குடும்பனின் பார்வையில்

 பிற்காலச்சோழர்களின் நீர் மேலாண்மை என்பது ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் நம் கண்முன்னே காட்சியாக காணக்கிடைக்கிறது என்பதை சுப.வீ.யும் அருள்மொழியும் அறியட்டும்.

பதிவின் காணொளியில் ஐயா.சுப.வீரபாண்டியன் அக்கா அருள்மொழியின் பேச்சை மேற்கோள்காட்டுகிறார்.


கரிகால் சோழன் Vs இராஜராஜன்,  இராஜேந்திரன் என்று ஒப்பிட்டுப் பார்க்கிறாராம். கரிகாலன் என்றால் கல்லணை அடையாளம். இராஜராஜன், இராஜேந்திரன் என்றால் கோவில்கள்தானே அடையாளம் என்கிறார்.


அதாவது கரிகால்சோழன் கல்லணையைக் கட்டி வேளாண்மையைப் பெருக்கினான். இராஜராஜனும் இராஜேந்திரனும் கோவில்தானே கட்டினார்கள்.  இதுவா அடையாளம் என்று குத்திக்காட்டுகிறாராம் சுபவீயும் அருள்மொழியும்.


ஆகவே,  சுப.வீக்கும் அருள்மொழிக்கும் வரலாறு என்றால் என்னவென்றே தெரியவில்லை என்பது தெளிவாகிறது. அவர்கள் கற்ற வரலாறு கோவில்களைப் பற்றி மட்டுமே என்று தெரிகிறது. அதைத்தாண்டி அவர்கள் செல்லவில்லை. செல்ல விரும்பவில்லை. 


சோழர்கால நீர்மேலாண்மை, இராஜராஜன் இராஜேந்திரன் வெட்டிய ஆறுகள், குளங்கள், வாய்க்கால், ஏரிகள், தடுப்பணைகள், ஏரிகள் பராமரிப்பு, வேளாண்மை, நீர்ப்பாசனம் என்ற தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள், கட்டுரைகள் உள்ளன. இவற்றில் ஒன்றைக்கூட. இவர்கள் படித்தது இல்லை. பார்த்ததும் இல்லை. இந்தத் தலைப்பில் இணையத்தில் தேடினால் கூட ஏராளமானத் தரவுகளைப் பெறமுடியும். அதையும் இவர்கள் செய்வதில்லை.


இவர்களுக்குத் தெரிந்தது எல்லாம் கோவில்களை குறை சொல்வது. இராஜராஜனை வசைபாடுவது.


இவர்கள் பாடும் பாட்டுக்கு எசப்பாட்டு பாடுவது நமக்கும் வழக்கமாகிவிட்டது.


கரிகால்சோழனின் பேரன்களான இராஜராஜனும் இராஜேந்திரனும் தாத்தன் கரிகாலனை  மிஞ்சிய சமூக அறநெறிக்காவலர்கள் என்னும் பாட்டை நாம்  பாடுவோம். 


பிற்காலச்சோழர்களின் நீர் மேலாண்மை என்பது ஆயிரம் ஆண்டுகள் கடந்து இன்றும் நம் கண்முன்னே காட்சியாக காணக்கிடைக்கிறது என்பதை சுபவீயும் அருள்மொழியும்  அறியட்டும்.


வீராணம் ஏரியிலிருந்து தொடங்குவோம்.


வீரநாயணன் ஏரி என்று சோழர் காலத்திலும்  வீராணம் ஏரி என்று தற்போது அழைக்கப்படும் மிக பிரம்மாண்டமான ஏரி.

1000 ஆண்டுகளுக்கு முன் பராந்தகச் சோழர் காலத்தில் வெட்டப்பட்டு இராஜராஜன் , இராஜேந்திரன் காலத்தில் பராமரிப்பு செய்யப்பட்டது.


 இந்த ஏரி 15 கி.மீ நீளமும்,

 5 கி.மீ அகலமும் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும்.  இதன் கொள்ளளவு 1445 மில்லியன் கன அடி ஆகும்.


ஏரியின் மூலம் கிழக்குகரையில் உள்ள 28 பாசன மதகுகளின் மூலமாகவும் எதிர்வாய்க் கரையில் உள்ள 6 பாசன மதகுகளின் மூலமாகவும் சிதம்பரம் பகுதியில் சுமார் 150  கிராமங்களில் உள்ள 50,000  ஏக்கர் விளைநிலங்களுக்கு நேரடியாக விவசாயம் செய்யப்படுகிறது.


 சேத்தியாத்தோப்பு பகுதிகளில் உள்ள சுமார் 40000 ஏக்கர் விளைநிலங்களுக்கு மறைமுகமாகவும் பாசன வசதியைச் செய்கிறது.


இன்றளவும் சென்னை நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது.


ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருகிறது இந்த சோழர்கால ஏரி.


இந்த வீராணம் ஏரி நீரை ஒருமுறையேனும் குடித்திருப்பார்கள் அக்கா அருமொழியும் ஐயா சுப.வீ யும். இல்லையென்றாலும் செம்பரபாக்கம் ஏரித் தண்ணீராவது இவர்கள் தாகம் தீர்த்திருக்கும். இந்த ஏரியும் சோழர்கால கட்டமைப்புதான்.


---------------------------


காவிரி ஆற்றிலிருந்து பல புதிய வாய்க்கால்கள் வெட்டப்பட்டு அவை மூலமாக ஆற்றுநீர் ஏரிகளிலும் குளங்களிலும் பாய்ச்சப்பட்டன.


நூற்றுக்கும் மேற்பட்ட ஆறுகள் பிற்காலச்சோழர்கள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டன.


1.  தஞ்சாவூருக்கு வடக்கே  வீரசோழன் வடவாறு.


2  திருப்பனந்தாளுக்கு வடக்கே ஓடும் மதுராந்தகன் வடவாறு.


3.பந்தணைநல்லூர் வழியாகப் பாய்ந்தோடும் மண்ணியாறு


4.திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் மற்றும் கோனேரிராஜபுரம் வழியாக ஓடும் கீர்த்திமான் ஆறு.


 5.குடமுருட்டியில் பிரியும் முடிகொண்டான் ஆறு. (ARE.No:75/1927-28).


6.திருவாரூர் மாவட்டம் திருமணஞ்சேரிக்கு அருகிலுள்ள வீரசோழன் ஆறு, (SII.Vol:8.No:243).


7.குத்தாலத்துக்கு அருகிலுள்ள விக்கிரமனாறு.


இன்னும் ஏராளமான சோழர்கால ஆறுகள் பட்டியலில் உள்ளன.


 இவை தவிர தடுப்பணைகள் பல கட்டப்பட்பட்டு நீர் தேக்கப்பட்டது. திருவரங்கத்துக்கு அருகிலுள்ள கோவிலடியில் காவிரிக்கு குறுக்கே ஒரு பேரணை, கட்டப்பட்டது.


ஆற்றுக் கால்வாய்கள் 


நதிகளிலிருந்து பல புதிய வாய்க்கால்கள் வெட்டப்பட்டு, அவை மூலமாக ஆற்று நீர் ஏரிகளிலும் குளங்களிலும் பாய்ச்சப்பட்டன. சோழர் காலத்தில் பழைய கால்வாய்கள் தூர்வாரப்பட்டன. பொதுவாக வற்றாத ஜீவ நதியாகத் திகழ்ந்த காவிரி நதியிலிருந்து கால்வாய்கள் பல வெட்டப்பட்டு, நீர் கொண்டுவரப்பட்டன. இந்தக் கால்வாய்கள் ஆண்டு முழுவதும் ஏரி வாரியத்தால் முறையாகப் பராமரிக்கப்பட்டன. பல கால்வாய்கள் அவற்றை வெட்டிய சோழ மன்னர்கள் பெயரிலே அழைக்கப்பட்டன.


இராஜராஜன் வாய்க்கால், திருச்சி மாவட்டம் திருமழபாடியில் வெட்டப்பட்டது (SII.Vol:15No:644). 

 அவரது மகனான இராஜந்திர சோழன் வாய்க்கால், இதே மாவட்டத்திலுள்ள கீழ்ப்பழுவூரில் வெட்டப்பட்டது. (SII.Vol:3.No:71).  மேலும் அன்பில் என்ற கிராமத்தில் இவனது பெயரிலே மற்றொரு வாய்க்காலும் வெட்டி, நீர் கொண்டு வரப்பட்டது (SII.Vol:8.No:192).


இவை தவிர  பல புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907), ஆதிச்ச வாய்க்காலை வெட்டி, நீர் கொண்டு வந்தான். முதலாம் பராந்தக சோழன் காலத்தில் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் உத்தமசீலி வாய்க்கால் வெட்டப்பட்டது (SII.Vol:3.No:133). முதலாம் இராஜராஜன் திருச்சியில், புகழ் மிக்க உய்யக்கொண்டான் வாய்க்காலை அமைத்தான். (ARE.No:24/1925). திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசத்தில் பராந்தக சோழன் பரமேஸ்வர வாய்க்காலை வெட்டி, பாலாற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்தான் (ARE.No:160/1940). இதே மாவட்டம் உக்கலில் இரண்டாம் இராஜேந்திர சோழன், பராக்கிரம சோழ வாய்க்காலை வெட்டினான் (ARE.No:160/1940). முதலாம் இராஜராஜன், வேலூர் மாவட்டம் திருமால்பூரில் விமலாதித்த வாய்க்காலை வெட்டினான் (SIIVol:13.No:30).  திருச்சி மாவட்டம் லால்குடிக்கு அருகிலுள்ள பெருவள வாய்க்கால் மற்றும் இதே ஊரில் பைங்கணி வாய்க்கால்களும் இவன்  காலத்தில்தான்  வெட்டப்பட்டன (SII.Vol:2.No:5).


ஏரிப் பாசனம் 


சோழர் காலத்தில் ஏரிப்பாசனம் சிறப்புற்றது. மற்ற பாசன முறைகளை விட ஏரிப்பாசன முறை சிறப்பானது, பாதுகாப்பானது, எளிதானது. எனவே சோழ மன்னர்கள் நாடு முழுவதுமுள்ள பல ஏரிகளைப்  புதுப்பித்தும் தேவைப்படும் இடங்களில் புதிய ஏரிகளை வெட்டுவித்தும் சிறப்பாகப் பணியாற்றினர். சோழ மன்னர்கள் பலர் தம் பெயரில் புதிய ஏரிகளை அமைத்தனர். 


விழுப்புரம் மாவட்டம் உலகபுரத்தில் உள்ள  கண்டராதித்த ஏரி.  (ARE.No:140/1919).   


திருச்சி மாவட்டம் திருமழப்பாடியில் செம்பியன் மாதேவ ஏரியை  (SII.Vol:5.No:644).


 காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்திலுள்ள ஏரி.


 திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசத்தில் சுந்தரப் சோழப் பேரேரி, குந்தவைப் பேரேரி  என்ற இரு ஏரிகள்.

 (SII.Vol:3.No:147). 


 முதலாம் இராஜேந்திர சோழன் தன் வட இந்திய வெற்றியை நினைவுகூருமுகமாய் கங்கை கொண்ட சோழபுரத்தில் வெட்டிய சோழ கங்கம் என்ற ஏரி. 


வேலூர் மாவட்டம் சோளிங்கபுரத்தில் சோழவாரிதி ஏரி . (Epi.Gra.Ind.No:3.P:91). 


 விண்ணமங்கலம் ஏரி. (SIIVol:2.No:380).


 திருவண்ணாமலை மாவட்டம் சோதியம்பாக்கம் ஏரி. (SII.Vol:3.No:11).   


 குளித்தலைக்கு அருகேயுள்ள நங்கவரம் ஏரியும் (SII.Vol:8.No:651)


 திருக்கோவிலூரில் புத்தேரி. (SII.Vol:7.No:798).


 புதுக்கோட்டை மாவட்டம் திருவேழ்ப்பூர் ஏரி.


 பாண்டிச்சேரியிலுள்ள பாகூர் ஏரி.


 பெரம்பலூர் மாவட்டம் கீழ்ப்பழுவூரில் உள்ள பன்மகேஸ்வரப் பேரேரி  (SII.Vol:5.No:724). 


 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஏரி.  (ARE.No:355/1917).


 புகழ்பெற்ற செம்பரம்பாக்கம் ஏரி மூன்றாம் இராஜராஜன் காலத்தில் வெட்டப்பட்டது (ARE.No:191/1930).


சித்தூருக்கு அருகேயுள்ள மேகலாசப் பல்லி ஏரி.


சோழர் காலத்தில் ஏற்கெனவே இருந்த பல ஏரியின் கரைகள் உயர்த்தப்பட்டன. முதலாம் இராஜராஜன் காலத்தில் பரமேஸ்வரப் பேரேரியின் கரையை அம்பலக்கூத்தன் என்பவன் உயர்த்தினான் (ARE.No:191/1977). மேலும் நரசிங்க மங்கலத்து ஏரியை அருணிதிக் கலியன் என்ற அரசு அதிகாரி புனரமைத்தான் (SII.Vol:3.No:106). புயலால் உடைந்த திருக்காஞ்சி ஏரிக்கரையை இவ்வூர்த் தலைவனே தன் சொந்தச் செலவில் புனரமைத்தான் (ARE.No:215/1919). ஏரிகள் மூலம் நல்ல பாசன வசதி பெறவேண்டும் என்பதற்காகப் பல ஏரிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. இதற்காகும் செலவை அந்தந்த ஊர்க் கோயில்களே ஏற்றுக்கொண்டன. சான்றாக திருவள்ளூர் மாவட்டம் திருக்கச்சூரில் உள்ள ஏரியைப் புனரமைக்கும் பணியை அவ்வூர்க் கோயிலே ஏற்றுக்கொண்டது (ARE.No:295/1909).


சில சமயங்களில் ஏரிகளிலிருந்து புதிய வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. இது நிலங்கள் அதிக பாசன வசதி பெறவேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டது. சான்றாகத் திருவாய்ப்பாடி கிராமத்தில்  உள்ள ஏரியிலிருந்து புதிய வாய்க்கால் வெட்டப்பட்டது. அதற்காகும் செலவை ஈடுகட்ட, அவ்வூர் தரிசு நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. இதன் மூலம் புதிய நிலங்கள் பாசன வசதி பெற்றன (ARE.No:88/1931-32).  சோழர் காலத்தில் அரசும் அரசு அலுவலர்களும் தவிர, தனி மனிதர்களும் நீர்ப் பாசனத்திற்குத் தொண்டுகள் பல புரிந்துள்ளனர். சான்றாகப் பதக்கம் என்ற ஊரில் ஏரியின் குமிழியை அவ்வூர்ப் பிரமுகன் புஷ்ப மாணிக்க செட்டி    என்பவன் கட்டுவித்தான் (ARE.No:171/1942). விழுப்புரம் மாவட்டம் பெருமுக்கல் கிராமத்தில் உள்ள ஏரியின் தூம்பைக் காக்கு நாயகன் என்பவன் கட்டுவித்தான். வேலூர் மாவட்டம் ஒழுகூர் ஏரியின் தூம்பை மாவலி வாணராயன் என்ற சிற்றரசன் கட்டுவித்தான். காவேரிப் பாக்கத்தில் உள்ள ஏரியின் தூம்பை வீர வினோதச் சம்புவராயன் கட்டுவித்தான் (ARE.No:390/1905).   ஏரிகளில் உள்ள தூம்புகள் கல்லிலே அமைக்கப்பட்டன. அவை நீர் வெளியேறுவதைத் தடுத்தன. மேலும் வெளியேறும் நீரின் அளவையும் கட்டுபடுத்தின. சோழர் காலத்தில் ஏரிப் பாசனம், உள்ளூர் ஏரி வாரியத்தின் மூலம் செம்மையான முறையில் நிர்வகிக்கப்பட்டது.


குளத்து நீர்ப் பாசனம் 


சோழர் காலத்தில் குளத்துப் பாசன முறை சிறப்புடன் காணப்பட்டது. பல ஊர்களில் ஆற்று நீர்க் கால்வாய்கள் மூலம் குளங்களை  அடைந்து அவை விவசாயத்துக்கும் கால்நடைகளுக்கும் பொதுமக்கள் நீர் அருந்தவும் பயன்பட்டன. குளங்களில் இருந்து நீர் வெளியேறுவதைத் தடுப்பதற்காக “மாண்டுகள்” (தடுப்புகள்)  அமைக்கப்பட்டன. சோழர் காலத்தில் பல புதிய குளங்கள் வெட்டப்பட்டன. சான்றாகப் புதுக்கோட்டை மாவட்டம் திருவெறும்பூரில் முதலாம் பரந்தக சோழன் கவிர் குளம் என்ற குளத்தை வெட்டினான் (SII.Vol:17.No:336). பல குளங்களுக்கு மதகுகளும் மாண்டுகளும் அமைக்கப்பட்டன. ஏரிகளுக்குத் தூம்பு போல், குளங்களுக்கு மாண்டுகள் செயல்பட்டன. சான்றாக மூன்றாம் இராஜராஜன் காலத்தில் விழுப்புரம் மாவட்டம் துரிஞ்சம் பூண்டியிலும், சிறுவாங்கூரிலும் உள்ள குளங்களில் புதிய மாண்டுகள் அமைக்கப்பட்டன. அவை தடுப்புகள் போன்று செயல்பட்டன.


குளங்களிலிருந்து நீரை வெளியேற்றும் கால்வாய்கள் கற்களால் கட்டப்பட்டன. இவை குழாய்கள் போன்று காணப்பட்டன. இந்த குளங்களை முறையாகப் பராமரிக்க, அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர் (SII.Vol:8.No:652). பொதுவாக ஏரி வாரியத்தவர்களே இக்குளங்களை நிர்வகித்தனர். குளங்களில் உள்ள வண்டல்களை அகற்ற, தனிப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். சான்றாக திருவண்ணாமலை மாவட்டம் காப்பளூரில் குளத்து வண்டல் எடுக்க. பராந்தக சோழன் காலத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டனர் (ARE.No:284/1939).  இப்பணிக்காக அவர்களுக்குக்  கருவிகளும் ஓடங்களும் வழங்கப்பட்டன. கோடைக் காலங்களில் குளங்களில் நீர் வற்றிய பின் அவற்றின் அடியில் தேங்கும் வண்டல்கள் எடுக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டன. இதற்குக் “குளவடை” என்று பெயர்.


கிணற்றுப் பாசனமும் சிறப்பாகச் செயல்பட்டது.


சோழர்கால நீர் மேலாண்மை குறித்த அறிஞர் முடிவு யாதெனில்..


"சோழர் காலம், தமிழகத்தின் ஈடு இணையில்லாப் பொற்காலமாகும். பசி, பட்டினி, பஞ்சம் போன்றவை மக்களை அண்டாமல் சோழ மன்னர்கள் காத்தனர். நாட்டின் வளர்ச்சிக்கு வேளாண்மையே அடிப்படை என்பதால் அதை வளர்ப்பதில் அதிக முனைப்பு காட்டினர். வேளாண்மைக்கு அடிப்படையான நீர் வீணாகக் கடலில் சென்று கலக்கக் கூடாது என்பதற்காக ஏரிகள், குளங்கள் வெட்டி, அவற்றைப் பாசனத்துக்கு நன்முறையில் பயன்படுத்தினர். சோழர்கள் நீர்ப் பாசன உத்தியைப் போன்று சிறப்பான முறையை வேறு எந்நாட்டிலும், எக்காலத்திலும் காணவியலாது. சோழர்கள் அரசு வேளாண் நலன் சார்ந்த அரசாகத் திகழ்ந்தது. சோழ மன்னர்கள் கால வெள்ளத்தில் மறைந்தாலும், அவர்கள் வெட்டிய ஏரிகளும் கால்வாய்களும், குளங்களும் இன்றும் நிலைத்து நின்று அவர்கள் புகழைப் பறைசாற்றி வருகின்றன. சோழர்களின் அரசு மக்கள் நலன் சார்ந்த அரசு (Benevolent Government) என்பதற்கு அவர்களின் நீர் மேலாண்மை உத்தியே சாலச் சிறந்த சான்றாகும்."


இதைப்போலவே பாண்டிநாட்டில் பாண்டிய பேரரசர்களால் செய்யப்பட்ட நீர் நிலைகள்.

தொண்டை நாட்டில் பல்லவர்களின் நீர்நிலைகள்.  இவற்றின் விபரங்கள் குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம். 


தமிழ் நிலத்து வேந்தர்களின் வரலாறு என்பது கோவில்களுடன் முடிந்துவிடவில்லை.


ஆகவே...

ஐயா சுபவீயும் அக்கா அருள்மொழியும் சரியான வரலாற்றை படித்தறிவார்களாக.. 

இல்லையெனில் அதே கல்லூரி மாணவி ஒருவர் உங்கள் கூற்றை எதிர்த்து மறுத்து பேசும் சூழல் உருவாகும்..


=========================


அன்புடன்..

மா.மாரிராஜன்.


( Reference -


(Peer Reviewed) பேரரசுச் சோழர்களின் நீர் மேலாண்மை உத்திகள்.


மு. கயல்விழி

உதவிப்  பேராசிரியர், தமிழ்த் துறை, பச்சையப்பன்  மகளிர்  கல்லூரி, காஞ்சிபுரம்.)

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்