குடும்பனின் படிப்பில்
*தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்களின் சுருக்கமான வரலாறு*
இந்திய ஜனநாயகத்தின் சோதனைக் களமாகவும், சமூக நீதியின் விளைநிலமாகவும் திகழ்கிறது தமிழ்நாடு. 1952ல் தொடங்கி 2021 வரை நடந்துள்ள 16 சட்டமன்றப் பொதுத் தேர்தல்களும் அவற்றின் முடிவுகளும் வெறும் ஆட்சி மாற்றங்களுக்கு மட்டுமானதல்ல, அவை தமிழ்ச் சமூகத்தின் சிந்தனை மாற்றங்களை உணர்த்தும் குறியீடுகள். தேசிய நீரோட்டத்தில் தொடங்கி, திராவிட இயக்கத்தின் எழுச்சி, திரைப்பட ஆளுமைகளின் தாக்கம், நலத்திட்ட அரசியல் என இந்திய கூட்டாட்சி அரசியல் பரிணாமத்தின் சுருக்கம்.
1. முதல் சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் பொற்காலம் தொடங்கியது(1952)
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் 1952ல் நடைபெற்றது. மூதறிஞர் ராஜாஜி மற்றும் கர்மவீரர் காமராஜர் போன்ற பெருந்தலைவர்களின் வியூகத்தால் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திமுக, தேர்தலில் போட்டியிடாமல் ஆதரவு நிலைப்பாட்டை மட்டும் எடுத்த காலகட்டம்.
2. இரண்டாவது சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் அதிகாரம் தொடர்கிறது, திமுகவின் அதிகாரம் தொடங்குகிறது(1957)
"தேர்தல் பாதை, திருடர் பாதை" என்ற நிலைப்பாட்டை மாற்றி, திமுக முதன்முறையாகக் களமிறங்கியது. 15 இடங்களை வென்று சட்டமன்றத்திற்குள் அறிஞர் அண்ணா நுழைந்த வரலாற்றுத் தருணம். பெருந்தலைவர் காமராஜர் முதல்வராகத் தொடர்ந்தார்.
3. மூன்றாவது சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் தேய்கிறது, திமுக வளர்கிறது(1962)
அறிஞர் அண்ணாவின் மேடைப் பேச்சும், கழகத் தொண்டர்களின் உழைப்பும் திமுகவை வீதிதோறும் கொண்டு சேர்த்தன. 50 இடங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியாக திமுக அசுர வளர்ச்சி கண்டது.
4. நான்காவது சட்டமன்றத் தேர்தல்: தெற்கின் புரட்சி உதித்தது(1967)
இந்தியாவிலேயே ஒரு மாநிலக் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த வரலாற்றுத் தருணம். இந்தி எதிர்ப்புப் போராட்டம், அரிசி தட்டுப்பாடு ஆகியவை காங்கிரஸை வீழ்த்தின. அறிஞர் அண்ணா முதல்வரானார். "மெட்ராஸ் ஸ்டேட்" என்பது "தமிழ்நாடு" எனப் பெயர் மாற்றம் காண அடித்தளம் அமைந்தது.
5. ஐந்தாவது சட்டமன்றத் தேர்தல்: கலைஞரின் சகாப்தம் தொடங்கியது (1971)
புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திமுகவில் இருந்த காலம். அன்னை இந்திரா காந்தியின் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து திமுக 184 இடங்களை வென்று இமாலய சாதனை படைத்தது. எம்ஜிஆர் திமுகவில் இருந்து விலகுகிறார்
6. ஆறாவது சட்டமன்றத் தேர்தல்: இரட்டை இலை மலர்ந்தது, எம்ஜிஆர் சகாப்தம் தொடங்கியது (1977)
திமுகவிலிருந்து பிரிந்து எம்ஜிஆர் தொடங்கிய அதிமுக, சந்தித்த முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்தது. சத்துணவுத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்கள் அரசியலின் மையப்பொருளாயின.
7. ஏழாவது சட்டமன்றத் தேர்தல்: மக்கள் தீர்ப்பு தொடர்கிறது (1980)
மத்திய அரசால் அஇஅதிமுக ஆட்சி கலைக்கப்பட்டாலும், மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்ஜிஆர் தனது செல்வாக்கை நிரூபித்தார்.
8. எட்டாவது சட்டமன்றத் தேர்தல்: அனுதாப அலை வீசியது (1984)
எம்ஜிஆர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதும், தமிழகம் அவருக்குத் தந்தது மகத்தான வெற்றி. இந்திரா காந்தி படுகொலையும் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்குக் கைகொடுத்தது.
9. ஒன்பதாவது சட்டமன்றத் தேர்தல் : மீண்டும் உதயசூரியன் உதித்தது(1989)
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக (ஜா-ஜெ) எனப் பிளவுபட்டதால், 13 ஆண்டுகளுக்குப் பிறகு கலைஞர் கருணாநிதி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார், ஆனால் குறுகிய காலத்தில் இந்த ஆட்சி முடிவிற்கு வந்தது.
10. பத்தாவது சட்டமன்றத் தேர்தல்: செல்வி . ஜெயலலிதா காலம் தொடங்குகிறது (1991)
ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதால் கிடைத்த அனுதாப அலையில், ஜெயலலிதா முதன்முறையாக முதல்வரானார். அதிமுக-காங்கிரஸ் கூட்டணி 225 இடங்களை வென்று சாதனை படைத்தது.
11. பதினோறாவது சட்டமன்றத் தேர்தல்: ஆட்சி மாற்ற அலை (1996)
ஊழல் புகார்கள் மற்றும் ரஜினிகாந்தின் "ஆண்டவனே வந்தாலும்..." என்ற ஒற்றைக் குரல், திமுக-தமாகா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது.
12. பனிரெண்டாவது சட்டமன்றத் தேர்தல்: மீண்டும் அரசாள்கிறார் அம்மா (2001)
கூட்டணி வியூகத்தில் ஜெயலலிதா கைதேர்ந்தவர் என்பதை நிரூபித்த தேர்தல். பெரிய கட்சிகளை ஒருங்கிணைத்து அதிமுக இழந்த ஆட்சியை மீட்டது.
13. பதிமூன்றாவது சட்டமன்றத் தேர்தல்: இலவசத் திட்டங்களின் அறிமுகம் (2006)
"இலவச கலர் டிவி" என்ற வாக்குறுதி தேர்தல் களத்தையே மாற்றியது. திமுக கூட்டணி அமைத்து (மைனாரிட்டி அரசு) ஆட்சியமைத்தது.
14. பதினான்காவது சட்டமன்றத் தேர்தல்: இரட்டை இலையின் ஆதிக்கம் ஆரம்பம்(2011)
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்கள் மற்றும் மின்வெட்டுப் பிரச்சனை திமுகவை வீழ்த்தின. ஜெயலலிதா மீண்டும் அரியணை ஏறினார்.
15. பதினைந்தாவது சட்டமன்றத் தேர்தல்: வரலாறு மாறியது, இலை தொடர்ந்து மலர்ந்தது (2016)
1984-க்குப் பிறகு, ஆளும் கட்சியே மீண்டும் வெற்றி பெற்ற அதிசயம் நிகழ்ந்தது. ஜெயலலிதாவின் தனிப்பட்ட செல்வாக்கு, எதிர்க்கட்சிகளின் சிதறல் ஆகியவை அதிமுகவைத் தொடர்ந்து ஆட்சியில் அமர்த்தின.
16. பதினாறாவது சட்டமன்றத் தேர்தல்: மு.க.ஸ்டாலினின் விடியலும் மாடலும் (2021)
செல்வி.ஜெ.ஜெயலலிதா, கலைஞர்.மு.கருணாநிதி எனும் இரு பெரும் ஆளுமைகள் இல்லாத முதல் தேர்தல். "திராவிட மாடல்" மற்றும் சமூக நீதி அரசியல் மூலம் மு.க.ஸ்டாலின் திமுகவை ஆட்சியில் அமர்த்தினார். அது இன்னும் சில மாதங்களில் முடிவிற்கு வரவிருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரலாற்றின் மூலம் அறிய வேண்டியவை:
1. மாநில சுயாட்சி உரிமை:
மாநில உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் கட்சிகளுக்கே தமிழக மக்கள் முன்னுரிமை அளித்துள்ளனர்.
2. திரை ஆளுமை:
புரட்சித் தலைவர் எம்ஜிஆர், செவாலியே சிவாஜி, செல்வி.ஜெ.ஜெயலலிதா அம்மையார், கேப்டன் விஜயகாந்த், உலகநாயகன் கமல், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அண்ணன் விஜய் எனத் திரைத்துறையினர் அரசியலில் கோலோச்சும் ஒரே மாநிலம்.
3. நலத்திட்ட அரசியல்:
இலவச அரிசி முதல் மடிக்கணினி, மகளிர் உரிமைத் தொகை வரை—வாக்குறுதிகளே வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன.
4. சமூக நீதி:
இட ஒதுக்கீடு மற்றும் சமூக நீதி சார்ந்த கொள்கைகள் தமிழகத் தேர்தல் களத்தின் பிரிக்க முடியாத அங்கங்கள்.
5. தமிழுணர்வு:
இரு மொழிக் கொள்கை, தமிழர் வரலாறு மற்றும் பண்பாட்டை காப்பாற்றுவது ஒவ்வொரு அரசியல் கட்சியின் கடமை என தமிழக மக்கள் நினைக்கின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களின் வரலாறு என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல, அது தமிழர்களின் உணர்வுப் போராட்டம். "நேற்றைய வரலாற்றைப் புரிந்துகொள்வதே, நாளைய அரசியல் மாற்றத்தை உணர்வதற்கான திறவுகோல்" என்ற புரிதலின் அடிப்படையில் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறானது இந்திய ஜனநாயகத்திற்கு ஒரு பெரும் பாடப் புத்தகமாக அமைந்திருக்கிறது.
இப்புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்காமல் வருகிற 2026ல் நடைபெறும் 17வது சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொள்வது கடினம்.
© முனைவர்.ஆ.சம்பத்குமார்,
கோவில்பட்டி,
9486110376.
06-12-2025
Comments
Post a Comment