குடும்பனின் பார்வையில்

 ✒️நான் உன்னைத்தான் தேடுகிறேன் என்பதை நீ எப்போது அறியப்போகிறாய்..


ஏதோ 

கொடுக்கவோ,

கேட்கவோ

யாசிக்கவோ

விசாரிக்கவோ விவாதிக்கவோ

பரிகாசம் செய்யவோ

பிராயச்சித்தம் தேடவோ...

எதற்கென்றே தெரியாமல் தேடுகிறேன்.. 

இன்னதுக்கெனத் தெரியாமல் தேடுதலில் எவ்வளவு சுகமிருக்கிறது என்பதை நீயும் ஒரு நாள் அறிவாய்..

அண்மையில் மரணத்தை வலியத் தேடிப் பிடித்துச் செத்துப்போன பிரான்சிஸ் கிருபா என்ற கவிஞனின் பேச்சுகளைக் கேட்டேன்..

நான்குனேரி,.. பத்தினிப்பாறை என்பது அவன் பிறந்த ஊர்..

எட்டாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை விட்டு விட்டு மும்பைக்குப் போய் டீ ஆத்தி, லேத் முதலாளியாகி பின்னர் எழுத்தாளனாக சென்னை திரும்பி இலக்கியம், திரைத்துறையில் தலை தூக்கி பெருங்குடிகாரனாகி 

தன்னையே வருத்தி மரணமடைந்த ஒரு எதார்த்த இளைஞர் ஃபிரான்சிஸ்.

மும்பையில் அவனோடு பழகி இறந்துபோன அவனது நண்பன் கிருபா வின் பெயரை தன்னோட அடையாளமாக்கிக்கொண்ட நேசத்தின் நிஜம் அவன்..

ஏறக்குறைய இறைவன்.. 

கன்னி..

என்ற நாவல்களையும், பல கவிதைகளையும் எழுதியிருக்கிறான்..

என் அறிவு அவனைப்போன்றவர்களை அறியாமல் இருந்ததற்கு வெட்கப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்.

குடும்பத்தில் ஏழாவது பிள்ளை...

மற்ற ஆறு பேர் சராசரியாய் வாழ அவனுக்கு மட்டும் ஏன் இந்த நெருக்கடிச் சாவு ...

யூமா வாசுகி என்ற எழுத்தாளுமை பேராவூரணி பெயிண்ட் கடை ஒன்றில் வேலை பார்த்ததாய் செய்திகள் உண்டு.

அவருடைய நண்பர் பிரான்சிஸ் கிருபா ..

ஆகச்சிறந்த இலக்கியவாதிகள் பலர் பள்ளிகளில் பெரிதாய்ப் படித்தவர்கள் இல்லை...

எழுதவும் வாசிக்கவும் மட்டுமே கற்றுக்கொடுப்பதை நாம் தவறாகக் கல்வி என்றழைக்கிறோம்...

பிரான்சிஸ் கிருபா தனது பேட்டிகளில் ஒரு ஆசிரியர் பெயரைக்கூட குறிப்பிடவில்லை..

மாறாக

பல இலக்கிய ஆளுமைகளைக் குறிப்பிடுகிறார்..

வாசித்த பல நாவல்களை, சந்தித்த 

இலக்கியக் கர்த்தாக்களைக் குறிப்பிடுகிறார்...

வெகுமானம், பாராட்டு, பரிசு பற்றியெல்லாம் ஒரு புன்சிரிப்போடு கடந்த போகிறான்...

இலங்கை தேசத்தில் பாராட்டு வதற்காக ஒரு கவிஞனைத் தேடுகிறார்கள்...

ஆனால் அவனுக்கு என ஒரு நிரந்த வீட்டு முகவரி இல்லை..

தென்னந்தோப்புகளில் மரமேறியாகப் பிழைக்கிறான். 

அவன் பெயர் பெனடிக் நாகொல்ல கொட என நினைவு..

அவனது புனைப்படத்தோடு காலச்சுவடு இதழில் வந்த கட்டுரையை படி எடுத்து பத்திரப்படுத்துகிறேன்...

பிரான்சிஸ் கிருபாவை ஒப்பிட்டுப்பார்க்கிறேன்....

நா கொல்ல கொட எவ்வளவு நேசத்திற்குரிய கவிஞர் என்பதைச் சொல்கிறேன்..

ஒரு இளம் வயது விலைமாது..

ஒருவனோடு படுக்கப்போகும்போது தரைவிரிப்பாக வாடிக்கையாளர் கொண்டுவந்த செய்தித்தாளை வாங்கி தரையில் விரிக்கிறாள்..

அதில்

நாகொல்ல கொட வின் கவிதை தெரிகிறது..

உடனே

படுக்கையை நிறுத்திவிட்டு கவிதையை வாசிக்கிறாள்..

நிறைவாக அவள் சொல்கிறாள்..

 அப்போது எனக்கு வயது இருபது..

கூட வந்தவனுக்கு வயது அறுபது ..

கவிதையை வாசித்தபிறகுதான் ஒப்புக்கொண்டேன்....

என் விருப்பமில்லாமல் ஒருவன் என்னை முத்தமிடுவது எவ்வளவு துயரம் ..

என்று மேலும் அதில் அவள் சங்கதி பேசுவாள்...

எழுத்து என்னவெல்லாம் செய்கிறது பார்த்தாயா...

அவனது நினைவாகத்தான் Srimara Benadic என்ற 

பெயரிலும் எழுதுகிறேன்..

பிரான்சிஸ் கிருபா கவிஞர், எழுத்தாளர் 

பாடலாசிரியர் 

என்பதெல்லாம் எம் பள்ளி மாணவர்களுக்குத் தெரிய இன்னும் எவ்வளவு காலமாகுமோ என்ற கவலை என்னைக் கசக்குகிறது..

மருத்துவச் சிகிச்சை வலிகளுக்கிடையே எனக்கு நிறைய வாய்ப்பை வழங்குகிறது எமுத்து..

ஒத்தடமாக, லேசான வருடலாக ஆத்துமாவை ஆறுதல்படுத்திக்கொள்ளத்தான் உன்னைத் தேடுகிறேன்...

ஊட்டிவிடுவதில்

மறுப்பதும் மீறித் திணிப்பதும் குற்றமல்ல என்பது

தாய்க்கு தெரியும்...

யாழி வாசகர் தள உறவுகளைப் பட்டினிப் பிரதேசத்தில் தள்ளி விடாமல் பாதுகாக்கவேணும் நான் எழுதத் தான் வேண்டும்..

வாசிக்கிற பழக்கத்திற்குள் வந்து விட்டால் ..

பிரான்சிஸ் கிருபா போன்றவர்களை

அறிந்துகொண்டால்...

வாழ்க்கை 

இலகுவானதாய் மாறிப்போகும்...

ஒரு வேலை பிரான்சிஸ் கிருபா

என்னோடு பழகியிருந்தால் மரணத்தை சாகடித்திருப்பான்...

ஏனெனில் போதை

வலிநிவாரணி அல்ல...

ஒரு மதியம் சாகப் புறப்பட்ட

ஜோசப் என்பவனோடு எட்டு மைல் சைக்கிளைத் தள்ளிக் கொண்டே பேசிப்போனேன்..

ஐந்தாறு ஆண்டுகள் அவனது சாவு தள்ளிட் போடப்பட்டது...

பிறகு...

அவனோடு இன்னொரு நடை எனக்கு வாய்க்கவில்லை...

 செத்தால் பிழைக்கமாட்டோம் என்று பலருக்கும் புரிவதே இல்லை...

©️✒️யாழி

08.10.2021.

Comments

Post a Comment

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்