குடும்பனின் மறு வாசிப்பில்

 கால்டுவெல்லின் 10 பெரும் பிழைகள்.


3000 ஆண்டு கல்வி மரபை வரலாற்றில் கொண்டுள்ள தமிழுக்கும் தமிழர்க்கும் இலண்டன் பாதிரியார் கால்டுவெல்லின் புனைவு நூல் அதிகாரமாகிவிட முடியாது. தமிழ் நூல்களைப் படிக்காமலேயே கால்டுவெல் புனைந்தெழுதிய நூல் ஒப்பிலக்கணம். 


இனி: கால்டுவெல்லின் பிழைகள்.


1) "தமிழ்" என்பதன்  நேர் வடசொல் "திராவிடம்". "திராவிடம்" என்ற வடசொல்லின் திரிவுதான் தமிழ்.


இப்படிச் சொல்லி, ஆராய்ச்சி செய்யாமல் கால்டுவெல்  திராவிடம் என்ற மொழிக்குடும்பத்தை உருவாக்கி, தமிழை அதற்குள் திணித்து, தமிழுக்கும் மூத்த முந்து மொழி, அதாவது Proto-Dravidian  மொழி உண்டு எனறு கதை கட்டி விட்டார். அதை நம்பி, தமிழுக்கு எதிரானவரும், திராவிடரும், எங்கேயாவது புரோட்டோ-திராவிடிய ஆதாரம் கிடைக்குமா என்று அலைந்து வருகிறார். 


தமிழிய மொழிக் குடும்பம் என்று தென்னிந்திய மொழிகளை வகைப்பாடு செய்திருந்த தமிழ்ப் புலவர்,  ஆங்கிலேயர் எல்லீசு உள்ளிட்ட ஆய்வாளர்களைப் புறந்தள்ளி, ஆதாரமில்லாமல் திராவிட மொழிக்குடும்பம், அதற்கு முந்து மொழி உண்டு என்று சொல்ல வேண்டிய தேவை என்ன? 


2) தான் கட்டிவிட்ட பொய்யை மெய்யாக்க அவர் சொன்ன சொற்கள் கொடுமையானவை.


"இந்திய நாட்டின் தென்பகுதியில் வசிக்கும் ஒரு மக்கள் பகுதியினர், தங்களையே குறிப்பதற்குக்கூடத் தமிழ்மொழியை ஒழித்து வடமொழியாகிய திராவிடம் என்ற சொல்லைக் கையாண்டிருப்பர்" என்று சொல்வது பிழைபோலத் தோன்றினாலும் உண்மை அதுதான் என்று உரக்கப் பொய் சொன்னவர் கால்டுவெல். 


தமிழ்மொழியைத் திராவிடம் என்று அழைத்ததேயில்லை என்று தமிழ்ப்புலவர்கள் அன்றே எதிர்த்திருக்கின்றனர். 19ஆம் நூற்றாண்டின் இந்தப் பொய்தான் ஈ.வெ.இராமசாமி நாயக்கருக்கு 20 ஆம் நூற்றாண்டில் திராவிட அரசியலை ஆரம்பிக்கத் துணை போனது.


3) மகாவமிசத்தில் உள்ள பாலியில் "திரமிளம்" என்பது  "தமிளோ" என்று திரியும். ஆகவே "தமிளோ" தான் தமிழ் எனத் திரிந்தது என்று புனைகிறார் கால்டுவெல்.


பொ.பி 3, 4 ஆம் நூற்றாண்டு என சொல்லப்படும் மகாவமிசத்தில் தமிழின் திரிவைத் தேடி அலைகிறார் கால்டுவெல். காரணம் அதற்கு மேல் அவர் படிக்கவில்லை.


4) "ஈழத்தமிழர் 2000 ஆண்டுமுன் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தில் குடியேறியவர்" என்ற கால்டுவெல்லின் கூற்று படுபாதகமானது.


 பிரித்தானியரான கால்டுவெல்லின் வரலாற்று அறிவே இல்லாத புனைந்துவிட்ட பொய், பிரித்தானிய அரசு, விடுதலையின் போது,  இலங்கையைச் சிங்களரிடம் ஒப்படைக்க வழிவகுத்தது எனலாம்.


மண்ணின் மைந்தரை வந்தேறி  எனவும், வந்தேறிகளை மண்ணின் மைந்தர் எனவும் கால்டுவெல் எழுதிய தலைகீழ்ப் புரட்டு  தமிழினப் படுகொலை செய்ய சிங்களருக்கு  ஊக்கமாக அமைந்தது என்று சொன்னால் மிகையல்ல.


5) "கி.பி 9 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாக யாதொரு தமிழ் நூலும்  எழுதப் பட்டிருக்கக் கூடும் என்று சொல்வதற்கில்லை." என்று கால்டுவெல் சொல்கிறார்.  ஆகையால் நுனிப்புல் மேய்வது போல சில ஆங்கில நூல்களைப் படித்துவிட்டு தனது தமிழுக்கு எதிரான குறிக்கோள்களைப் புனைவதிலேயே காலந் தள்ளி இருக்கிறார் என்பது தெளிவு.


6) "பாண்டியன், சோழன், சேரன் மூன்றுமே வடமொழிச் சொற்கள்; மாபாரத பாண்டுவின் பெயரால் வந்ததே பாண்டியன், பாண்டி என்ற சொற்கள்." என்பது கால்டுவெல்லின் அரிய கண்டுபிடிப்பு. தமிழ்நாட்டின் மழலைகளும் நகைக்கக் கூடிய  சொல்லாய்வைத்தான் திராவிடர் தலைமேல் சுமக்கிறார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?


மதுரையும் குமரியும் வடசொற்களே என்ற கொசுறையும் தருகிறார் பாதிரியார். 


7)  ஆரியர் பற்றி கால்டுவெல்:


"இந்தியப் பழங்குடிகளைவிட உடல்வலியிலும் அறிவு வன்மையிலும் ஆரியர்கள் உயர்வுடையவர்களாகவே இருந்தனர். இந்தியாவிற்குள் வருமுன்னரே சொல்வளமிக்கதொரு மொழியை உடையவராயிருந்தனர். அவர்கள் இந்தியரிடம் ஏற்றதைவிட ஈந்ததே அதிகம்."


வந்தேறிகளை வானாளாவ வரலாற்றில்  புகழ்ந்து உள்ளூர்க்குடியைத் தாழ்த்தி வைக்கும் மலிவான அரசியலைத்தான் கால்டுவெல் செய்திருக்கிறார்.


8)  திராவிடர்கள் கால்டுவெல் மேல் புளகாங்கிதம் அடைய ஒரு காரணத்தைச் சொல்வர். திராவிட மொழிகள் இந்தோ-ஈரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை அல்ல என்று கால்டுவெல் சொல்லியிருப்பதைப் பாராட்டுவர்.  


ஆனால், இந்தோ-ஈரோப்பியன் இல்லைன்னு சொன்னவர், சித்திய (scythian) மொழிக் குடும்பத்தோடு ஒத்தது என்று கூறுகிறார். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் ஆராய்ச்சியும் இல்லை. Finnish, Turkey, Mangolia, Tungoose ஆகிய மொழிகள் சித்திய மொழிக்குடும்பத்தில் உள்ள மொழிகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.


கால்டுவெல்லின் ஊகத்தின் படி தமிழ், மங்கோலிய, பின்லாந்து மொழிகளோடு தொடர்பு கொண்டதாகும்.  திராவிடர்கள் சித்தியத்தைப் பற்றி வாய் திறக்க மாட்டார்கள்.  


9) திராவிடர்கள்  கால்டுவெல்லை  குலதெய்வமாகக் கும்பிட முக்கிய காரணம் மொழிக்குடும்பம் என்பதல்ல. திராவிடர்களும் ஆரியர்களைப்போல நடு ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்த வந்தேறிகள்தான் என்று கால்டுவெல் சொன்னது திராவிடர்களுக்குத் தேனாய் இனிக்கிறது. அதுவும் ஆரியருக்கு முன்னாடியே வந்தேறியவர் என்பதில் கூடுதல் இனிப்பு.


அது தமிழர்களுடைய பிரச்சினை இல்லை. திராவிடர் வந்தேறிகள் என்பது அவர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டது. ஆனால் பாலகிருட்டிணன் போன்றவர் தமிழர்களையும் திராவிடத்திற்குள் திணித்து, சிந்துவெளியில் இருந்து தெற்கே வந்தவர் தமிழர் என்று தமிழ்க்குடியை வந்தேறிக்குடி ஆக்கப் பார்க்கிறார்.


திராவிடரும் கைபர், போலன் கணவாய் வழியே வந்தவர் என்றால் தமிழர் ஏன் கண்டுகொள்ள வேண்டும்?


திராவிடர் வந்தேறிகள் என்றுதான் தமிழரும் சொல்கிறார். திராவிடர் நடு  ஆசியாவிலிருந்து இந்தியா வந்து  பலுசித்தானத்தில் கொஞ்ச பேரை இருத்திவைத்துவிட்டு தெற்கே வந்தனர் என்பது கால்டுவெல்லின் முடிவு.


 திராவிடருக்கு  இது  பெருமை என்றால் எப்படியோ போங்கள். ஆனால், தமிழரைச் சிந்துவெளியில் இருந்து வந்தவர் என்று சொல்லும் பாலகிருட்டிணனின் செயல், கைதேர்ந்த திருடனின்  செயலாகும் என்பதைத் தமிழர் உணர்ந்து கொள்ள வேண்டும்.


10) கால்டுவெல்லின் கல்வித்தகுதி: 


பத்தாண்டு பள்ளிக் கல்வியை அயர்லாந்து, காட்லாந்தில் படித்தார். பின்பு 4 ஆண்டு ஓவியம் பயின்றார். பின்னர் இலண்டன் சமயத் தொண்டுக் கழகத்தில் சேர்ந்துவிட்டார். அங்கே  3 ஆண்டு சமயப் பயிற்சி. பின்னர் 1938 இல் சென்னை வந்தார். 


1838-41 ற்கு இடையேயான சுமார் மூன்று ஆண்டுகளில்  சென்னையில் ஏற்கனவே இங்கு வந்திருந்த ஆங்கிலப்  பாதிரியாரான  TRUE என்பாரிடமிருந்து தமது சமயப் பணிக்கான பயிற்சி எடுக்கிறார். 


நன்கு கவனியுங்கள்; ஒரு மூத்த பாதிரியார், இளைய பாதிரியாருக்கு, இந்த ஊரின் தன்மை, கிறித்துவம் பரப்புவதில் கையாளவேண்டிய முறைகள், கவனமாக இருக்க வேண்டிய ஆள்கள், உள்ளூர் அரசியல், மக்களின் குணநலன், அவர்களிடம் உரையாடத் தேவையான தமிழ் - இதைத்தான் சொல்லிக் கொடுத்தார் பாதிரியார் True.


மதம் பரப்ப வந்த இளையருக்கு மூத்த தலைமைப் பாதிரியார் கற்றுத்தர வேண்டிய மதநலன் விதயங்களுக்குத் தேவையான தமிழைக் கற்றுத் தந்தார். இதுதான் கால்டுவெல்லுக்குக் கிடைத்த அடிப்படைத் தமிழ்ப் பயிற்சி


இதன்பின் 1843 இல் நெல்லை இடையன்குடியில் தமது சமயப் பணிகளைத் துவங்கினார் கால்டுவெல்.


அவரின் பெர்பெற்ற பணிகள் மூன்று:


அ) திருநெல்வேலிக் கோட்டத்தில் 6000 ஆக இருந்த கிறித்துவ மதமாற்றத்தை 1 இலச்சமாக ஆக்கினார். அன்றைய மக்கள் தொகைக்கு இந்த எண்ணிக்கை மிகமிகப்பெரிய சாதனை.


ஆ) எழில்வாய்ந்த தேவாலயத்தைப் பல ஆண்டுகள் உழைத்து இடையன்குடியில் கட்டினார். 


இ) 1856 இல் ஒப்பிலக்கணம் என்ற நூலை  எழுதி வெளியிட்டார்.


இதில்தான் நமக்குக் கொஞ்சம் கவலை உண்டு. பெயருக்குப் பின்னால் பட்டங்களைப் போட்டுக் கொள்வதையை கல்வித் தகுதி என்று கருதுபவன் நானல்ல. அது இழுக்கு.


ஆனால், தமிழாராய்ச்சி,  தென்னிந்திய மொழிகளின் இலக்கண ஒப்புமையை எழுதப் போனவர், ஏதாவது ஒரு தமிழ் நூலைக் கற்றிருந்தாரா? ஏதாவது ஒரு தமிழ் நூலையேனும் தமது ஒப்பிலக்கண நூலில் மேற்கோள் காட்டியிருக்கிறாரா?


இலக்கண ஒப்பாய்வு என்பது 19 ஆம் நூற்றாண்டின் மொழியியல் பிரிவுகளில் ஒன்று. இலக்கணக் கட்டமைப்புகளை அலசுவது அதன் வேலை. 


கால்டுவெல் தொல்காப்பியத்தைப் படித்து மற்ற மொழிகளின் இலக்கணத்தோடு ஒப்பீடு செய்தாரா? அதற்கான சான்றை யாரும் குறிபபிட முடியுமா?


வெறுமே,  ஒருமை, பன்மை, காலம், தன்மை, முன்னிலை, படர்க்கையை வைத்து ஒப்பாய்வு என்று பீற்றிவிடலாமா?


கால்டுவெல் ஒப்பாய்வு செய்தபோது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளுக்குமே இலக்கண நூல்கள் இருந்தன. எதையுமே கால்டுவெல் படித்த சான்று அவர் யாத்த நூலில் இல்லை. வேறெந்த தமிழ்நூல்களையும் அவர் மேற்கோள் காட்டவில்லை. வேறெந்த தமிழ்ப் புலவரையும் மேற்கோள் காட்டவில்லை. தமிழ்ப் புலவர்கள் தமது கருத்துகளை அன்றே எதிர்த்தனர் என்று சொல்லும் கால்டுவெல் அப்புலவர் யாரென்று சொல்லவில்லை. 


மாறாக, அவர் படித்ததெல்லாம் அவருக்கு முன்னால் வந்த ஐரோப்பியரின் ஆங்கில நூல்கள் மட்டும்தான். போப்பு, பர்னெல், எல்லீசு, குண்டெர்ட்டு, எட்கின்சு, தாமசு, மெகத்தனீசு போன்றோரைத்தான். அரிதாக குமரில பட்டர் போன்ற ஓரிரிருவரைக் காணமுடியும். அவ்வளவுதான்.


ஆங்கிலத்தைத் தவிர, பிறமொழிகளில் அவருக்கிருந்திருக்க வேண்டிய புலமைக்கு, அவரின் நூலில் எத்தச் சான்றும் இல்லை.


தனக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு வந்த ஐரோப்பியர் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்த ஆவணங்களை, நூல்களை மட்டும் படித்து, அவற்றின் மேல் தமது ஊகங்களையும் வண்ணனையும் ஆங்கிலத்தில் எழுதிய கால்டுவெலின் நூலை மாபெரும் நூல் என்று கருத முடியுமா?


ஆகையால், "ஒப்பிலக்கணக் கால்டுவெல் கல்வித் தகுதி அற்றவர் அல்லது போதாதவர்" என்று துணிந்து கூறமுடிகிறது.


கால்டுவெல்லைத் தலையில் தூக்கிச் சுமப்பவர்களிடம் இருந்து தமிழர்கள் தள்ளி நிற்க வேண்டும் என்பதோடு, கால்டுவெல்லின் பல பொய்ப் புனைவுகளுக்குக் குறிக்கோள்  என்ன? அவருக்கு அந்நாளில் பின்புலமாயிருந்தவர் யார் என்பதை அறிய வேண்டும். 


அற்றைய பிரித்தானிய அரசியலில் வேறு எதையோ சாதிக்க, தமிழரைக் குழப்பி விட்டவர் கால்டுவெல். அவரின் தமிழ், ஈழம் பற்றிய கருத்துகள் இதைத்தான் சொல்கின்றன.


அன்புடன்

நாக.இளங்கோவன்

12/3/24


#கால்டுவெல்  #நாக_இளங்கோவன் 

#கால்டுவெல்லின்_10_பிழைகள்

Comments

Popular posts from this blog

குடும்பனின் வரலாற்று புரிதல்

திருநெல்வேலி இரயில் நிலைய நிலைய மேம்பாட்டு பணிகள்

திருநெல்வேலி யின் இலக்கியத்தில்