குடும்பனின் இலக்கியத்தில்
[08/10, 15:17]
மதியின் வெண் தோடு சூடும் சென்னி,
நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து,
பவள வாய்ச்சி; தவள வாள் நகைச்சி;
நஞ்சு உண்டு கறுத்த கண்டி; வெஞ் சினத்து
அரவு நாண் பூட்டி, நெடு மலை வளைத்தோள்;
துளை எயிற்று உரகக் கச்சு உடை முலைச்சி;
வளை உடைக் கையில் சூலம் ஏந்தி;
கரியின் உரிவை போர்த்து, அணங்கு ஆகிய
அரியின் உரிவை மேகலைஆட்டி;
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி,
வலம் படு கொற்றத்து வாய் வாள் கொற்றவை;
இரண்டு வேறு உருவின், திரண்ட தோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல்; பலர் தொழும்
அமரி, குமரி, கவுரி, சமரி,
சூலி, நீலி, மால்-அவற்கு இளங்கிளை;
ஐயை, செய்யவள், வெய்ய வாள் தடக்கைப்
பாய் கலைப் பாவை; பைந் தொடிப் பாவை;
ஆய் கலைப் பாவை; அருங்கலப் பாவை;
தமர் தொழ வந்த குமரிக் கோலத்து
அமர் இளங் குமரியும் அருளினள்-
வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே.
[08/10, 15:50]
மேலே உள்ள பாடல் வரிகள் சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் வரும் வர்ணனை வரிகள்
சைவ சமயத்தில் சிவனின் தோற்றம் என சில வர்ணனைகள் வரும்
பிறை சூடி, கழுத்தில் நஞ்சின் கறை, சடை முடி, அதில் கங்கை, நெற்றிக் கண், பாம்பு மாலை, யானைத் தோல், புலித்தோல் போர்த்தியவர், கையில் மான், மழு ஏந்தியவர், காலடியில் ஒரு அசுரனை( முயலகன்) போட்டு மிதிப்பவர், கழல் அணிந்த கால் என்ற வடிவத்தை நீங்கள் படங்களின் மூலமாகவும் , பாடல்கள் மூலமாகவும் பார்த்துப் படித்திருப்பீர்கள்.
இதோ இங்கே மேலே சொன்ன வரணனைகளை கொற்றவைக்கும் கொடுத்துள்ளார் இளங்கோவடிகள். சிவன் வணக்கத்தை விட கொற்றவை வணக்கம் மிகத் தொன்மையானது. சிவன் வழிபாடு கிபி நான்காம் நூற்றாண்டில் தமிழகத்திற்கு வந்தது. அப்போது கூட லிங்க வடிவில் தான் சிவ வழிபாடு தோன்றியது. பின்னாளில் தோன்றிய பக்தி இயக்கக் காலத்தில் தான் சிவனுக்கு மேற்சொன்ன அலங்காரங்கள் வைக்கப்பட்டன. இது அப்பட்டமாக கொற்றவை என்ற பெண் தெய்வத்தையே ஆண் தெய்வமாக சைவர்கள் மாற்றினர். தொல் தமிழர்கள் வானிலுள்ள ஒரையன்( Orion Constellation) உடுக் கூட்டத்தையே கொற்றவை என்ற பெண்தெய்வக் குறியீடாக வைத்தனர். இது பற்றிய 400 அடிகள் கொண்ட காடுகாள் என்ற பரிபாடல் சைவ மடங்களால் முற்றிலும் அழிக்கப் பட்டுவிட்டது. இந்த ஒரையன் உடுக் கூட்டத்தின் அருகில் Canis Major என்ற உடுக்கூட்டம் அமைந்திருக்கும். இதுவே கொற்றவையின் வேட்டை நாயாக வடிவமைக்கப் பட்டது. சைவக் கோவில்களில் உள்ள “ கால பைரவர்” தான் இந்த நாய் உடுவாகும். இதில் தான் உடுக் கூட்டங்களிலேயே ஒளிமிக்க உடுவான “ கத்தரி” உடு ( Sirius- Dog Star) அமைந்துள்ளது. இது வானில் தோன்றும் போது பூமியில் கடும் கோடைகாலமும், வறட்சியும் நிலவும். மனிதர்கள் வெயில் தாங்காது இறப்பு நேரிடும் . விலங்குகளுக்குப் பைத்தியம் பிடிக்கும்( நாய்களுக்கு இதனால் பைத்தியம் பிடிப்பதை இன்று காண்கிறோம்) அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்த காரணத்தாலேயே மள்ளர்கள் இதை இறப்புக் கடவுளாகவும், போர்க் கடவுளாகவும் வைத்து வணங்கினர். சுடுகாட்டில் கொற்றவை கோவிலை வைத்தனர். இதனைக் கைப்பற்றிய காபாலிகர்கள் இக்கொற்றவைக்கு ஆசீவகர்களைப் பலி கொடுத்தனர். வங்காளத்தில் கொற்றவை கறுப்பு என்பதால் காளி என பெயர் வைத்து வணங்கினர். இப்படி சிறப்பு வாய்ந்த கொற்றவையைத் தான் இளங்கோ வேட்டுவ வரிகளில் புகழ்ந்து பாடியுள்ளார். இந்த ஒரையன் உடுக் கூட்டத்திற்கு முன்னால் உள்ள விடை ஓரையில் (Taurus Constellation) உள்ள கார்த்தீ (Plieodes) உடுக் கூட்டத்தை கொற்றவை மகனாக சேயோன் என தொல் தமிழர்கள் அழைத்தனர். கொற்றவை சிவனாக மாறிய பிறகு சேயோன் முருகனாக மாற்றப் பட்டான். கொற்றவையின் பல பெயர்களை படித்து இன்புறுங்கள்.
தவள வாள் நகைச்சி- வெண்மையான கோரைப் பற்களை உடையவளே
உரகம்- பாம்பு
கரி- யானை; உரி- தோல்,
அவுணன்- முயலகன்
பாடல் வரிகள் எளிமையானவை தான் வாசித்து இன்புறுங்கள்
Comments
Post a Comment