குடும்பர்களின் தொல்லியலில்
கி.பி. 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குடும்பர்கள் செப்பேடு கண்டுபிடிப்பு.
------------------------------
திருச்செந்தூர் கோயில் விலைக்கிரயப் பட்டயம்.
----------------------+------
கி.பி. 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்புப் பட்டயம் ஒன்று கண்டறியப் பட்டுள்ளது.இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் ஆதிநாதபுரத்தைச் சேர்ந்த கைலாசக் குடும்பர் என்பவர் அவரது முன்னோர்கள் பாதுகாத்து வைத்திருந்த செப்புப்பட்டயம் ஒன்றை படித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.பட்டயத்தை ஆய்வு செய்ததில் அது கி.பி.18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் அன்றைய திருச்செந்தூர் கோயில் நிலம், தென்இருகரை நாட்டுக் குடும்பர்களுக்கு விலைக் கிரையம் செய்து கொடுக்கப் பட்டது என்பதும் தெரிய வருகிறது.
இந்தச் செப்பேடு 28.7×17.5 செ.மீ அளவில் 352 கிராம் எடையுடன் உள்ளது.செப்பேட்டின் இருபுறமும் 61 வரிகளில் இந்தச் சாசனம் எழுதப்பட்டுள்ளது.
கடவுள் துணை என்று தொடங்கும் செப்பேட்டில் சாலிவாகன ஆண்டாக 1660, கொல்லம் ஆண்டாக 914, தமிழ் ஆண்டாக காளயுக்தி குறிப்பிடப் படுகிறது.ஆவணி 17 ஆம் தேதி பௌர்ணமி நாளில் எழுதப்பட்ட இச்செப்பேட்டில் உள்ள பிற பஞ்சாங்க காலக்குறிப்புகளின் அடிப்படையில் பட்டயம் 29-08-1738 அன்று எழுதப்பட்டது உறுதியாகிறது.
அன்றைய திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகத்தாரான தலத்தார், தானத்தார்,நாட்டுக்கணக்கு ஆகிய பிள்ளை, நம்பியார், பண்டாரம், செட்டியார்,கரையாளர் என வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்த 12 பேர் , திருச்செந்தூர் முருகன் கோயில் நிலத்தை தென்இருகரை நாட்டுக் குடும்பர்கள் 9 பேர்களுக்கு விலைக் கிரையம் செய்து கொடுத்தனர்.
இந்தக் கோயில் நிலத்துக்கு 19 பொன்னும் ஒரு பணமும் விலை நிர்ணயம் செய்து அதை அவர்களிடம் இருந்து ரொக்கமாகப் பெற்றுக் கொண்டு குடும்பர்களுக்கு தாமிர சாசனப் பட்டயம் எழுதிக் கொடுத்தனர்.
சாசனத்தை எழுதிய 12 கோயில் நிர்வாக அதிகாரிகள், நிலத்தைப் பெற்றுக் கொண்ட 9 குடும்பர்கள் சாசனத்தில் கைஎழுத்திட்ட 11 பேர், சாசனத்துக்கு சாட்சிகள் 5 பேர் என அனைவரின் பெயர்களும் அவர்களின் சாதிப்பெயர்களுடன் சாசனத்தில் இடம் பெற்றுள்ளது.இது 18 ஆம் நூற்றாண்டில் தமிழ் சமூகத்தில் நிலவிய சாதிக் கட்டமைப்பை உணர்த்துகிறது.சாசனம் செய்த கோயில் அதிகாரிகள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த நிலையில் நிலத்தை வாங்கிய 9 பேர்களும் குடும்பர்களாகவே இருந்துள்ளனர் என்பது பல சமுக ஆய்வுகளுக்கு வழி வகுக்கும்.
குடும்பர்களுக்கு விலைக்கிரையம் செய்யப்பட்ட நிலத்தின் 4 எல்லைகளை செப்பேடு விரிவாகக் கூறுகிறது.
பட்டயத்தை ஆய்வு செய்யக் கொடுத்த கைலாசக் குடும்பர், பட்டயத்தில் முதலில் குறிப்பிடப்படும் தென்கரை காட்டுப் பச்சேரி சித்திரபுத்திரக்குடும்பன் மகன் மாடக் குடும்பன் வழி வந்தவர் தான்தான் என்று நிரூபிக்க தம்மிடம் பிற ஆவணங்கள் உள்ளதாகத் தெரிவிக்கிறார்.
செப்பேடு திருச்செந்தூர் முருகனை இளைய நயினார் என்றும், முருகன் கோயில் நிலத்தை திருவிளையாட்டம் என்றும், திருச்செந்தூரை மாகாளி சதுர்வேத மங்கலம் என்றும் குறிப்பிடுகிறது.
இந்தச் செப்பேடு சந்திர கிரகணம் நிகழ்ந்த பௌர்ணமி அன்று எழுதப்பட்டுள்ளது. தற்காலத்தில் கிரகண நாள் என்பது தீட்டாகக் கருதப்படுகிறது.ஆனால் பண்டைய கல்வெட்டுகள் கிரகண நாட்களை புண்ணிய காலம் என்று கூறுகின்றன.
பொதுவாக கிரகண நாட்களில் கொடைஅளிப்பது/கொடைபெறுவது பல மடங்கு புண்ணியம் தரும் என்பது பண்டைய தமிழர்களின் நம்பிக்கையாக இருந்துள்ளது. அதன் அடிப்படையில் சந்திர கிரகணம் நடக்கப் போவதை முன் கூட்டியே அறிந்து இந்த நாளைத் தேர்ந்தெடுத்து, நாள்குறித்து எழுதியதன் மூலம் பழந்தமிழர்கள் பெற்றிருந்த வானியல் அறிவையும் அவர்களின் நிபுணத்துவத்தையும் இச்செப்பேட்டின்வாயிலாக உணர முடிகிறது .இவ்வாறு தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்தார்.
Comments
Post a Comment