குடும்பனின் பார்வையில்

 உறவுகளுக்கு வணக்கம்🙏. 

   நமது இனம்,  வரலாற்றின் படி, பெருமைக்கு உரிய இனம் என்பதில், எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடம் இல்லை. 

   நமக்கு எதிரான கருத்துகளை வைக்கும் அனைத்து புற இனத்தை சேர்ந்தவர்களும் இதை நன்கு அறிவார்கள்.

   நாம் மீண்டும் எழுச்சி பெற்று விடக்கூடாது என்பதே அவர்கள் நோக்கம்.

   இங்கே, நாம் ஒன்றை சிந்திக்க வேண்டும். 

   நமது வளர்ச்சிக்கு, மற்ற இனங்கள் தான் தடையாக இருக்கின்றன என எண்ணுவது, தவறு ஆகும்.

   ஆம், 'நமது வளர்ச்சிக்கும், எழுச்சிக்கும் பெருந் தடையாக இருப்பது, நாம் தான்.'

   இந்த உண்மை நம்மவர்களுக்கு சுடும்.

   ஆட்சி, அதிகாரத்தால் ஆளுமை பெற்றவர்கள்!.

   உலகத்திற்கே, "குடும்பு முறை மூலம்" ஆட்சியமைப்புகளை அறிமுகம் செய்தவர்கள், பல தவறான செயல்பாடுகளால், தங்களையே இழந்து போனார்கள், அதன் பாதிப்புகளை, இன்று வரை நாம் அனுபவித்து வருகிறோம் என்பதே உண்மை!.

   கள்ளுக்கும்,கருப்பட்டிக்கும் தங்கள் உடைமைகளை கடந்த தலைமுறையில்,  நாம் காண  பறிகொடுத்த தேவேந்திரர்கள் ஏராளம்!.

   அது போலத் தான், பெண்ணாசைக்கும், புகழாசைக்கும், நம்பிக்கை துரோகத்திற்கும் அடிமைப் பட்டு, நம் முன்னோர்கள்,  ஆட்சி அதிகாரங்களை இழந்து போனார்கள் என்பது,என் கூற்று.

   உண்மை சிலருக்கு சுடும் என்பார்கள், என் இனத்திலோ, எல்லோருக்குமே சுடுகிறது.

   சில விஷயங்களை நாம் ஜீரணிக்க மறக்கிறோம் அல்லது மறுத்து விடுகிறோம்.

   சற்று சிந்தனை செய்து பாருங்களேன், தளபதி ஜான் பாண்டியன் அவர்கள், இந்த சமுதாயத்திற்கு தந்த எழுச்சி என்பது, எவ்வளவு மகத்துவமானது என்பதை, அன்றைய வயதொத்த பெரியவர்கள் அறிவார்கள். 

   அதேபோன்று,  சகோதரர் பசுபதி பாண்டியன்,  மருத்துவர் கிருஷ்ணசாமி ஆகியோர், ஆற்றிய பணிகளையும் யாரும் மறுக்க முடியாது.

   இங்கே,

   சிந்திக்க சில விடயங்கள் உள்ளன. அதை ஜீரணிக்கும் இதயங்கள் தான் மிகக் குறைவு.

   முதலாவது,

   எழுச்சி தந்த ஜான் பாண்டியன் அவர்கள், அதை கட்டிக்காக்க தவறி விட்டார். அவர் மாற்று சாதியில் மணம் கொண்டதும், தன்னைத் தவிர,  வேறு தலைவர்கள் இந்திர குலத்தில் உருவாகக் கூடாது என எண்ணியதும், இவை யாவும் அவருக்கு அவரே ஏற்படுத்திக் கொண்ட தடுப்புகள். 

   இதனால், இந்த இனத்தின் வளர்ச்சியில் பெருந் தடைகள் ஏற்பட்டன என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும். 

   மட்டுமல்ல, எழுச்சி கிடைத்த அதே வேளையில், ஆங்காங்கே ஏற்பட்ட கலவரங்களால், ஏராளமான உயிர்ப் பலிகள்..‌, பொருளாதார இழப்புகள்..., வழக்குகள்!...

  ஆம், ஜான் பாண்டியன் அவர்களின் பாதை, நம் இனத்திற்கு மிகப்பெரிய சறுக்கல்.

   இரண்டாவதாக, மாவீரர் பசுபதி பாண்டியன்!...

   தேவேந்திர குல வேளாளர்கள் தாழ்த்தப் பட்ட இனம் கிடையாது என்று ஓங்கிக் குரல் தந்தவர்.

   பல வழிகளிலும், இனத்தை முன்னோக்கி நகரச் செய்தவர்!

   சமுதாயத்தால், பெரிதும் மிகப் பெரிதாக எதிர்பார்க்கப் பட்டவர்!

   கொடுமை!..., கூட இருந்த குலம் கெடுக்கும் கோடரிகளின் நாடகத்திற்கு தன் அருமைத் துணையை பலியாக்கி, தன்னையும் தாரை வார்த்தார்.

    அவருக்கு துணையாக நின்றே, தொலைத்த துரோகிகளால், தேவேந்திர குலம் கறை பட்டு நிற்கிறது.

   உறவுகள்,  இங்கே ஒன்றை சிந்திக்க வேண்டும். 

   சகோதரர் பசுபதி பாண்டியன் அவர்களுக்கும், மூலக்கரை மற்றும் பழைய காயல் பகுதியைச் சேர்ந்த அசுபதி பண்ணையாருக்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு, சமுதாயத்  தகராறாக மாறியது, தேவேந்திர குலத்தின் மிகப் பெரிய பின்னடைவு.

   ஆம், நாடார் இனமும், தேவேந்திர குலமும் மோதிக் கொண்டதால், ஏராளமான உயிர் இழப்புகள், பொருளாதார இழப்புகள்!.

    மூன்றாவது,

    மருத்துவர் கிருஷ்ணசாமி!...

    நெல்லை ஜங்ஷனில் உள்ள,  சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு இவர் மாலை அணிவித்த போது, கை தட்டி வரவேற்ற புண்ணியவான்களில், நானும் ஒருவன்!.

   அந்த நாட்கள்!...

   இருபெரும் தலைகள், களத்தில் இல்லாததால், கலங்கி நின்ற இனத்திற்கு ஒரு காவலனாக வந்தவர்!.

   இந்த இனமும் இவரை, போற்றிப் புகழ்ந்து, தகுந்த மரியாதையைத் தந்தது என்பதற்கு ஓட்டப்பிடாரம் தேர்தல் வெற்றியே ஆதாரம்!.

   (பின்னாளில், இவரது பின்னடைவிற்கும், இதே ஓட்டப்பிடாரம் தேர்தல் தான் சாட்சியானது என்பது தனி)

    மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள்,  பலவீனப் பட்டதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

   இவர், இனம் சார்ந்த பெரியவர்களை மதிக்காமல், நிற்க வைத்து பேசுவது, இவர் தேவேந்திரர் அல்லர், மாதாரி எனும் அருந்ததியர் இனத்தவர் என்ற பகிரங்க குற்றச்சாட்டிற்கு, இன்று வரை நேரடியாக பதில் தராதது, தனது கட்சிக் கொடியாக, சிவப்பு பச்சை கொடியை கபளீகரம் செய்தது, போன்றவை, இவரது பின்னடைவிற்கு முக்கிய காரணங்கள் எனலாம்.

   இப்போது, *இரண்டு தலைவர்களும்,  நல்ல நிலைக்கு வந்து விட்டனர்.

* இரண்டு தலைவர்களும்,  தங்கள் வாரிசை, தங்கள் கட்சிக்கு தலைவராக உருவாக்கி விட்டனர்.

* * இரண்டு தலைவர்களும்,  இனத்தின் முக்கிய காலகட்டங்களில் குரல் கொடுக்கத் தவறி விட்டனர் அல்லது மாற்றுக் கருத்துகளால் களமாடினர்.

இதை நடுநிலையாளர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள்.

 இன்னும் மிக முக்கியமான ஒரு விஷயம்...

* இரண்டு தலைவர்களும், சமுதாயம் சார்ந்த சம்மந்தம் வைத்துக் கொள்ள வில்லை. இது, மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கி விட்டது.

*   இன்றைய கால கட்டத்தில்,  தேவை ஏற்பட்டால் மட்டுமே  அதாவது, தங்கள் சுய ஆதாயத்திற்காக மட்டுமே இனத் தலைவர்கள்,  தேவேந்திர குலத்தை சூறையாடி வருகிறார்கள். 


   எப்படிப்பட்ட வளர்ச்சி ஓர் இனத்திற்குத் தேவையோ, அதைச் செய்ய அநேகமாக, "எல்லா" தலைவர்களுமே தவறி விட்டார்கள்.

  இது, மகோன்னத வலிமை படைத்த தேவேந்திர குலத்திற்கு, மிகப் பெரிய பின்னடைவாக மாறிப் போனது.

   இப்பொழுது களத்தில் நிற்கும் தலைவர்களும் கூட, சமுதாயத்தை வைத்து, பிழைப்பு நடத்துகின்றனர்களே தவிர, இவர்களால், இந்திர குலத்திற்கு, உண்மையாக பயன் தரத் தக்க செயலில் யாரும் இல்லை என்று கூறலாம்.

    ஆங்காங்கே நேர்மையாக உழைப்பவர்களுக்கு, போதிய ஆதரவு கிடைப்பதில்லை அல்லது அவர்களிடம் பொருளாதார வசதி இருப்பதில்லை.

  தளபதி ஜான் பாண்டியன்,  மருத்துவர் கிருஷ்ணசாமி இருவராலும், தேவேந்திர குல வேளாளர்கள், இரண்டு அணிகளாக பிளவு படுத்தப் பட்டார்கள்.

   அதே சமயத்தில்,  இன்றைய தலைவர்கள், இனத்தை "பல கூறுகளாக" சிதைத்து விட்டார்கள் என்பது ஆயிரம் மடங்கு உண்மை.

   இன்றைய தலைவர்களிடம் எள்ளளவு கூட ஒற்றுமை இல்லை.அவ்வளவு ஏன், ஒருமித்த கருத்து கூட இல்லை.

   பெயராணை பெற்றதற்கு,  மத்திய அரசுக்கு ஒரு நன்றியைக் கூட தெரிவிக்க முன் வராத இவர்கள்!...

   பட்டியல் மாற்றத்தை ஓரணியாக வலியுறுத்த தெரியாத  --விரும்பாத-- இவர்கள் எப்படி இந்திர குலத்தை மேன்மைப்படுத்தப் போகிறார்கள்?.

   ஒருவர் காலை இன்னொருவர் வாருவதில், அரசியல் வாதிகளுக்கு சளைத்தவர்கள் யாரும் இல்லை,  இங்கே!.

   இன்னும் பகிரங்கமாக சொல்வதென்றால்,  தேவேந்திர குல வேளாளர் இனம், சொந்தத் தலைவர்களின் சூதாட்டக் களமாக மாற்றப் பட்டு விட்டது.

   சுய ஆதாய நோக்கம், இங்கே பெருத்துப் போய்க் கிடக்கிறது.

  பட்டியல் மாற்ற கோரிக்கையை துருப்புச் சீட்டாக வைத்துக் கொண்டு,  அநேகர்,  எம்.எல்.ஏ. சீட்டு பெறுவதற்கும், பணம் பண்ணுவதற்கும் குறி வைத்துக் கொண்டு இருப்பதாகக் கருதுகிறேன்.

   வெற்றியை, விரல் நுனியில் வைத்துக் கொண்டு, வீதியிலே களமாடும் விபரீதம் தொனிக்கிறது.

    உரை நீண்டு கொண்டே போகிறது, இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

  இதை ஜீரணிக்க மனதில்லா விட்டால், தூற்றி விட்டுப் போங்கள், உண்மை எப்பொழுதும் கசக்கத்தான் செய்யும். 

   என் வயது 68.இனி இழப்பதற்கு எதுவும் இல்லை.

   நன்றி 🙏. 

   -கவிஞர் ஆ.அரிபுத்திரன்.

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்