குடும்பனின் பார்வையில்

  சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் குறித்து-


ஊரேஅசந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு படை ஊருக்குள் இறங்குகிறது, கண்ணில் கண்டவர்களையெல்லாம் அடித்து துவைக்கிறது, சத்தம் கேட்டு காவக்கம்போடு ஓடிவரும் காவக்காரன் தடுக்க நினைக்கிறான், தாடியோடு காணப்பட்ட அந்த குதிரை #வீரர்கள் அவனையும் அடித்து போட்டுவிட்டு கொள்ளையடித்துவிட்டு செல்கிறார்கள். கலவரம் முடிந்த பிறகு காயங்களோடு காவக்காரனை தேடி வரும் அவன் மனைவி சடைச்சி அவன் அடிபட்டு கிடக்கும் அவனை பார்த்து கதறுகிறாள், காவக்காரன் இறந்து விடுகிறான், சடைச்சி அங்கிருந்து கிளம்பி ஒரு மலையில் தஞ்சம் அடைகிறாள், அங்கே அவளுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறக்கிறார்கள், அவர்கள் பிறகு அந்த மலை அடிவாரத்தில் வாழ ஆரம்பிக்கிறார்கள், அந்த மலை தான் அமண மலை, அடிவார ஊர் தான் தாதனூர். 


மேலே ஒரு மலையை பார்த்தோமே, அது உண்மையில் சமன மலை, அமண மலையாக தங்கிவிட்டது என்கிறார் எழுத்தாளர், அங்கே தீர்த்தங்கரர் சிலை இருப்பதை அதற்கு ஆதாரமாக சொல்கிறார். இந்த தீர்த்தங்கரரை சாட்சியாக வைத்து அதே காலத்தில் இன்னோர் சம்பவம் நடக்கிறது, ஆனை குந்தியிலிருந்து புறப்பட்ட கங்கா தேவியின் படை சரியான நேரம் பார்த்து இந்த #தீர்த்தங்கரர் முன்னிலையில் வைத்து அந்த தாடி கார குதிரை வீரர்களை கொல்கிறாள், இதற்கிடையே பல பக்கங்கள் வெறும் எழுத்துக்கலாள் நிரப்பி வைக்கப் பட்டிருக்கிறது. 


அதற்குள் தாதனூர் பெருத்துவிடுகிறது, சடைச்சியின் பிள்ளைகள் தேர்ந்த களவாணிகளாக வளர்கிறார்கள், தாதனூர் ஆண்கள் ஊரில் சாவது அபூர்வம் என்கிறார், இப்படியாக அங்கே ஒரு கள்ள நாடு உருவாகிறது. அவர்கள் "கஞ்சியை உறுதிபடுத்த காவலையும், காவலை உறுதிபடுத்த களவையும்" விதி செய்து கொள்கிறார்கள், அதாவது காவல் கேட்டு போகிறார்கள், தர மறுத்தால் இரவோடு இரவாக போய் கால்நடைகளை தூக்கி வந்துவிடுகிறார்கள், இப்போது காவல் தந்துதானே ஆகனும், இதை நான் சொல்லவில்லை, ஊர் பெரியாம்பளை கழுவன் சொல்வதாக ஆசிரியர் சொல்கிறார்.  


ஆமாம், அவர்கள் ஊர் தலைவர்களை ஊர் பெரியாம்பளை என்று அழைத்துக் கொள்கிறார்கள், இன்ன பிற பொது வியங்களுக்கு என ஒருவொரு வகையராவை நியமித்து வைத்திருக்கிறார்கள், படையெடுப்போ அல்லது காவல்துறையோ வந்தால் அவர்கள் தூரத்தில் வரும்போதே கவனித்து ஊரை அலார்ட் செய்ய வேண்டும், ஊரே ஓடி போய் மலையில் ஒழிந்துக்கொள்ளும், பிறகு இறங்கி வருவார்கள், இதற்கு ஒரு வகையரா, #கொம்பூதி வகையரா, கொம்பு ஊதி ஊரை அலார்ட் செய்வது அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. இப்படி பெண்களுக்கு காது வளர்க்க ஒரு வகையரா, ஆண்களுக்கு விருத்த சேதனம் செய்ய ஒரு வகையரா என்று அமைத்துக்கொண்டு வாழ்கிறார்கள் சடைச்சி மக்கள். 


இதற்கிடையே மதுரையில் பல்வேறு நாய்க்கர்கள் ஆண்டு மறைந்து போகிறார்கள், முதல்முறையாக விஸ்வநாத நாய்க்கன் படையெடுத்து வரும்போது இங்கே ஆளுமையான அரசு ஏதும் இல்லை என்று பதிவு செய்கிறார் ஆசிரியர், தமிழ் #மூவேந்தர்கள் பல்வேறு போர்களாலும் சகோதர யுத்தத்தாலும் பலம் குன்றியிருந்த காலத்தில் வந்ததாக சொல்கிறார், வந்தவன் விஸ்வநாத நாய்க்கன் என்று சொல்லும் ஆசிரியர் அப்போது மதுரையில் இருந்தது எந்த பாண்டியன் என்று பதிவு செய்யவில்லை, ஒரு கதையை போல சொல்லி செல்கிறார், ஆனால் அப்போது பாண்டியர்கள் பின்தங்கி தென்காசி பக்கம் நெலை பெற்றிருந்தார்கள் என்று சொல்கிறார். 


பல நாய்க்க மன்னர்கள் பெயர் வந்தாலும் ஓரளவு ஆளுமையாக விஸ்வநாத நாய்க்கனும், ராணி மங்கம்மாவுமே தெரிகிறார்கள், தமிழகத்தை பிறகு 72 பாளையங்களாக பிரித்து நிர்வாகம் செய்ய ஏற்பாடு செய்கிறார் அறியநாய #முதலி. இந்த அறிய நாய முதலி தான் நாய்க்கர் ஆட்சி வலுபெற சிலபல வேலைகளை செய்கிறார். இந்த 72 என்று எண் நாய்க்கர்களின் பூர்விகமான விஜயநகரத்தில் இருந்த பாளைய எண்ணிக்கை என்று பதிவு செய்கிறார் ஆசிரியர். 


ராணி மங்கம்மாவை பற்றி அழகாக பதிவு செய்திருக்கிறார், மங்கமாவின் காலம் நிர்வாகம் தெற்கே வரை பரவுகிறது, மக்களால் எளிதாக அணுக முடிந்த ஆட்சியாளராக இருந்திருக்கிறார், சாலை மற்றும் இருபுறமும் சத்திரங்கள், குடிநீர் வசதிகள் செய்தார் என்பதை பதிவு செய்திருக்கிறார். ஆனால் மங்கமாவின் இறுதி கொடுமை, வழியெங்கும் தண்ணீர் பந்தல் அமைத்த #மங்கம்மாள் சொந்த பேரனான் இரவு தூங்கும் போது சிறை பிடிக்கப்பட்டு தாகத்தாலே உயிரை விட்டிருக்கிறார், கொடுமை.


கிழக்கிந்திய #கம்பேனி இங்கே வியாபாரத்திற்கு வந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் செல்வாக்கு பெறுகிறார்கள், பிறகு #விக்டோரியா ஆட்சி வந்தவுடன் நாய்க்க மன்னர்கள் தோற்கடிக்கப்பட்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு ஆள விதிக்கப்படுகிறார்கள், பிறகு மொத்தமாக ஆங்கிலேயர்களே ஆளும் காலம் வருகிறது, இடையிடையே சின்ன சின்ன சண்டைகள் வருகிறது, அதை போர் என்று ஆசிரியர் சொல்கிறார். 


இடைப்பட்ட காலத்தில் தாதனூர் பெரியாம்பளை கழுவன் திருமலை நாய்க்கர் காலத்தில் ஒரு சம்பவம் செய்து மதுரை காட்டை காவலில் ஒரு பொறுப்பை வாங்குகிறார். திருமலை நாய்க்கர் ஒரு பெரிய கோட்டையை கட்டி இனி பயமில்லை, நிம்மதியாக தூங்கலாம் என நினைக்கும்போது அந்த கோட்டையில் கன்னம்போட்டு இறங்கி விடுகிறார் தாதனூர் கழுவன், பிறகு ஊர் பெரியாம்பளை அவரை #திருமலை நாய்க்கரிடம் ஒப்படைத்து கோட்டை காவலில் ஒரு பொறுப்பு வாங்குகிறார், இப்படியாக மதுரையை எட்டிப் பார்க்கிறது #தாதனூர். 


மன்னர்கள் மாறினாலும் அவர்களுக்கு ஏற்ப தாதனூரும் தன் காவல் பொறுப்பை தக்கவைத்துக் கொள்கிறது, பிறகு பிரிட்டீஸ் காரர்கள் வந்ததும் கோட்டைகள் தகர்க்கப்பட்டு நகரம் விரிவாக்கம் பெறுகிறது, ஆனால் தாதனூர் காரர்கள் அங்கேயும் காவல் பொறுப்பு எங்களுக்கு தான் என்று உரிமை கொண்டாடுகிறார்கள், இறுதியாக காவல்துறையின் துப்பாக்கிக்கு இரையாகும் கிடாயன் பெரியாம்பளை திருமல நாக்கர் கொடுத்த காவலை விட்டுதர முடியாது என்று பிரிட்டீஸ் போலீஸிடம் சவால் விட்டப்படி செத்து விழுகிறார், அந்து காட்சியின் வர்ணிப்பை சொல்லியே ஆக வேண்டும், ஒன்று ஆசிரியர் சு.வெங்கடேசன் அந்த காலத்தில் வாழ்ந்திருந்து அதை நேரில் பார்த்திருக்க வேண்டும் அல்லது காலப் பயணம் செய்து அதை கண்டு அப்போதே எழுதியிருக்க வேண்டும், தத்ரூபமான வர்ணிப்பு, எண்ணூறு பக்கங்கள் இருளை நிறைத்து எழுதி வைத்திருந்தாலும் அங்கே வெங்கடேசன் ஸ்கோர் செய்து விடுகிறார், #கெடாயன் எறியும் கல் காற்றில் எழுப்பிச் செலும் ஓசை வரை நம்மை அழைத்து சென்று விடுகிறார்.


போலிஸ் #கச்சேரி துவங்கப்படுவது முதல் சடைச்சி பிள்ளைகள் மீது குற்றப் பரம்பரை சட்டம் அமல் படுத்தப்படுவது வரை நிகழும் விசயங்கள் தான் இந்த புத்தகம், 810 பக்கத்தில் துவங்கி 975 ம் பக்கத்தில் அது முடிந்து போகிறது. மீதி எல்லாம் இருள் இருள் இருள் தான், களவையும் இருளையும், கள்ளர்களையும் இரவையும் என எல்லா இடத்திலும் நீக்கமற இருளை ஒரு ஊடகமாகவே மாற்றி வைத்திருக்கிறார், அது கொஞ்சம் வாசிக்கும்போது அயர்வை தந்தாலும் கள்ளர்களின் வாழ்க்கையை சொல்ல அதைவிட சிறந்த ஊடகம் வேறு ஏதுமில்லை என்பதை உணரும்போது புரிந்து கொள்ள முடிகிறது. 


பகலில் சம்சாரிகளும் வியாபாரிகளும் தங்கள் பிழைப்பை பார்ப்பது போல இரவில் ஒவ்வொரு கொத்தாக கிளம்பி களவுக்கு போவதையும், காவலுக்கு போவதையும் விவரிக்கும் போது இருள் அங்கே ஒரு ஊடகமாக தேவைபடுகிறது. முந்தயநாள் காவலுக்கு போகும் அதே கொத்து #காவக்கூலி தேராவிட்டால் மறுநாள் களவு கொத்தை அங்கே அனுப்பி வைக்கிறது, பிறகு துப்பு கூலி வாங்கி காவலை ஏற்க செய்கிறது, துப்பு கூலி வாங்கிக்கொண்டு பொருளை சேர்க்கும் போது அங்கே காவலும் உறுதி செய்யப்படுகிறது, அங்கே காவலுக்கும் களவுக்கும் இடையே உள்ள உறவு அழகாக விளக்கப் படுகிறது. 


காவலுக்கு போகிறவன் முன்னங்கால் ஊன்றியும் களவுக்கு போகிறவன் பின்னங்கால் ஊன்றியும் நடக்க வேண்டும் என்று மாயாண்டி பெரியாம்பளை சொல்வதாக ஒரு இடம் வரும், பின்னக்கால் அதாவது குத்துக்கால் ஊன்றி நடக்கும் போது சத்தம் வராது, இது #தொழில் ரகசியம் என்று அவர் களவுக்கு போகும் கொத்துக்களிடம் சொல்லுமிடம் ஆசிரியரின் உழைப்பை காட்டுகிறது, இதையே மாயாண்டி காலத்திற்கு பிறகு மதுரைக்கு காவலுக்கு வரும் வீரண்ணன் பெரியாம்பளையும் இப்படி சொல்லுவார், "விரட்டுறவனுக்கு பின்னங்கால் தரையில் ஊண்ட கூடாது, ஓடுறவனுக்கு முன்னங்கால் கூட தரையில் ஊண்ட கூடாது, அப்படி ஓடினால் தான் தப்பி பிழைக்க முடியும், ஆனால் #முழுபாதமும் இந்த மதுரை மண்ணில் அழுந்த நடந்து போறதும் ஒரு ஆசை தான்டா" என்னும்போது அவர் குரலில் தெரியும் ஏக்கத்தை அதை வாசிக்கும் நம் காதுகள் கேட்கும், அருமையான எழுத்து ஆளுமை. 


எழுத நிறைய இருக்கிறது ஆனால் நீண்டுகொண்டே போகும் என்பதால் சில விசயங்களை மட்டும் பதிவு செய்து முடித்து விடுகிறேன். உண்மையில் இந்த கள்ளர்களின் வாழ்வியலை புரிந்துகொள்ள நினைத்து தான் வாசிக்க ஆரம்பித்தேன், களவை ஒரு #இனம் எப்படி தொழிலாக கொள்ள முடியும், ஒரு இனத்தையே எப்படி ஒரு சட்டம் #குற்றப்பரம்பரை என்று சொல்ல முடியும் என்பதாகத்தான் என் தேடல் இருந்தது, சடைச்சியின் பிள்ளைகள் எதற்காக என்று தெரியவில்லை அவர்கள் இயல்பாக திருடுகிறார்கள் என்று தான் முடித்திருக்கிறார் ஆசிரியர்.


ஒரு கட்டத்தில் தாதனூர் காரர்களின் காவக்கூலி அல்லது களவு என்கிற அடாவடியால் எரிச்சலடையும் மதுரை மக்கள் இனி காவல் கூலி கொடுப்பதில்லை என்று கலப்பையில் அடித்து சத்தியம் செய்கிறார்கள் என்கிறார், ஆனால் அவர்கள் எந்த மக்கள் என்று பதிவு செய்யவில்லை, #கலப்பையை தெய்வமாக கருதுகிறவர்கள் யாராக இருப்பார்கள்? ஆசிரியர் இது போன்ற சில்லரை தனங்களை தவிர்த்திருக்கலாம் அல்லது தனது திராவிட #கம்யூனிஸ்ட் தனங்கலயாவது தவிர்த்திருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.


முல்லை பெரியாற்று நீர் வைகையை நோக்கி திருப்பப்பட்ட பிறகு களவை ஓரளவு கைவிட்டிருக்கும் #மேலூர் கள்ளர்களை பதிவு செய்யும் ஆசிரியர் அப்போதும் தாதனூர் கள்ளர்கள் இரவில் நெல் கசக்க கொத்து கொத்தாக கிளம்பி சென்றார்கள் என்று பதிவு செய்கிறார், இந்த நேரத்தில் #பென்னிகுக் அவர்களுக்கு நன்றி சொல்ல நினைக்கிறேன், அவர் மட்டும் மெனக்கிட்டு பெரியாறு அணையை கட்டியெழுப்பாதிருந்தால் கள்ள நாட்டு பசிக்கு தமிழகமே தாக்கு பிடித்திருந்திருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. வருடம் முழுவதும் வெள்ளாமை செய்து வைத்திருப்பவனின் மகசூலை அறுவடை காலத்தில் மட்டும் உயிரை பணயம் வைத்து களவு செய்துவர சடச்சியின் பிள்ளைகள் தயங்கவில்லை என்று சொல்கிறார் ஆசிரியர், சடைச்சியின் பிள்ளைகள் பக்கம் நின்று வாதாடும் ஆசிரியரே அதை சொல்லும்போது தான் அவர்களின் பசிக்கு தமிழகம் தாங்குமா என்று நமக்கு பகீர் கிளப்புகிறது. 


குற்றப் பரம்பரை சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அந்த மக்கள் படும் துயரம் குறித்து கவலை படும் ஆசிரியர் அதில் உள்ள #கைரேகை பதிவு, ஒவ்வொரு இரவும் மூன்று முறை #விசில் ஊதி கணக்கெடுப்பது, #கடவு சீட்டு முறை, ஒருமுறை விசிலுக்கு ஊர் ஆஜர் ஆகாததால் அவர்கள் எதிர்கொண்ட கொடுமை, கொண்டி கட்டை, சவுக்கடி என அனைத்தையும் சொல்லி "அவன் இருளில் வாழ அனுமதிக்கப்படாமல், பகலில் வாழ முடியாமல் துடிதுடித்துக் கிடக்கிறான்" என்று ஆதங்கப்படுகிறார். 


சடைச்சி மக்களின் இரவு வாழ்க்கையை பதிவு செய்யும் ஆசிரியர் அவர்களின் பகல் பொழுதை இப்படி பதிவு செய்கிறார், ஊரே கூடி நின்று கல் எறிய பயிற்சி செய்வதும், செம்மரி ஆட்டை ஓட விட்டு அதை பிடித்து பயிற்சி செய்வதும், ஓடிவந்து கற்றாழையை தாண்டி தேர்வு பெறுவதும் என அவர்கள் நாள் நகரும் என்கிறார், #கன்னக்கோல், #மொண்டிகட்டை, #நிலையாள், கொத்து கூலி, ஊர் நல்ல நாள் என்று எல்லாம் கள்ளர்களின் வாழ்வியலை ஆழமாக பதிவு செய்யும் ஆசிரியர் அவர்கள் கொண்டாடும் திருவிழா என்றோ பொதுவான திருவிழா என்றோ எதையும் பதிவு செய்யவில்லை. திருப்பரம் குன்றம் தேர் திருவிழாவில் தேர் இழுக்கபெற்று #பனைமரக்காடு பக்கம் வரும்போது ஒரு முதல் மரியாதை தரப்படுவதாகவும் அதுவும் அந்த வகையராவின் கடேசி வாரிசு தத்துக் கூனனோடு முடிந்து போயிற்று என்கிறார். திருட சென்ற இடத்தில் விட்டி பெரியாம்பளையின் தீரத்தை கண்டு அந்த வீட்டு குஸ்தி நாய்க்கர் அதை வழி வழியாக தர வாக்கு கொடுத்ததாக பதிவு செய்கிறார், அரிய #தகவல். 


நாகமலை அடிவாரத்தில் சரளை கற்களை அள்ளி இடுப்பில் கட்டிக்கொண்டு களவுக்கு தயாராகும் கொத்திடம் "#தூக்கம் வரவன் காவலுக்கு போகக் கூடாது, #தும்மல் வரவன் களவுக்கு போகக் கூடாது" என்று ஊர் பெரியாம்பளை சொல்லும் இடம் எவ்வளவு இரவானாலும் நாமும் அவர்களின் களவு கொத்தோடு பயணித்து அவர்களின் களவு அழகை கண்டுணர்வதாகவே எண்ண வைக்கிறது, இந்த கற்களை கொண்டு தானே தோட்டாவுக்கு போட்டியாக களவை தடுக்க வருகிறவர்கள் மீது எறிகிறார்கள் என்று நினைக்கும்போது நிதானத்திற்கு வந்து நாம் கதையிலிருந்து நாசூக்காய் வெளியேற வேண்டி இருக்கிறது, ஆசிரியரின் எழுத்து ஆளுமைக்கு சான்று.


இறுதியாக குற்றப்பரம்பரை சட்டம் அமல்படுத்தப்பட்டு ஊரே அதற்கு பயந்து ஆஜராகும்போது கழுவன் பெரியாம்பளை "களவுங்கிறது வீரத்தனம் இல்லடா, அது கெட்டிக்கார தனம், அந்த களவு எல்லாம் இப்படி கதையா போச்சேடா" என்று கலங்கும்போது பொட்டலாய் கிடக்கும் சடைச்சியும் தன் பிள்ளைகளின் நிலையை எண்ணி கலங்கி தான் போயிருப்பாள், அருமையான #நாவல், சற்றே நீளம் என்றாலும் வாசிக்கலாம். - #ஆதி

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்