலர் நாலைந்து தலைமுறை நீடித்திருந்தனர் என்பதில், எள்ளளவும் ஐயுறவிற் கிடமில்லை. 

#குடித்தலைவன் 

  கூட்டுக்குடும்பங்கள் குலைந்து தனித்தனிக் குடும்ப வாழ்க்கையை மேற்கொண்டபின், குடிமுதியனே குடித்தலை வனாக ஆண்டுவந்தான்.

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

   குடியென்னுஞ் சொல் முதற்காலத்தில் வீட்டையே குறித்தது. குடியிருத்தல் = வீட்டில் வதிதல். குடிக்கூலி = வீட்டு வாடகை. மனைவி பெரும்பாலும் வீட்டிலிருந்து சமையல் செய்து பிள்ளைகளைப் பேணுவதால், குடியென்னுஞ் சொல் இடவாகு பெயராய் மனைவியையுங் குறித்தது. அவனுக்கு இருகுடி, மூத்த குடி(யாள்), இளைய குடி(யாள்), என்னும் வழக்கைக் காண்க. ஒ.நோ: மனை = வீடு, மனைவி; இல் = வீடு, மனைவி. 

  பல வீடுகள் சேர்ந்து ஓர் ஊராவதால், குடி என்னுஞ் சொல் சினையாகுபெயராக ஊரையுங் குறித்தது, சில வீடுகள் சேர்ந்த சிற்றூர் சிறுகுடி யெனப்பட்டது.

"சிறுகுடி யீரே சிறுகுடி யீரே 

 தெய்வங் கொள்ளுமின் சிறுகுடி யீரே"(சிலப். 24:9 கண்ணகிவழி.)

செங்காட்டங்குடி, காரைக்குடி, மன்னார்குடி, தூத்துக்குடி என்பன, அடைசொல் கொண்ட ஊர்ப்பெயர்கள். சிறுகுடி மக்கட்டொகையாற் பெருத்த பின், ஒரு அல்லது பல குடும்பம் பிரிந்துபோய் வேறு புதுக்குடியை அல்லது குடிகளைத் தோற்றுவித்தன. முன்பு சிறுகுடியாயிருந்தது பின்பு பெருங்குடியாகி இறுதியில் முதுகுடியுமாயிற்று. முதற்கண் ஒரு வீடாகத் தோன்றியதே, பின்னர்ப் பல வீடுகளாகப் பல்கி ஓர் ஊராகு மென்பதை, நெல்லை மாவட்டச் சங்கரநயினார் கோவிலின் தென்கிழக்கில் இருகல் தொலைவில், இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஒரே வீடாகத் தோன்றி ஒற்றையூர் எனப்பட்டது, இன்று பல வீடாகப் பெருகியிருப்பதால்அறியலாம். 

  குடியென்னுஞ் சொல், நாளடைவில், முறையே வீட்டு வாழ்வையும், வீட்டு வாழ்நனையும், அவன் குடும்பத்தையும், அதன் பெருக்கமான கூட்டுக்குடும்பத்தையும், அதன் விரிவான இனத்தையும், அதன் மரபுத் தொடர்ச்சியான வகுப்பையும் அல்லது குலத்தையும், ஊர்மக்களையும், நாட்டு மக்களையும் குறிக்கலாயிற்று. 

  குடி=1. வீட்டுவாழ்வு. எ-டு: குடிகொள்ளுதல். 

2.நிலை யான வீட்டுவாழ்வு. குடியானவன் = நிலையான வீட்டுவாழ்வு கொண்ட உழவன். 

 3. வீட்டு வாழ்நன், நாட்டு வாழ்நன். குடி (ஒருமை). குடிகள் (பன்மை). 

4. குடும்பம். குடித்தனம் = குடும்ப வாழ்க்கை, குடும்பத்தை நடாத்துதல். 

5. ஊர்மக்கள். குடிமகன் =ஊர்த் தொண்டனான அடுத்தோன் (முடிதிருத்தாளன்). 

6. கூட்டுக் குடும்பம், இனம். "ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்" (புறம். 183). 

7. குலம். நாட்டினம். குடிசெயல்வகை (குறள். அதி. 103). 

8. நாட்டு மக்கள். மன்னவன் கோனோக்கி வாழுங் குடி.(குறள். 542). 

9.மரபுவழி. #பாண்டியர்_குடி. 

   குடி - குடும்பு - குடும்பம். ஒ.நோ: குழி - குழும்பு. குடும்பு என்னுஞ் சொல் உத்தரமேரூர்க் கல்வெட்டில் ஊர்ப் பிரிவைக் (ward) குறித்தது. குடும்பம்- குடும்பன். #பள்ளர் என்னும் #மள்ளர்குல ஊர்த்தலைவன் #குடும்பன் எனப்படுவான். 

  –-----------------------------------

மண்ணில் விண்

அல்லது 

வள்ளுவர் கூட்டுடைமை

மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்