குடும்பனின் வரலாற்றில்

 சங்க காலத்திற்கு முன்பே குமரிக் கண்டத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பாண்டிய மன்னர்கள் ஆழிப் பேரலையின் அழிந்த பின்பு வடக்கு நோக்கி நகர்ந்தனர் .

 ஆழிப் பேரலை நடந்ததை சிலப்பதிகாரம், “பஃறுளியாறுடன் பன்மலை யடுக்கத்துக் குமரியோடும் கொடுங்கடல் கொள்ள” என குறிப்பிடும். 

புறநானூற்று ஒன்பதாவது பாடலைப் பாடிய நெட்டிமையார் என்ற புலவர் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடலின் இறுதி அடிகளில் இவ்வாறு குறிப்பிடுகிறார் 

“ எங்கோ வாழிய குடுமி தங்கோச்

செந்நீர் பசும்பொன் வயிரியர்க் கீத்த

முந்நீர் விழவி னெடியோன்

நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”- புறம்-9-8-11

என்று பாண்டியனை குமரி வரலாற்றோற்றோடு சேர்த்துப் புகழ்கிறார். 

அவ்வாறு குமரியிலிருந்து வந்தவர்களில் மள்ளர்களும் ஆயர்களும் ஆவர் என முல்லைக் கலிப் பாடல் 104, 105 குறிப்பிடுகிறது. 

நெடும் பாடலான முல்லைக் கலியின் சில வரிகளை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 

“ மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின்

மெலிவின்றி மேற்சென்று மேவார்நா டிடம்படப்

புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை

வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்

தொல்லிசை நட்ட குடியொடு தோன்றிய

நல்லினத் தாய ரொருங்குதொக் கெல்லோரும்”- கலி-104- 1-6

“ அரைசுபடக் கடந்தட் டாற்றிற் றந்த 

முரைசுகெழு முதுகுடி முரண்மிகு செல்வற்குச்

சீர்மிகு சிறப்பினோன் தொல்குடிக் குரித்தெனப்

பார்வளர் முத்தமொடு படுகடல் பயந்த

வார்கலி யுவகைய ரொருங்குடன் கூடித்

தீதின்று பொலிகெனத் தெய்வக் கடியர்மார்

வீவில் குடிப்பி னிருங்குடி யாயருந்”

தாவி லுள்ளமொடு துவன்றி யாய்புடன்”- கலி-105-1-8

இம்முல்லைக்கலி பாடல் வரிகளில் குமரி நாடு அழிந்த பின்பு பாண்டியன் சோர்வில்லாமல் 

மேவார்- மேல் நாட்டிலிருந்த புலி வில் கொடிகளை அகற்றி மங்காத புகழையுடைய தென்னவன் கெண்டை மீன் சின்னத்தைப் பொறித்து

 தொல்லிசை- பழம்பெருமை கொண்ட அவன் குடிகளுடன் தோன்றிய ஆயர்களுடன் அரைசு நடத்தினான் எனவும்

105 வது பாடலில்,

அரசுகள் படும் படியாக அழித்து பழைய தொல்குடிக்கு உரிய நிலம் இதுவெனக் கூறி அப்பாண்டி மண்டலம் பயந்த முத்துகள் மற்றும் பல்பொருட்களுடனும் மூன்று முரசுகளுடனும் முதிய குடியிற் பிறந்த பாண்டியனுக்குத் தீதுன்றி அவன் அரசு பொலிகவெனத் தெய்வத்திற்குச் சிறப்புச் செய்த பாண்டியனது கேடில்லாத குடியின் பின்பு தோன்றிய பெரிய ஆயர் குடி என்றும் குறிப்பிடுகிறது. 

இதன் மூலம் மள்ளர்களும் முல்லைநில மக்களும் ஒரே குடியினர் என்பது விளங்கும். 

யாதவர்கள் வேறு. முல்லைநில ஆயர்கள் வேறு.

அதேபோன்று, புரு, யது, த்ருஹ்யு,அனு, துர்வாச போன்ற இனக்குழுக்கள் ஆரியரின் பிரிவுகள் என இராகுலசாங்கிருதியாத்தியாயன் தன்னுடைய ஆரிய அரசர்கள் பற்றிய நூலில் குறிப்பிடுவார். 

சுதாஸ் தலைமையில் நடந்த பத்து அரசர்கள் போர் என்று ரிக் வேதம் குறிப்பிடும் யது இனத்தவர்களும் இன்றுள்ள யாதவர்களும் ஒன்றல்ல எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்