குடும்பனின் பூர்வீகத்தை

 குமரிக்கண்ட ஆய்வு : தமிழர் வரலாற்றில் சிறப்பு வாய்ந்த பெருந் திருப்பம் !!!


+ குமரிக்கண்டம் : ஆழ்கடல் அகழ்வாய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு 

+ ஒரிஸா பாலு ஐயாவின் உழைப்புக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி 

+ ஆய்வாளர் நாராயணமூர்த்தி வழக்கில் ஐந்தாண்டுக்குப் பிறகு தீர்ப்பு 

+ ஆழ்கடல் ஆய்வுக்குத் தமிழ்நாடு அரசு திட்ட முன்மொழிவு அளித்தால் ஒத்துழைக்கத் தயார் : இந்தியத் தொல்லியல் துறை உறுதி 

+ குமரிக்கண்டத்தை அகழ்வாய்வு செய்ய தமிழ்நாடு அரசு முன்மொழிவு செய்யவேண்டும் : சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு 


-- தமிழ் ஊடகம் சிறப்புச் செய்திக் கட்டுரை--


தமிழர் வரலாற்றில் குமரிக் கடல் மற்றும் அதனுள் மூழ்கிப்போன குமரிக்கண்டம் குறித்து பல பத்தாண்டுகளாக வாத விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.


எனினும், அது ஒரு கற்பனை, அப்படி ஒரு கண்டமோ நிலப்பரப்போ இல்லை, கற்பனையாக புனையப்பட்ட தமிழர் இலக்கியங்களை வைத்து எல்லாம் ஒரு கண்டம் இருந்தது அது மூழ்கிப்போனது என்றெல்லாம் கூற முடியாது என்றே தமிழர் விரோதப் பிறமொழியாளர்கள், தமிழர் வரலாற்றை அழிக்கத் துடிப்போர் எல்லாம் கூவிக்கொண்டிருந்தனர், தொடர் பொய்ப் பரப்புரை மேற்கொண்டு வந்தனர்.


ஆனால் இவர்களின் இந்தப் பொய்ப் பரப்புரைகளை சுக்கு நூறாக்கியது மறைந்த ஒரிஸா பாலு ஐயா அவர்களின் குமரிக் கண்டம் தொடர்பான தொடர் ஆய்வுகள். தமது வாழ் நாளையே குமரிக் கண்ட ஆய்வுக்காக அர்ப்பணித்து உயிர் நீத்த அந்த மாபெரும் தமிழறிஞர் - ஆய்வாளர் பாலு ஐயா அவர்கள்தான் "இந்தப் பொய்ப் பரப்புரை மேற்கொள்ளும் எவரும் கடலுக்குள் இறங்கி ஆய்வு செய்யவில்லை. அவ்வளவு ஏன்...குமரிக்கண்டம் தொடர்பாக சுமார் 17 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர்கள்கூட கடற்கரை மணலில்கூட கால் வைத்திருக்கவில்லை, மாறாக ஒரு அறைக்குள் அமர்ந்துகொண்டு பல புத்தகங்களை மேற்கோள் காட்டித் தங்களது தனிப்பட்ட தமிழர் விரோதக் கருத்துக்களையும் அதில் திணித்து பொய்ப் பரப்புரை மேற்கொண்டு வந்தார்கள்" என்பதையும் வெளி உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டினார்.


மேலும் ஆழ்கடல் நீந்தும் மீனவர்கள் துணை கொண்டு தமது உயிரைப் பணயம் வைத்து குமரிக் கடலுக்குள் இறங்கி ஆய்வு செய்தார் ஒரிஸா பாலு அவர்கள். கடல்சார் அவரது ஆய்வுகள் இந்திய நிலப்பரப்பில் முதல் மற்றும் மாபெரும் சுமார் 32 பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கச் செய்யும் ஆய்வுகளாக இருந்தன.


அப்போது ஒரிஸா பாலு அவர்களை ஏளனமாகப் பார்த்தவர்கள், அவர் இறந்துபோனபோது நமட்டுச் சிரிப்பு சிரித்தவர்கள், அவர் எந்த ஒரு நூலையும் எழுதாமல் சென்றுவிட்டார் என்று பகடி பேசியவர்களுக்கு எல்லாம் பேரிடியாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவு தற்போது வந்திருக்கிறது.


முன்னதாக, இந்தியத் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் சிலர் மட்டுமல்லாது, தமிழ்நாட்டில் வாழும் பிறமொழி ஆய்வாளர்களே "தமிழர் சங்க இலக்கியங்கள் என்பவை வெறும் பாடல்கள் மட்டுமே, அவற்றுக்கு வரலாற்று சிறப்பு ஏதும் இல்லை, அவற்றை வைத்து எல்லாம் தமிழர் வரலாற்றை உறுதி செய்ய முடியாது" என்ற நம்பிக்கை தகர்க்கும் பரப்புரைகளையே மேற்கொண்டு வந்தனர், மேலும், ஈ.வெ.இராமசாமியின் திராவிடர் இயக்கங்களும், தமிழர் இலக்கியங்களில் என்ன இருக்கிறது ? அதில் ஒரு வெங்காயமும் இல்லை என்று ஒருபக்கம் திட்டமிட்டுப் பரப்புரை செய்தனர்.


இப்படிப்பட்ட நிலையில்தான், 


வடவேங்கடம் தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து


(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்: 1-3)


எனும் தொல்காப்பிய இலக்கியம் வெறும் பாடல் அல்ல அது வரலாற்று ஆவணம் என்று பொறுமையாக விளக்கத் தொடங்கினார் ஒரிஸா பாலு ஐயா அவர்கள். 


அவர் மேற்கொண்ட தொடர் நேர்மறையான பரப்புரைகளை உறுதி செய்யும் விதமாக, கீழடியில் முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் துறையின் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவே, "தமிழர் சங்க இலக்கியங்களில் உள்ளது படியேதான் கீழடி அகழ்வாய்வில் கிடைத்த கட்டுமானங்களும், கிடைத்த தொல்லியல் பொருட்களும் இருந்தன என்றும், சங்க இலக்கியங்கள் வரலாற்று ஆவணங்கள்தான்" என்றும் ஒப்புக்கொண்டு அவரும் இதனை பல்வேறு மேடைகளில், நேர்காணல்களில் உறுதிப்படுத்தினார். 


ஒரிஸா பாலு அவர்கள் ஸ்கூபா டைவிங் என்று அழைக்கப்படும் ஆழ்கடல் நீந்தும் நவீன ஆய்வாளர் குழுவின் துணை கொண்டு குமரிக் கடலுக்குள் இறங்கி ஆய்வு மேற்கொண்டதுடன் ஆழ்கடலுக்குள் உள்ள கட்டுமானங்களின் படங்கள், காணொலி ஆகியவற்றையும் எடுத்து ஆவணப்படுத்தி இருந்தார்.


இத்தகைய நிலையில் கடந்த 2020 ம் ஆண்டு, பழநியைச் சேர்ந்த தன்னார்வத் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் திரு. நாராயண மூர்த்தி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், குமரிக்கண்டம் தொடர்பான ஆழ்கடல் அகழ்வாய்வு மேற்கொள்ள இந்திய அரசுக்கு உத்தரவு இட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தார். 


இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மறைந்த ஒரிஸா பாலு ஐயா அவர்களை amicus curiae அதாவது இந்த வழக்கில் "நீதிமன்றத்தின் நண்பன்" அல்லது "நீதிமன்ற உதவியாளர்" ஆக நியமித்தது. (ஒரு சட்ட வழக்கில் நேரடியாக சம்பந்தப்படாத, அதே சமயம் அந்த வழக்கிற்குத் தேவைப்படும் தகவல்களையும், நிபுணத்துவத்தையும், நுண்ணறிவையும் வழங்குபவருக்கே அமிகஸ் கியூரி என்று பெயர்).


ஒரிஸா பாலு ஐயா அவர்கள் தாம் மேற்கொண்ட குமரிக் கண்டம் தொடர்பான ஆய்வுகளை ஒரு அறிக்கையாகவும், ஆழ்கடலில் எடுத்த படங்கள், காணொலி'ஆகியவை மற்றும் இலக்கிய வரலாற்று ஆவணச் சான்றுகளையும் இணைத்து, இதுவரை குமரிக்கண்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் ஆகியவற்றையும் நீதிமன்றத்தில் விரிவான அளவில் சமர்ப்பித்திருந்தார். (ஒரிஸா பாலு ஐயா அவர்கள் ஆயிரம் புத்தகங்கள் எழுதி இருந்தலும், இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைக்கு ஈடாகாது அவை)


இந்த வழக்கு கடந்த ஐந்தாண்டுகளாக "சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்" நடைபெற்று வந்தது.


இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 2 ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. 


வழக்கை விசாரித்த நீதியரசர் டாக்டர். ஜி. ஜெயச்சந்திரன், "இந்த வழக்கு ஐந்து ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு இத்தனை ஆண்டுகள் நிலுவையில் இருப்பது சரியல்ல, தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் என்ன சொல்கிறீர்கள். நீங்கள் ஒரு முடிவுக்கு வரவில்லையெனில், பிறகு நீதிமன்றமே தமது அதிகாரத்தின் அடிப்படையில் உத்தரவு பிறப்பிற்கும்" என்று கூறினார்.


இதையடுத்து தமிழ்நாடு அரசு வழக்கறிஞரும், இந்திய அரசு மற்றும் இந்தியத் தொல்லியல் துறை வழக்கறிஞர்களும் மாறி மாறி பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் வகையிலேயே வாதிட்டுக் கொண்டிருந்தனர்.


இதையடுத்து ஒருகட்டத்தில் நீதியரசர் ஜெயச்சந்திரன், "உங்களுக்கு ஒரு மணி நேரம் தருகிறேன், தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் இரு தரப்புகளும் ஒரு ஒருமித்த முடிவுக்கு வாருங்கள். அல்லது இந்த நீதிமன்றம் தாமாக 

உத்தரவு பிறப்பிக்கும்" என்று அவகாசம் அளித்தார்.


ஒரு மணி நேரம் கழித்து இரு தரப்பையும் அழைத்து நீதியரசர் ஜெயச்சந்திரன் முடிவுகளைக் கேட்டார். இறுதியாக இந்தியத் தொல்லியல் துறை வழக்கறிஞர், "குமரிக் கண்டத்தை ஆழ்கடல் அகழ்வாய்வு செய்ய தமிழ்நாடு அரசு திட்ட முன்மொழிவு இதுவரை அளிக்கவில்லை. அவ்வாறு அளித்தால் இந்தியத் தொல்லியல் துறை அதைக் கருத்தில் கொண்டு முழு ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு தொல்லியல் துறைக்கும் தரும்" என்று உறுதி அளித்தார், இந்திய அரசின் வழக்கறிஞரும் இதையே கூறினார்.


இதையடுத்து, நீதியரசர் ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பில், "இந்த வழக்கு ஐந்தாண்டுகளாக நிலுவையில் உள்ளது. மறைந்த ஒரிஸா பாலு அவர்கள் மேற்கொண்ட விரிவான ஆய்வு மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் குமரிக்கண்டம் எனும் நிலப்பரப்பு கடலுக்குள் மூழ்கியது உறுதியாகிறது. அதை ஆழ்கடல் அகழ்வாய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இதற்கான திட்ட முன்மொழிவை இந்தியத் தொல்லியல் துறைக்கு அளிக்க வேண்டும், அந்த ஆய்வுகளை மேற்கொள்ள இந்தியத் தொல்லியல் துறையும், இந்திய அரசும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று ஆணையிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


தமிழர் வரலாற்றில் பெருந்திருப்பமான இத்தகைய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை, தீர்ப்பு வந்து ஒரு மாத காலம் ஆகியும் தமிழ்நாட்டின் பத்திரிகை ஊடகங்கள் ஒரு சிறு செய்திபோலக் கடந்து போய் விட்டன என்பதுதான் வருத்தம் மட்டுமல்ல அதிர்ச்சி தரும் நிகழ்வு.


இந்த ஆணைப்படி தமிழ்நாடு அரசும், இந்திய அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும் என்று நம்ப முடியாது என்றாலும் கூட இதனை நிறைவேற்ற வைக்கப் படிப்படியாக நாம் அழுத்தங்கள் கொடுக்க இது அத்திவாரமாக அமைத்துள்ளது. 


மேலும், "குமரிக்கண்டம் மூழ்கியது உண்மை, அதை அகழ்வாய்வு செய்யவேண்டியதும் அவசியம்" என தமிழ்நாட்டின் உயர்நீதிமன்றம், இந்தியாவின் உயர் நீதிமன்றங்களில் ஒன்று உத்தரவு பிறப்பிதிருப்பது ஒவ்வொரு தமிழரையும் தமிழரும் தலை நிமிரச் செய்த உத்தரவாகும்.


--வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், ஆசிரியர் : தமிழ் ஊடகம், நிறுவனர் : தமிழியல் நடுவம், 3/1/26. மின்னஞ்சல் : editor.tamiloodagam@gmail.com

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்